கோவில்ல எனக்கு VIP வரிசை கிடைக்கும்.. ரஞ்சித்துக்கு அப்படி நடக்காது! ஏன்னா.. இயக்குனர் மோகன் ஜி பேச்சு
சென்னை: தமிழ் சினிமாவில் சமூக-அரசியல் கருத்துகளை நேரடியாக பேசுவதால் எப்போதும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இருக்கும் இயக்குநர் மோகன் ஜி, இப்போ கொடுத்த ஒரு பேட்டியால் மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறார். குறிப்பாக இயக்குநர் பா.ரஞ்சித் குறித்து அவர் சொன்ன கருத்துகள்தான், சமூக வலைதளங்களில் தீயாய் பரவி விவாதத்தை கிளப்பியுள்ளது.
'திரெளபதி', 'ருத்ர தாண்டவம்' போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் மோகன் ஜி. சாதி, சமூக நீதி, அரசியல் தலையீடு போன்ற விஷயங்களை வெளிப்படையாக பேசும் அவரது படங்கள் ஒருபக்கம் வரவேற்பையும், இன்னொரு பக்கம் கடும் விமர்சனங்களையும் சந்தித்துள்ளன. தற்போது அவர் இயக்கி வரும் 'திரெளபதி 2' படத்தின் பணிகள் நடந்து வரும் நிலையில், அந்த படம் சந்தித்த சவால்கள், தன் சினிமா பயணம் குறித்து அவர் அளித்த பேட்டிதான் இப்போ சர்ச்சைக்கு காரணம்.

ஒரு தனியார் ஊடகத்திற்கு பேசிய மோகன் ஜி, "என்னை விட இயக்குநர் ரஞ்சித்துக்கு நிறைய வாய்ப்பு வருதுன்னு சொல்லுறாங்க. ஆனா எனக்கு கிடைக்கக்கூடிய பல வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கிறதில்லை" என்று கூறினார். இதோட நிக்காம, "நான் கோவிலுக்கு போனா என்ன கைபுடிச்சு VIP வரிசைல அழைச்சிட்டு போவாங்க.
தென் தமிழ்நாட்டுக்கு போனா, அங்க இருக்கிற மக்கள் என்னை அவங்க வீட்டுல ஒக்கார வைச்சு ஒரு பிள்ளை மாதிரி சாப்பிட வைப்பாங்க. இதெல்லாம் ரஞ்சித்துக்கு கிடைக்குமான்னு எனக்குத் தெரியல"னு சொன்னதுதான் பலரையும் அதிர வைத்திருக்கிறது.
இந்த பேச்சு வெளியான உடனே, சமூக ஊடகங்களில் இரண்டாகப் பிரிந்த விவாதம் ஆரம்பிச்சுட்டது. "மோகன் ஜி தன் அனுபவத்தை தான் சொல்றார், அதுல தப்பு என்ன?"ன்னு ஒரு தரப்பு ஆதரவு தெரிவிக்க, "இது தேவையில்லாத ஒப்பீடு, மற்ற இயக்குநர்களை குறைத்து பேசுற மாதிரி இருக்கு"ன்னு இன்னொரு தரப்பு விமர்சிக்க ஆரம்பிச்சது.
மோகன் ஜி இதுவரை இயக்கிய 'பழையனூர் மாவீரன்', 'திரெளபதி', 'ருத்ர தாண்டவம்' போன்ற படங்கள் சமூக கருத்துகளை மையமாக கொண்டு உருவானவை. குறிப்பாக 'திரெளபதி' படம் பெரிய அளவில் வசூலையும், அரசியல் ரீதியான சர்ச்சைகளையும் சந்தித்தது. இந்த படத்திற்காக அவருக்கு சில சமூக அமைப்புகளிடம் பாராட்டுகளும், மேடைகளில் கௌரவங்களும் கிடைத்ததாகவும் அவர் முன்பே தெரிவித்திருந்தார்.
மற்றபக்கம், பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் முற்றிலும் வேறொரு பாதையில் பயணிக்கும் இயக்குநர். 'அட்டகத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' போன்ற படங்கள் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அழுத்தமாக பதிவு செய்தவர். தேசிய, சர்வதேச அளவில் அவரது படங்கள் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளன. குறிப்பாக 'சார்பட்டா பரம்பரை' படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இரண்டு இயக்குநர்களின் பயணத்தையும் ஒப்பிட்டு மோகன் ஜி பேசிய விதம் தான் இப்போ பரபரப்பை உருவாக்கி இருக்கிறது. இது வெறும் தனிப்பட்ட அனுபவப் பகிர்வா, இல்ல மறைமுக தாக்கலா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
மொத்தமா சொல்லப்போனா, 'திரெளபதி 2' படம் ரிலீஸ்க்கு முன்னாடியே, மோகன் ஜியின் பேச்சு சினிமாவை தாண்டி அரசியல்-சமூக விவாதமா மாறியிருக்கிறது. படம் வெளியான பிறகு இந்த சர்ச்சை எந்த திசையில் போகப்போகுது என்பதையும், அதற்கு மோகன் ஜி மீண்டும் விளக்கம் தருவாரா என்பதையும் ரசிகர்கள் ஆர்வமா கவனிச்சுக்கிட்டிருக்காங்க.












Click it and Unblock the Notifications