ஜனநாயகன் படத்திற்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்.. இன்னும் கிடைக்காத சர்டிபிகேட்! ரசிகர்கள் ஆதங்கம்
சென்னை: அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் தவெக தலைவர் விஜயின் கடைசி திரைப்படமாக உருவாகி இருக்கும் 'ஜனநாயகன்' படம், வெளியீட்டிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இதுவரை தணிக்கைச் சான்று பெறாதது படக்குழுவுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. கடந்த மாதம் 19ஆம் தேதி தணிக்கைக்காக அனுப்பப்பட்ட படம், குழு குறிப்பிட்ட மாற்றங்களை செய்து மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டாலும், இதுவரை அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தணிக்கைக் குழுவிடமிருந்து தொடர்ந்து பதில் வராததால், 'ஜனநாயகன்' படக்குழு நீதிமன்றத்தை நாட ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பெரிய நடிகரின் கடைசி படம், அதுவும் அரசியல் பின்னணியுடன் வெளியாகும் நிலையில், நீதிமன்ற தலையீடு அவசியமாகும் சூழல் உருவாகி இருப்பது, படத்தின் வெளியீட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் வசனங்கள்
ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான 'ஜனநாயகன்' படத்தின் டிரெய்லர் மற்றும் முன்னோட்டத்தில் இடம்பெற்ற விஜய்யின் அரசியல் வசனங்கள், வெளியான உடனே பெரும் கவனத்தை பெற்றன. இந்த வசனங்களே தணிக்கையில் சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அரசியல் பேசும் படம் என்பதால், தணிக்கைச் சான்று வழங்குவதில் கூடுதல் நுணுக்கம் பார்க்கப்படுகிறதா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
ஒருபக்கம் 'ஜனநாயகன்' படத்தின் திரையரங்கு விநியோகம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மறுபக்கம் தணிக்கைச் சான்று இல்லாததால் வெளியீட்டு தேதியே கேள்விக்குறியாக மாறியுள்ளது. விஜய் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்க, படத்திற்கு அனுமதி கிடைக்காத நிலை விநியோகஸ்தர்களுக்கும் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தரப்பின் குற்றச்சாட்டுகள்
இந்த விவகாரம் அரசியல் கோணத்திற்கும் நகர தொடங்கியுள்ளது. கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், 'ஜனநாயகனை தடுப்பது யார் என்று உங்களுக்கே தெரியும்' என மறைமுகமாக குற்றம் சாட்டினார். அதேபோல், தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், 'ஜனநாயகனுக்கு வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுகிறது' என்ற சந்தேகத்தையும் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்ட சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை முன்வைத்து, தவெக தரப்பினர் சமூக வலைதளங்களில், 'பராசக்திக்கு ஒரு நீதி? ஜனநாயகனுக்கு ஒரு நீதியா?' என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த ஒப்பீடு, தணிக்கை நடைமுறைகள் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
'ஜனநாயகன்' என்பது வெறும் ஒரு திரைப்படம் மட்டும் அல்ல. இது விஜயின் கடைசி நடிப்பு படம் என்பதும், அரசியல் பயணத்தின் முக்கிய கட்டத்தில் வெளியாகும் படம் என்பதும், எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது. அதே நேரத்தில், தணிக்கைச் சான்று, நீதிமன்றம், அரசியல் குற்றச்சாட்டுகள் என பல சவால்கள் ஒரே நேரத்தில் இந்த படத்தை சூழ்ந்து கொண்டுள்ளன.
தவிப்பில் ரசிகர்கள்
வெளியீட்டிற்கு மூன்று நாட்களே உள்ள நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்குமா, நீதிமன்றம் தலையிடுமா, அல்லது கடைசி நேரத்தில் ஏதேனும் சமரசம் ஏற்படுமா என்ற கேள்விகளே தற்போது 'ஜனநாயகன்' படத்தை சுற்றி பேசப்படும் முக்கிய விஷயங்களாக மாறியுள்ளது. இந்த சவால்களை தாண்டி, படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா என்பதே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் விடையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications