Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sudhakar: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய, கிழக்கே போகும் சுதாகர்.. சாப்பிட போன இடத்தில் மாறிய வாழ்க்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சுதாகர். அந்தப் படத்தில் 'பரஞ்சோதி' என்ற கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு, அக்கால தமிழ் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. கிராமத்து இளைஞனின் இயல்பான உடல் மொழி, காதல் காட்சிகளில் தயக்கம், வெக்கம், சென்டிமென்ட் ஆகியவை அந்தப் படத்தை வெற்றிப் படமாக மாற்றியதில் முக்கிய பங்காற்றின.

Sudhakar Kizhakke Pogum Rail Bharathiraja Tamil Cinema

கிழக்கே போகும் ரயில்

1970களின் இறுதியில் வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம், அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் புதிய முகங்களுக்கு கிடைத்த பெரிய அடையாளமாக அமைந்தது. சுதாகரின் நடிப்பு, இயல்பான கிராமத்து பின்னணியுடன் பொருந்தி, கதையின் உணர்ச்சிப் பலத்தை அதிகரித்தது. படம் ஒரு வருடத்திற்கும் மேலாக திரையரங்குகளில் ஓடியதுடன், பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களால் நினைவுகூரப்படுகின்றன.

அந்தப் படத்திற்குப் பிறகு, சுதாகர் தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களில் முக்கியமான ஒருவராக பார்க்கப்பட்டார். 'மனிதரில் இத்தனை நிறங்களா', 'இனிக்கும் இளமை', 'மாந்தோப்பு கிளியே', 'பொண்ணு ஊருக்கு புதுசு', 'நிறம் மாறாத பூக்கள்', 'சுவர் இல்லா சித்திரங்கள்', 'எங்க ஊரு ராசாத்தி', 'ஒருத்தி மட்டும் கரையினிலே' போன்ற பல படங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். கிராமத்து கதைகள், காதல் கதைகள், குடும்ப கதைகள் என பல்வேறு ஜானர்களில் நடித்த அவர், ஒரு கட்டத்தில் அக்கால முன்னணி ஹீரோக்களுக்கு போட்டியாகக் கருதப்பட்டார்.

ஹீரோவிலிருந்து குணச்சித்திரம்

1990களின் தொடக்கத்தில் சினிமாவின் போக்கு மாறத் தொடங்கியதும், சுதாகருக்கு கிடைத்த ஹீரோ வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதன் பின்னர் அவர் குணச்சித்திர வேடங்கள் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தினார். ரஜினிகாந்த் நடித்த 'அதிசய பிறவி' படத்தில் நடித்த காமெடி கேரக்டர், ரசிகர்களிடையே அவரை புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் 'காதல் அழிவதில்லை' (2001), 'தானா சேர்ந்த கூட்டம்' (2018) போன்ற படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்த பயணம்

தமிழில் வாய்ப்புகள் குறைந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் காமெடி மற்றும் துணை வேடங்களில் தொடர்ந்து நடித்ததாக சுதாகர் தெரிவித்துள்ளார். "நான் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று நினைத்து, தமிழில் இருந்து யாரும் அழைக்கவில்லை" என்று அவர் கூறியது, ஒரு காலகட்டத்தில் பல நடிகர்கள் சந்திக்கும் வாய்ப்பு பற்றாக்குறையை வெளிப்படுத்துகிறது. தற்போது அவர் ஹைதராபாத்தில் குடியேறி குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

கிழக்கே போகும் ரயில் வாய்ப்பு

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் youtube சேனலில் பேட்டி கொடுத்து இருக்கிறார். அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கும் சுதாகரை பார்த்து பலரும் இவரா சுதாகர் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அதில் அவர் கிழக்கே போகும் ரயில் படத்தின் அனுபவம் பற்றி பேசி இருக்கிறார்.

நடிகராக வேண்டும் என்ற கனவுடன் அவரது சகோதரர் அவரை சென்னை அழைத்து வந்து திரைப்படக் கல்லூரியில் சேர்த்தாராம். ஒருநாள் ஹோட்டலில் சாப்பிடச் சென்றபோது, இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்ததாகவும், தன்னை திரைப்படக் கல்லூரி மாணவன் என அறிமுகப்படுத்தி வாய்ப்பு கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்தச் சந்திப்பே, 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது.

தமிழ் பேசத் தெரியாத நிலையில் கூட, பாரதிராஜா அவருக்காக டியூஷன் வைத்து தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், முதல் படத்திலேயே முழு அர்ப்பணிப்புடன் நடித்ததாகவும் சுதாகர் பழைய நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். படத்தின் வெற்றியால், அவர் வெளியே வந்த இடமெல்லாம் 'பரஞ்சோதி' என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். பட வெற்றி விழாக்களுக்கு செல்லும் போது பலர் தங்கள் குழந்தைகளுக்கு அந்த கதாபாத்திரத்தின் பெயரை வைத்ததாக பலர் கூறினார்களாம்.

புகழின் உச்சத்தில் இருந்த காலம்

சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில், அவரது மகன் பிறக்கவில்லை என்றும், 1983ல் திருமணம் செய்த பின்னர் 1995ல் தான் மகன் பிறந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது வளர்ச்சி காலமான 'கோல்டன் எரா'வை மகன் பார்க்க முடியாமல் போனது தனக்கு வருத்தமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மகன் தன்னுடைய சில தெலுங்கு படங்களை மட்டுமே பார்த்திருப்பதாகவும், தமிழ் படங்கள் பெரிதாக அவருக்கு தெரியாது என்றும் சொல்லியிருக்கிறார்

ஒரு ஹோட்டல் சந்திப்பில் தொடங்கிய நடிகர் சுதாகரின் சினிமா பயணம், 'கிழக்கே போகும் ரயில்' மூலம் உச்சத்தை தொட்டது. காலப்போக்கில் கதாநாயக வாய்ப்புகள் குறைந்தாலும், குணச்சித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் தனது இருப்பை அவர் நிலைநாட்டினார். இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு அவர் திரையில் அதிகம் தெரியாமல் இருந்தாலும், 1980களில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு காலத்தை உருவாக்கிய நடிகராக சுதாகர் என்றும் நினைவுகூறப்படுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+