LIK review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி கதை இதுதான்! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) படம், வெளியான முதல் நாளிலேயே பேசுபொருளாக மாறி இருக்கிறது. கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம், ரொமான்டிக்-ஃபேண்டஸி கலந்த ஒரு வித்தியாசமான கான்செப்டை எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை பற்றி ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ கொடுத்திருக்கிறார். அது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட கதை
படத்தின் கதை 2040ம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு நகர்கிறது. அந்த காலத்தில் காதலையே தீர்மானிக்கும் ஒரு மொபைல் ஆப் இருக்கும். அந்த ஆப் ஒரு இளைஞனின் வாழ்க்கையை முழுக்க கட்டுப்படுத்த ஆரம்பித்தால் என்ன ஆகும், அதிலிருந்து அவன் தப்பிக்கிறானா இல்லையா என்பதுதான் கதையின் ஒன் லைன். கேட்கும் போது புதுசாகவும் சுவாரஸ்யமாகவும் தோன்றும் இந்த ஐடியா, திரையில் எப்படி வந்திருக்கிறது என்பதுதான் தற்போது விவாதமாகி வருகிறது.
ரசிகர்கள் கருத்து
படம் வெளியானவுடன் ரசிகர்களிடையே கலவையான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்தது. சிலர் இந்த எதிர்கால கான்செப்டையும், விஷுவல் மேக்கிங்கையும் பாராட்டினாலும், இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் எடுத்திருந்தால் படம் வேற லெவலுக்கு போயிருக்கும் என்ற கருத்து பல இடங்களில் கேட்கப்பட்டது. குறிப்பாக முதல் பாதி லைட்டாக செல்லும் போது ரசிக்க வைக்கும் சில தருணங்கள் இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதை சற்று இழுத்தடிப்பதாகவே பலர் கூறுகிறார்கள்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
இந்த நிலையில் பிரபல விமர்சகர் ப்ளூசட்டை மாறன் தனது விமர்சனத்தில் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், கதையாக இது வித்தியாசமான முயற்சி தான். ஆனால் அந்த கதையை படக்குழு முழுமையாக நம்பி எடுத்தது போல தெரியவில்லை என்றும், கதைக்கு சரியான முடிவை தேடி செல்லாதது பெரிய குறை என்றும் கூறியுள்ளார்.
மேலும், கதையில் இருக்க வேண்டிய மையக்கரு, ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது என்ற கருத்தை விட்டு விட்டு, அதை சாதாரண ஹீரோ-வில்லன் மாதிரியான கோணத்தில் எடுத்துவிட்டது தான் படத்தின் முக்கிய பிரச்சனை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் பிளஸ்
அதோடு, திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாகவும், பல காட்சிகள் முன்கூட்டியே யூகிக்க முடியும் அளவுக்கு இருப்பதாகவும், காமெடி காட்சிகளும் பெரிதாக வேலை செய்யவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். சில இடங்களில் படம் மிகவும் மேம்போக்காக செல்வதால், கதையோடு ஒட்டிப் பார்க்க முடியவில்லை என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ரவி வர்மன் ஒளிப்பதிவும், CGI வேலைகளும் தான் படத்தை ஓரளவிற்கு காப்பாற்றுகிறது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
வெளியீட்டு டைமிங்கைப் பற்றியும் அவர் கருத்து கூறியுள்ளார். பெரிய போட்டி படங்கள் இல்லாத நேரத்தை பார்த்தே படம் வெளியிடப்பட்டுள்ளது போல தெரிகிறது என்றும், இதுவே படத்திற்கு ஒரு பாதுகாப்பான சூழல் அமைத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் படம் ஆடியன்ஸுடன் பெரிய அளவில் கனெக்ட் ஆகவில்லை என்பதே அவரது முடிவு.
இத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் படத்திற்கு ஆரம்பத்தில் நல்ல ஆதரவையே காட்டுகிறது. கிடைத்த தகவல்களின் அடிப்படையில், முதல் நாளிலேயே இந்தியாவில் சுமார் 7 முதல் 8 கோடி வரையிலான வசூலை படம் ஈட்டியுள்ளது.
வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால், முதல் நாள் உலகளாவிய வசூல் 9-10 கோடி வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்களுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் குறைவாக இருந்தாலும், விடுமுறை நாட்கள் வருவதால் வசூல் மேலே போக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் பார்க்கும்போது, நல்ல கான்செப்ட் இருந்தும் அதை முழுமையாக பயன்படுத்த முடியாத படம் என்ற விமர்சனத்தோடு, அதே நேரத்தில் ஆரம்ப வசூலில் தப்பிக்காமல் ஓடும் படம் என்ற இரட்டை நிலைப்பாட்டில் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications