Karuppu Movie: கருப்பு இன்று ரிலீஸாகாத காரணம் இதுதானா? முதல்வர் அனுமதி கொடுத்தும் புது பிரச்சனை! லீக்கான தகவல்
சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் வெளியீட்டு நாளிலேயே சர்ச்சையில் சிக்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (மே 14) படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 9 மணி சிறப்பு காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பு தரப்பில் வெளியான அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த படம் எதனால் ரிலீசாகவில்லை என்று பிஸ்மி வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கருப்பு படத்திற்கு சிக்கல்
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். நீண்ட கால தாமதங்களுக்கு பிறகு உலகம் முழுவதும் இன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. மேலும் முதல் இரண்டு நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்ததால், ரசிகர்கள் உற்சாகமாக முன்பதிவுகளை செய்திருந்தனர். பல திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையும் வேகமாக நடைபெற்றது.
தயாரிப்பாளர் போஸ்ட்
ஆனால் அதிகாலை நேரத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு வெளியிட்ட பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. "தவிர்க்க முடியாத காரணங்களால் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன" என்ற விளக்கம் மட்டுமே வெளியிடப்பட்டதால், படம் முழுமையாக வெளியாகுமா அல்லது மீண்டும் தாமதமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
குழப்பத்தில் ரசிகர்கள்
இந்த திடீர் மாற்றத்தால் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாக ஆன்லைனில் டிக்கெட் வாங்கியவர்களுக்கு, "காட்சி ரத்து செய்யப்பட்டதால் பணம் விரைவில் உங்கள் கணக்கிற்கு திருப்பி அனுப்பப்படும்" என திரையரங்குகள் மற்றும் முன்பதிவு தளங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், அந்த ரீபண்ட் எப்போது வரும்? எல்லா தளங்களிலும் ஒரே நேரத்தில் கிடைக்குமா? என்ற சந்தேகங்களும் ரசிகர்களிடம் நிலவுகிறது.

ஆர் ஜே பாலாஜி விளக்கம்
முன்னதாக, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட "இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே பல தடைகள் இருந்தாலும், அதை எல்லாம் கடந்து வெளியே வருகிறோம்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகே காட்சி ரத்து அறிவிப்பு வெளியாகியிருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்த படத்திற்கு பண சிக்கல்கள், ஓடிடி உரிமை பிரச்சனைகள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுடன் வருமான பங்கீடு தொடர்பான பிரச்சனைகள் ஆகியவை தொடர்ந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பிஸ்மி பதிவு
இதற்கிடையில், திரைப்பட விமர்சகர் பிஸ்மி வெளியிட்ட பதிவு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. அவர் பகிர்ந்த தகவலில், தயாரிப்பு நிறுவனம் ஜஸ்வந்த் பண்டாரி என்பவருக்கு பணம் வழங்க வேண்டியதால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்கலாம் என்றும், படம் மே 15ஆம் தேதி வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக திரையரங்கு வட்டாரங்களில் தகவல் பரவி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "இது நடக்கும் என்று நாங்கள் ஏற்கனவே சொன்னதுதான்" என்று அவர் கூறியிருப்பது இந்த விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
இதனால் 'கருப்பு' திரைப்படம் வெளியீட்டில் ஏற்பட்ட இந்த திடீர் சிக்கல், பைனான்ஸ் தொடர்புடையதா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், அதிகாரப்பூர்வமாக இதற்கு தெளிவான விளக்கம் இன்னும் வெளியாகாததால், ரசிகர்கள் குழப்பத்திலேயே உள்ளனர்.
வருத்தத்தில் ரசிகர்கள்
ஒருபுறம் இந்த பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்க, சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். "இன்னும் எத்தனை தடைகள்?", "இன்று படம் வருமா இல்லையா?" என்ற கேள்விகளுடன் பலரும் பதிவுகள் செய்து வருகின்றனர்.
மொத்தத்தில், மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த 'கருப்பு' திரைப்படம் வெளியீட்டு நாளிலேயே இப்படியான சிக்கலில் சிக்கியிருப்பது படக்குழுவுக்கும் ரசிகர்களுக்கும் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. படம் இன்று வெளியாவதா அல்லது நாளைக்கு தள்ளிப்போகுமா என்பது குறித்து தயாரிப்பு தரப்பின் அடுத்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.














Click it and Unblock the Notifications