ரியல் ஹீரோவான ஹரிஷ் கல்யாண்.. புற்று நோயிலிருந்து பல உயிரை காக்க கொடுத்த பரிசு! இந்த மனசு தான் கடவுள்
சென்னை: தமிழ் சினிமாவில் காதல் கதாநாயகனாக ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் ஹரிஷ் கல்யாண். திரையில் ரொமான்ஸ், குடும்ப கதைகள் என தனது மென்மையான நடிப்பால் கவனம் பெற்ற அவர், நிஜ வாழ்க்கையிலும் அதே அளவுக்கு மனசுள்ள "ரியல் ஹீரோ" என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் நோயாளிகளை இறுதி வரை கவனித்து வரும் ஸ்ரீமாதா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் அதன் நிறுவனர் விஜயஸ்ரீ அவர்களின் சேவைக்கு முன்பே நிதியுதவி வழங்கியிருந்த ஹரிஷ் கல்யாண், தற்போது இன்னொரு முக்கியமான மனிதநேய செயலை செய்துள்ளார்.

முன்கூட்டியே புற்றுநோயை கண்டறியும் கருவி
இன்று வளசரவாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்க உதவும் பரிசோதனை கருவியை அவர் தனது சொந்த செலவில் வாங்கி வழங்கியுள்ளார். இதனால் பலரின் உயிர் காக்கப்படும் என்ற நம்பிக்கையோடு மிகவும் நெகிழ்ச்சியுடன் அவர் பேசினார்.
"இந்த எண்ணம் எனக்கு வந்தது என் அப்பாவால்தான். நம்மால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யணும் என்று அவர் அடிக்கடி சொல்லுவார். அதைப் பின்பற்றித்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏதாவது செய்யணும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வாய்ப்பு கிடைத்தது," என்றார்.
பொதுவாக யாருக்காவது பரிசு கொடுத்தால் அவர்கள் அதைத் திறந்து பார்க்கும் போது நமக்கு சந்தோஷம் இருக்கும். ஆனால் இந்த கருவியை மருத்துவமனைக்கு கொடுத்து அவர்கள் திறந்து பார்த்த போது எனக்கு கிடைத்த சந்தோஷம் சொல்ல முடியாத ஒன்று. இதன் மூலம் பலர் புற்றுநோயை ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து உயிர் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பது தான் எனக்கு மிகப் பெரிய திருப்தி," என்று உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
சமூக நல சேவைகளில் தொடர்ந்து ஈடுபாடு
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான Pink Promise போன்ற சமூக நல நிகழ்ச்சிகளிலும் அவர் தொடர்ந்து பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட வெற்றிகள் மட்டும் அல்லாமல், மனிதநேய செயல்களால் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதையே அவர் தனது செயலில் காட்டி வருகிறார்.
சினிமா காதலன் ஹரிஷ் கல்யாண்
சின்னத்திரையிலும், சினிமாவிலும் பயணத்தை தொடங்கிய அவர், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதன் பிறகு ஹீரோவாக பல காதல் கதைகளில் நடித்தார்.
முக்கியமான படங்கள்
ப்யார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு, ஓ மனபெண்ணே, லப்பர் பந்து, டீசல் போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஆனால் 'லப்பர் பந்து' படத்துக்குப் பிறகு பெரிய கமர்சியல் வெற்றி இல்லாவிட்டாலும், தன்னிடம் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சமூக நலத்திற்கு செலவிடுவது ரசிகர்களை பெருமைப்பட வைத்துள்ளது.
பாராட்டில் ரசிகர்கள்
திரைப்படங்களில் ஹிட் கொடுக்கிறாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் வாழ்க்கையில் ஹீரோவாக இருக்கிறார் என்றே ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்."சினிமா ஹீரோவாக மட்டும் இல்ல, ரியல் ஹீரோ" என்ற கருத்துகளும் பரவி வருகிறது.
மனிதநேயம் கலந்த இந்த செயல், ஹரிஷ் கல்யாணை இன்னும் உயர்ந்த இடத்தில் நிறுத்தியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. அவரது இந்த உதவி பலரின் உயிரை காக்கட்டும் என்பதே ரசிகர்களின் ஒரே பிரார்த்தனை.












Click it and Unblock the Notifications