நடிகை ஸ்ரீதேவி பயந்த மாதிரி நடந்துடுச்சு.. அவருடைய இறப்பிற்கு பிறகு நடந்த சம்பவம்! நெகிழும் ரசிகர்கள்
சென்னை: இந்திய திரைத்துறையின் "பெண் சூப்பர் ஸ்டார்" என அழைக்கப்பட்ட மறைந்த நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்து இன்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரின் நினைவுகள் ரசிகர்கள் மனதில் மீண்டும் உயிர்ப்பெடுத்துள்ளன. சமூக வலைதளங்கள் முழுவதும் அவரது புகைப்படங்கள், பாடல் காட்சிகள், திரைப்பட வீடியோக்கள் பகிரப்பட்டு "இவ்வளவு சீக்கிரம் நீங்கள் போயிருக்கக் கூடாது" என்ற வருத்தம் பரவி வருகிறது.

திடீர் மரணம்
2018 பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் உள்ள ஹோட்டல் அறையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார் ஸ்ரீதேவி. தனது நாத்தனாரின் மகன் மோஹித் மர்வா திருமணத்தில் கலந்துகொள்ள போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷி கபூர் உடன் துபாய்க்கு சென்றிருந்தார்.
அப்போது தனது முதல் படமான தடக் படப்பிடிப்பில் இருந்ததால் மூத்த மகள் ஜான்வி கபூர் போகவில்லை.
அவரின் மரண செய்தி வெளியான உடனே நாடு முழுவதும் அதிர்ச்சி நிலவியது. பின்னர் அவரது உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டு அரச மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அந்த இறுதி ஊர்வலத்தில் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டது, அவரின் தாக்கத்தை மீண்டும் உணர்த்தியது.
குடும்ப உறவுகளை இணைத்த பிரிவு
ஸ்ரீதேவியின் மறைவு அவரது குடும்ப உறவுகளிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. போனி கபூரின் முதல் மனைவியின் மகனான அர்ஜுன் கபூர், முன்பு இருந்த மனக்கசப்பை மறந்து ஜான்வி மற்றும் குஷிக்கு ஆதரவாக இறுதிச்சடங்கு பணிகளில் ஈடுபட்டது பெரிதும் பேசப்பட்டது.
அதன்பிறகு அவர் தனது தங்கைகள் போலவே ஜான்வி, குஷியை கவனித்து வருவது ரசிகர்களை நெகிழச்செய்தது. அதேபோல் அன்ஷுலா கபூர் உடனான உறவும் குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தியது.
தனது மகள்களை பற்றி கொண்டிருந்த பயம்
தனது மகள்கள் நடிக்க வரக்கூடாது என்று ஸ்ரீதேவி ஒருகாலத்தில் விரும்பியதாக கூறப்படுகிறது. காரணம் - தன்னை ஒப்பிட்டு விமர்சிப்பார்கள் என்ற பயம். ஆனால் இன்று ஜான்வியும் குஷியும் நடிகைகளாகி விட்டனர். அவர்கள் நடிப்பை ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் பேசுவது, அவர் முன்பே நினைத்ததை உண்மையாக்கியுள்ளது.
குழந்தை நட்சத்திரத்திலிருந்து பெண் சூப்பர் ஸ்டார் வரை
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி, பின்னர் தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அவரின் கண் நடிப்பு, நடன திறன், எளிதில் மாறும் முகபாவனைகள் - இவை அனைத்தும் அவரை மற்ற நடிகைகளிலிருந்து வேறுபடுத்தின.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படங்கள்
ஸ்ரீதேவி தமிழ் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க காரணமான சில முக்கியமான திரைப்படங்கள், 16 வயதினிலே, மூன்றாம் பிறை, சிகப்பு ரோஜாக்கல்,பிரியா, கல்யாணராமன்,மீண்டும் கோகிலா இந்த படங்களில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு, குறிப்பாக மூன்றாம் பிறை படத்தில் காணப்பட்ட செண்டிமெண்ட் நடிப்பு, இன்று வரை நடிகைகளுக்கான பாடமாக பேசப்படுகிறது.
இந்தி திரையுலகில்
Mr. India, Chandni, Lamhe, English Vinglish போன்ற படங்கள் அவரை இந்திய அளவில் "பெண் சூப்பர் ஸ்டார்" என்ற நிலைக்கு கொண்டு சென்றன.
மறைந்தும் மறையாத நினைவு
இன்று வரை ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "மிஸ் யூ", என்று கமெண்ட்ஸ் கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது. 53 வயதிலேயே அவர் மறைந்தாலும், ஐந்து தசாப்தங்களுக்கு மேல் நீண்ட அவரது திரைப் பயணம் இந்திய சினிமாவின் வரலாற்றில் அழியாத தடத்தை பதித்துள்ளது.












Click it and Unblock the Notifications