கேரளா ஸ்டோரி 2 படத்தில் நடித்திருக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகர்.. கேரக்டர் இதுதானா? அவரே வெளியிட்ட பதிவு
சென்னை: 2023ஆம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் சர்ச்சையையும், அதே நேரத்தில் வசூல் சாதனையையும் படைத்த தி கேரளா ஸ்டோரி படத்தின் இரண்டாம் பாகமான 'தி கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்டு' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த படத்தில் சன் டிவி 'எதிர்நீச்சல் - 2' சீரியலில் நடித்துவரும் நடிகர் அபிஷேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
படத்தின் தயாரிப்பாளரான விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், சன்ஷைன் பிக்சர்ஸ் பேனரில் உருவாகும் இந்த படத்தை காமக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். பிப்ரவரி 27, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டீசரில் மதமாற்றம் தொடர்பான தீவிரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அபிஷேக்கின் பதிவு
இந்த நிலையில், நடிகர் அபிஷேக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "Honoured to be part of this meaningful journey - Kerala Story 2. Your love and support mean everything. Please watch and share" என்று குறிப்பிட்டு, படத்தின் டீசர் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதன் மூலம், இந்த படத்தில் அவர் நடித்திருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
அபிஷேக்கின் பயணம்
நடிகர் அபிஷேக், இயக்குநர் திருமுருகன் இயக்கிய 'கோலங்கள்' சீரியல் மூலம் சின்னத்திரையில் தனக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். தொடர்ந்து, மலர்கள், செல்லமே, செம்பருத்தி, புதுப்பது அர்த்தங்கள் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தற்போது, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல் - 2' தொடரில் கேப்டன் தேவசகாயம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவரது நெகட்டிவ் நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதே நேரத்தில் தேசிய அளவில் பேசப்படும் ஒரு சர்ச்சை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, அவரது திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
கேரளா ஸ்டோரி 2 டீசர்
'கேரளா ஸ்டோரி 2' டீசரில், உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா, அதிதி பாதியா ஆகிய மூன்று இளம் பெண்களின் வாழ்க்கை காதல் என்ற பெயரில் தவறான பாதைக்கு திருப்பப்படுவது, அதன் பின்னணியில் உள்ள மதமாற்ற விவகாரம் போன்றவை சுட்டிக்காட்டப்படுகின்றன. "இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம்... போராடுவோம்" என்ற வாசகத்துடன் டீசர் முடிவடைவதால், படம் மீண்டும் சமூக அளவில் பெரிய விவாதத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
'எதிர்நீச்சல்' தொடரின் ரசிகர்கள், அபிஷேக் வெள்ளித்திரையில் முக்கிய கதாபாத்திரத்தில் வருவதை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சின்னத்திரை நடிகராக பிரபலமான அவர், 'கேரளா ஸ்டோரி 2' போன்ற பெரிய படத்தில் இடம்பெற்றிருப்பது அவரது திரையுலக பயணத்தில் அடுத்த கட்டம் என பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications