விளையாட்டு வீரர்களை போல்.. 'இந்தியா'வுக்கு வெற்றியை தேடி தர நாங்களும் பாடுபடுகிறோம்! -ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விளையாட்டு வீரர்களை போல் இந்தியாவின் வெற்றிக்காக நாங்களும் பாடுபடுகிறோம் எனப் பேசி இந்தியா கூட்டணி குறித்து சுட்டிக்காட்டியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற "முதலமைச்சர் கோப்பை - 2023" மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஆற்றிய உரை வருமாறு;

''முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டக் கூடிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கக்கூடிய இந்த துறையின் அமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

Chief Minister Stalin says, we are also striving for I.N.D.I.A. success like sports players

விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறாரே என்று வளர்ந்த பிள்ளையைப் பார்த்து சில பெற்றோர் நினைப்பதுண்டு. விளையாட்டுத் துறைக்கு அமைச்சராக நம் பிள்ளை சிறப்பாக செயல்படுகிறார் என்று பெற்றவனை மகிழ வைக்கக்கூடியவராக உதயநிதி இருக்கிறார்.

விளையாட்டைப் பார்ப்பவர்களுக்குக் களிப்பாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளை நடத்துபவர்களும், அந்தப் போட்டிகளில் விளையாடுபவர்களும் பொறுப்பாக இருக்க வேண்டும்.

இந்த நிகழ்வை மிகப் பொறுப்பாக நடத்தியிருக்கும் விளையாட்டு துறை செயலருக்கும், உறுப்பினர் செயலர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த நேரு உள்விளையாட்டு அரங்கைப் பார்க்கும்போது, என் நினைவுகள் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்குச் செல்கிறது.

இதே நேரு உள்விளையாட்டு அரங்கில்தான் கடந்த ஆண்டு அதன் தொடக்க நிகழ்ச்சியும் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நீங்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். மற்ற விளையாட்டுப் போட்டிகளின்போது நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள் போல் இல்லாமல், நமது தமிழ்நாட்டின், இந்திய நாட்டின் வரலாற்றை நமது மண்ணுக்கு விருந்தினர்களாக வந்த வெளிநாட்டு வீரர்களுக்குக் கலைநிகழ்ச்சிகள் மூலமாக நாம் அறிமுகப்படுத்தினோம்.

அதனால் நமக்குக் கிடைத்த பாராட்டு என்பது, நமது அரசுக்கு மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்கே சொந்தமானது! அத்தகைய பெருமையைத் தேடித் தந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போதுதான் 'முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்' என்று நான் அறிவித்தேன். 15 விதமான விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என ஐந்து பிரிவுகளின்கீழ் நடத்தப்படும் என்று நான் அறிவிப்பு செய்தேன்.

அந்த அறிவிப்பை மிக வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களை நான் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். கடந்த மே 8-ஆம் நாள் முதலமைச்சர் கோப்பைகள் போட்டிக்கான 'வீரன்' சின்னத்தையும் அதற்கான பாடலையும் நான் வெளியிட்டேன். ஜூன்
30-ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்த போட்டிகள், இன்று நிறைவு விழா காண்கிறது.

உதயநிதி அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையே புத்துணர்வு பெற்றுள்ளது.

நான் 2006-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களுடைய அமைச்சரவையில் இடம் பெற்றபோது, பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டது, இதே நேரு விளையாட்டு அரங்கத்தில் தான்!

எனவே, இங்குள்ள விளையாட்டு வீரர்களைப் போல எனக்கும் நேரு விளையாட்டு அரங்கம் சிறப்பான வாய்ப்பைக் கொடுத்தது. அப்போது நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தேன். "அந்தத் துறையை நான் நிர்வகிப்பதைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது" என்று அப்போது முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள்;

அதாவது, ஏராளமான திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதை பாராட்டும் வகையில் இப்படி உயர்வாகச் சொன்னார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அந்த வகையில் இப்போது எனக்கு விளையாட்டுத் துறையின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது!

நாள்தோறும் ஏராளமான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. எப்போது பார்த்தாலும் விளையாட்டு வீரர்களுடன் அமைச்சர் உதயநிதி அவர்கள் இருக்கிறார். விளையாட்டுத் துறையால் அமைச்சர் பெருமை அடைவதும் -அமைச்சர் உதயநிதியால் விளையாட்டுத் துறை சிறப்பு அடைவதுமான காட்சிகளை நான் காண்கிறேன்.

இவை எல்லாம் விளம்பரத்துக்காகச் செய்யப்படுபவை அல்ல. விளையாட்டுத் துறையின் செயல்கள் மூலமாக இத்தகைய பாராட்டுகள் கிடைக்கிறது.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் தொன்மையான பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பாட்டம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

விளையாடும் வீரர்களுக்கு உடல் திறன் மேம்படுகிறது. அதனைப் பார்த்து ரசிப்பவர்களின் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. விளையாட்டைக் காண வந்தவர்களில் நாளைய சாம்பியன்களும் நிச்சயம் இருப்பார்கள். இதுதான் விளையாட்டின் சிறப்பம்சம்.

முந்தைய காலங்களில் பள்ளி, கல்லூரிகள் என இரண்டு பிரிவுகளில் மட்டுமே விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன. இப்போது மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என்ற பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளன.

முன்பு 10 விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போது 15 விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளைச் சிறப்பாக நடத்த மாவட்டக் குழு - மாநிலக் குழு அமைக்கப்பட்டது. கிரிக்கெட், சதுரங்கம், பீச் வாலிபால் போன்ற போட்டிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு 50 கோடியே 86 லட்சம் ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது. இதில் பரிசுத் தொகையாக மட்டும் 28 கோடியே 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் மிகச் சீராக நடைபெற்றதை அறிந்து நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.

மாவட்ட அளவிலான நடைபெற்ற போட்டிகளில், 3 லட்சத்து 70 ஆயிரம் வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டுள்ளார்கள். அதன்பிறகு மண்டல அளவில் போட்டிகள் நடந்துள்ளன.

மண்டல அளவிலான போட்டிகளில் 27 ஆயிரத்து 54 வீரர் - வீராங்கனைகள் பங்கெடுத்துள்ளார்கள். இவர்களை வைத்து மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் மட்டும் 17 இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் மட்டும் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டுள்ளன. அதில் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் பங்கெடுத்ததைதான் முதலமைச்சர் கோப்பைக்கான வெற்றியாக நான் கருதுகிறேன்.

போட்டிகளில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது ஒருபக்கம் என்றால் - இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்ததன் மூலமாக இந்த விளையாட்டுத் துறையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை நான் பெருமையோடு இங்கே பதிவு செய்கிறேன்.

போட்டிகளில் எவ்வளவு பேர் பங்கெடுக்கிறார்கள் - எவ்வளவு வீரர்களும் - வீராங்கனைகளும் உங்களை நோக்கி வருகிறார்கள் என்பதுதான் போட்டி நடத்துபவர்கள் அடைய வேண்டிய பெருமை! அதனால்தான் பாராட்டுதல்களை நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளைப் பற்றி நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஒற்றையர் போட்டியாக இருந்தால் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாயும் - குழு போட்டியாக இருந்தால் அதிகபட்சம் 9 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகை பெறும் மாபெரும் போட்டியாக இது அமைந்துள்ளது.

மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 27 ஆயிரம் பேரையும் சென்னைக்கு அழைத்து வர சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வீரர் - வீராங்கனைகள் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்குச் சென்று வர
72-க்கும் மேற்பட்ட பேருந்து வசதிகளும், மருத்துவ வசதிகளும் செய்யபட்டது.

போட்டிகளைச் சிறப்பாக நடத்திட ஏதுவாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் காவல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதான் மிக மிக முக்கியம்!

'டீம் ஸ்பிரிட்' என்று விளையாட்டுக் களத்தில் சொல்வார்கள். விளையாட்டுப் போட்டிகளை நடத்தும்போதும் பல்வேறு துறையினருடன் இணைந்து செயல்படக்கூடிய இத்தகைய 'டீம் ஸ்பிரிட்' தேவை. அந்த வகையில், போட்டிகளை நடத்துவதற்கான சிறப்பான சூழலை உருவாக்குவதில் நமது அரசு நற்பெயரை பெற்றிருக்கிறது.

நான் ஆரம்பத்தில் சொன்னேனே...மிகக் குறுகிய காலத்தில், அதாவது நான்கே மாதத்துக்குள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நாம் நடத்திக் காட்டினோம்.

நமது விருந்தோம்பலைச் சிலாகித்து வெளிநாட்டு வீரர்கள் பலரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்தார்கள். உலக விளையாட்டு வீரர்களை மட்டுமல்ல, உள்ளூர் வீரர்களையும் நாம் மரியாதையுடன்தான் நடத்துவோம் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த விழா!

இதனை நான் சொல்வதற்கு என்ன காரணம் என்றால், போட்டிகளில் பரிசுகள் வழங்குவதோடு அரசாங்கத்தின் கடமை முடிந்துவிடவில்லை. விளையாட்டு வீரர்களை மதித்து, அன்புடன் வரவேற்று அவர்களுக்கு வெற்றிகரமான சூழலையும் உருவாக்கித் தர வேண்டியதும் அரசின் கடமை! அதனை தமிழ்நாடு விளையாட்டுத் துறை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறது.

மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து வீரர்- வீராங்கனைகளையும் நான் மனதார பாராட்டுகிறேன். பலருக்குப் பதக்கங்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். அது முக்கியமல்ல; பங்கேற்புதான் முக்கியம்! விளையாட்டில் வெற்றி என்பதே பங்கேற்பதும்; சளைக்காமல் போராடுவதும்தான்!

தனிப்பட்ட முறையில் எனக்கு விளையாட்டின்மீது இருக்கும் ஆர்வத்தைப் பலரும் அறிவீர்கள். அதனால்தான், கடுமையான பணிச்சூழலுக்கு இடையிலும் இந்த நிகழ்ச்சிக்கு நான் இங்கே வந்திருக்கிறேன்.

நான் மட்டுமல்ல; தலைவர் கலைஞர் அவர்களும் மிகப்பெரிய விளையாட்டு ரசிகர்! அதனால்தான் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார்.

2006-ஆம் ஆண்டு நடைபெற்ற Asian Games-இல் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை சாந்தி அவர்களை, "ஓடியது இந்த கால்கள் தானே!" என ஆதரித்து ஊக்கப்படுத்தினார்.

தலைவர் கலைஞர் அவர்கள் நல்ல விளையாட்டுப் போட்டிகளை ரசிக்கக் கூடியவர். விளையாட்டில் நேர்மையும் அறமும் வேண்டும் என்று விரும்பியவர்.

தலைவர் கலைஞரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. வெற்றியையும் தோல்வியையும் இயல்பாக எடுத்துக் கொண்டு சளைக்காமல் போராடியவர் அவர். இதைத்தான் விளையாட்டுக் களத்தில் 'ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்' என்கிறார்கள். அரசியலில் அவர் 'ஸ்டேட்ஸ்மேனாக' இருந்தார். அரசியலை அணுகுவதில் அவரிடம் 'ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்' இருந்தது.

விளையாட்டில் நீங்கள் அனைவரும் அறத்தைப் பேண வேண்டும் என்று சொல்லி, மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுத்து பதக்கங்கள் பெற்ற அனைவரையும் பாராட்டுகிறேன்.

நீங்கள் மேன்மேலும் வெற்றிகளை குவிக்க வேண்டும். மாநில அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ள நீங்கள் இனி வருங்காலத்தில் இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும். விளையாட்டு வீரர்களான நீங்கள் மட்டுமல்ல; இந்தியாவுக்காகத்தான் நாங்களும் பாடுபடுகிறோம்.

எங்கள் அணியும் 'இந்தியா' அணிதான்! அதன் வெற்றிக்காகத்தான் நாங்களும் ஒருங்கிணைந்து- 'டீம் ஸ்பிரிட்டுடன்' பாடுபடுகிறோம்.

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதைப் போலவே-விளையாட்டு மீதான ஆர்வத்தை அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஏற்படுத்த வேண்டும், வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி அவர்களையும் விளையாட்டுத் துறை அதிகாரிகளையும் நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அப்படிச் செய்தால் தமிழ்நாடின் இளைய சக்தியானது ஈடு இணையற்ற சக்தியாக வளரும் என்று சொல்லி அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகிறேன்.''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+