Jana Nayagan: ஜனநாயகன் முதல் நாள் அதிகாலை ஷோ மாற்றம்! விஜய்க்கு கேரளா ரசிகர்கள் காட்டும் மரியாதை
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. விஜய் - இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம், விஜய் நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என கூறப்படுவதால், ரசிகர்களின் கவனம் மட்டுமல்லாமல் உணர்ச்சிகளையும் ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், 'ஜனநாயகன்' படத்தின் (Jana Nayagan Kerala show time) கேரளா முதல் நாள் அதிகாலை காட்சி தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கேரளாவில் ஜனவரி 9ஆம் தேதி காலை 4.00 மணிக்கு நடைபெற இருந்த முதல் ஷோக்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், தற்போதைய சூழ்நிலை மற்றும் தமிழ்நாட்டில் ஏற்பட்ட சில காரணங்களால் அந்த அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கேரளாவில் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் ஷோ காலை 6.00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாற்றம் குறித்து, கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கு தயாரிப்பு தரப்பு மன்னிப்பும் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த காட்சி நேர மாற்றம் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தாமல், மாறாக விஜய்க்கான மரியாதை மற்றும் அன்பின் வெளிப்பாடாக மாறியுள்ளது. விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்க உள்ளார் என்ற சூழலில், அவரது இறுதிப் படத்தை திரையரங்கில் பார்த்து கொண்டாட வேண்டும் என்பதே கேரளா ரசிகர்களின் பிரதான உணர்வாக உள்ளது.
கேரளா தியேட்டர்கள் காலை 6.00 மணிக்கு காட்சிகளை ஒதுக்கி, 'ஜனநாயகன்' படத்தை முதல் நாள் பிரம்மாண்டமாக வெளியிட தயாராக இருப்பது, விஜய் மீது அந்த மாநில ரசிகர்கள் வைத்துள்ள மரியாதையை வெளிப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. "காட்சி நேரம் மாற்றமானாலும், ரசிகர்களின் ஆதரவு குறையாது" என்பதே கேரளா ரசிகர்களின் ஒருமித்த குரலாக மாறியுள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படம், அரசியல் மற்றும் சமூக பின்னணியைக் கொண்ட கதையமைப்புடன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது டிரைலர் வெளியீட்டுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ள நிலையில், முன்பதிவிலேயே 'ஜனநாயகன்' படம் கோடிக்கணக்கான வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகும் படம் என்பதால், 'ஜனநாயகன்' திரைப்படம் சினிமாவைத் தாண்டி அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த வகையில், கேரளாவில் காலை 6 மணி காட்சிகளுடன் இந்த படம் வெளியாவதும், விஜய் ரசிகர்களின் உணர்ச்சி பூர்வமான ஆதரவின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications