சீனாவிடம் சிக்கிய இலங்கை.. ஆபத்தை உணராத இந்தியா... மத்திய அரசு மீது திமுகவின் முரசொலி பாய்ச்சல்
சென்னை: இலங்கையானது கடன் உள்ளிட்ட விவகாரங்களில் சீனாவிடம் சிக்கி காலனி நாடாக உருமாறி இருப்பது இந்தியாவுக்கு ஆபத்தானது எனபதை மத்திய அரசு உணராமல் இருப்பதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி சாடியுள்ளது.
இது தொடர்பாக இன்றைய முரசொலி நாளேட்டின் தலையங்கம்
சர்வதேச அளவில் சீனாவின் வர்த்தக ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் திட்டத்துக்கு ஜி-7 அமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

"சீனாவின் கடுமையான போட்டியை சமாளிக்கும் வகையில், தங்களது நாடுகளைச் சேர்ந்த சிறு மற்றும் நடுத்தர நிறு வனங்கள் தங்களது உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக் கொள்வதற்காக அரசுகள் உதவ வேண்டும்" என்று அதிபர் பைடன் வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த வகைப்பட்ட கோரிக்கையின் பின்னணியை உன்னிப்பாக ஆராய வேண்டும். பொத்தாம் பொதுவாக பார்த்துவிட முடியாது.
உலகத்தை பொருளாதார ரீதியாக வசப்படுத்த சீனா பல்வேறு முயற்சிகளில் இறங்கி வருகிறது. இது மறைமுகமாக அல்ல, வெளிப்படையாகவே நடந்துவருகிறது. அதாவது வர்த்தக வழித்தடம் உருவாக்குவதாகச் சொல்லிக்கொண்டு ஒருவிதமான ஆதிக்க வழித்தடத்தை சீனா நிலை நிறுத்தி வருகிறது. தங்கள் நாடுகளில் சாலைகள், ரயில் வழித்தடங்கள், துறைமுகங்கள் உருவாக்க சீனா தாராளமாக நிதி உதவிகள் செய்கிறது. கடன் கிடைத்தால் போதும் என்ற சூழலில் இருக்கும் நாடுகள் சீனாவின் பேராதிக்கமனோபாவத்துக்கு அடி பணியும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இதற்கு புரியும் வகையில் உதாரணம் சொல்ல வேண்டுமானால் நமக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கை. முழுக்க முழுக்க அந்த நாடு சீனாவின் காலனியாதிக்க நாடு போலவே ஆக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவுக்கும் நல்லதல்ல. தமிழகத்துக்கும் நல்லதல்ல.
இதுகுறித்து தொடர்ந்து எழுதிவரும் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், பல்வேறு அதிர்ச்சிமிகு தகவல்களை வெளிப்படுத்தி வருகிறார்.

1. ஹம்பந்தோட்டா மட்டுமல்லாமல் கொழும்பு துறைமுகத்திலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
2. கொழும்பில் சீனா சிட்டி என்று தனியாக ஒன்று உருவாகிக் கொண்டு வருகின்றது.
3. சீனாவின் போர்க் கப்பல்கள் இந்து மகா சமுத்திரத்தில் இருக்கின்றது.
4. இராமேஸ்வரம் அருகே நெடுந்தீவு, அனலைத்தீவு, நைனாத்தீவுகளின் மின்சார உற்பத்தி செய்ய இலங்கை சீனாவிற்கு அனுமதி அளித்துள்ளது.
5. குமரி முனையில் இருந்து கொழும்பு பக்கம் கிட்டத்தட்ட 290கிலோமீட்டர் சீனா நெருங்கிவிட்டது.
6. இனிமேல் தெற்கே சீனாவின் ஆதிக்கம் கடல்வழியாக பிரச்சினைகள் எழலாம்.
7. மற்றொரு புறம் ஜப்பான், பிரான்சு, அமெரிக்கா- டிகோ கார்சியா எனவும் இந்து மகா சமுத்திரத்தில் ஆதிக்கம் உள்ளன.-
இப்படி ஒரு சர்வதேச சுழலில் இலங்கை சிக்கி உள்ளது. இலங்கை சிக்கி உள்ளது என்றால் அது இலங்கையைப் பொறுத்தது மட்டுமல்ல; இந்தியாவுக்கும் ஆபத்தானது ஆகும். அதனை இந்தியா உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இவ்வாறு முரசொலி நாளேட்டின் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications