விபத்தில் உயிரிழந்த தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி.. இன்று சென்னையில் உடல் அடக்கம்! பிரபலங்கள் இரங்கல்
சென்னை: ராஜஸ்தானில் சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியின் உடல் அன்று மாலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார். உதய்பூரில் நடந்த விபத்தில் உயிரிழந்த அவரது உடல், இன்று சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது. நடிகர் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷின் தந்தையான இவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மூலம் பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரைத்துறையில் நீண்ட காலமாக தடம் பதித்திருந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் கடுமையாக காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உதய்பூர் அருகே நேற்று (மே 5) நிகழ்ந்த இந்த விபத்து, தமிழ் சினிமா வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குப் பிறகு அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

அவரது உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட உள்ளது. அங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் தந்தையான ஆர்.பி. செளத்ரி, Super Good Films நிறுவனம் மூலம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களை தயாரித்தவர்.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் பணியாற்றிய அவர், தயாரிப்பாளராக தனக்கென ஒரு பெரிய அடையாளத்தை உருவாக்கியிருந்தார். அவரது தயாரிப்பில் வெளியான நாட்டாமை, சூரியவம்சம், பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா போன்ற பல வெற்றி படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. பேமிலி செண்டிமெண்ட், வணிக அம்சங்கள் கலந்த படங்களை வழங்கியதில் அவர் தனி முத்திரை பதித்திருந்தார்.
1980-களில் தயாரிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்த அவர், பல புதிய இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர் என்றும் நினைவுகூரப்படுகிறார். பலர் தங்கள் முதல் பட வாய்ப்பை அவரது நிறுவனம் மூலம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு திரைத்துறையின் பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.














Click it and Unblock the Notifications