அதிமுகவுடன் கூட்டணிக்கு தயாராகும் காங்கிரஸ்?

Subscribe to Oneindia Tamil

-ஏ.கே.கான்

தமிழகம், புதுவையில் நடக்கவிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு 4 முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒன்று, முதல்வர் கருணாநிதியால் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் தான் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இது தான் திமுகவும் காங்கிரசும் அதிகாரப்பூர்வமாக் கூறும் காரணம். ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக இம்முறை முதல்வரால் பிரச்சாரத்துக்கே போக முடியாத நிலையில், கூட்டணியின் வெற்றிக்கு உதவும் வகையில் சோனியாவாவது வந்து பிரச்சாரம் செய்திருக்கலாமே. அவர் ஏன் வரவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன.

இரண்டாவது காரணம், சோனியாவின் பாதுகாப்பு குறித்தது. இலங்கை விவகாரம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் தமிழகத்தில் சோனியாவுக்கு உரிய பாதுகாப்பு தர முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக மத்திய-மாநில உளவுப் பிரிவுகள் தந்த அட்வைசின்படி தனது பிரச்சாரக் கூட்டத்தை சோனியா ரத்து செய்தார் என்கிறார்கள். ஆனால், இது ஏற்கத்தக்க காரணமாக இல்லை.

மூன்றாவது காரணமும் இலங்கை விவகாரத்தை ஒட்டியது தான். இப்போதுள்ள நிலையில் சென்னையில் வந்து பிரச்சாரம் செய்தால் இலங்கை விவகாரம் குறித்த எதிர்க் கட்சிகள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு சோனியா காந்தி பதில் தந்தாக வேண்டும். ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் உயிர் பறிபோகக் காரணமாக இருந்த மத்திய அரசின் செயலற்ற போக்குக்கு காங்கிரசிடம் உரிய பதில் இல்லை. சாக்குபோக்கு வேண்டுமானால் கூறலாம். ஆனால், மக்களிடம் இலங்கை விவகாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு உணர்வுபூர்வமாக பரவிவிட்டதால் சாக்கு போக்கு சொன்னால் அது காங்கிரஸ்-திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை மேலும் பாதிக்குமே தவிர உதவாது. இதனால் தான் தமிழ்நாட்டுப் பக்கமே வர வேண்டாம் என சோனியா முடிவெடுத்தார் என்கிறார்கள்.

நான்காவது காரணம் தான் மிக மிக முக்கியமானது. அதாவது இந்தத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்துக்கு பெரும் சரிவு ஏற்படும் என காங்கிரஸ் திடமாக நம்புகிறது. இதனால் தேர்தலுக்குப் பின் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவும் அந்தக் கட்சி தயாராகி வருகிறது. அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்வதை சோனியா தவிர்த்தார் என்கிறார்கள்.

இரு நாட்களுக்கு முன் ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் என எதிர் தரப்பில் உள்ளவர்களை ராகுல் காந்தி புகழ்ந்தார். இதையடுத்து சோனியாவின் பிரச்சாரக் கூட்டம் ரத்தாகியுள்ளதை கவனிக்க வேண்டும் என்கிறார்கள் நம் அரசியல்வாதிகளை ஆழமாக அறிந்தவர்கள்.

மேலும் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத்தும் ராகுலின் கருத்தை ஆதரித்துப் பேசினார்.

காங்கிரஸ் தலைவர்களின் இந்தச் செயலும் பேச்சும் திமுகவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இப்போதைய நிலையில் எதுவும் செய்ய முடியாத நிலையில் திமுக உள்ளது.

திமுகவின் எரிச்சலை உணர்ந்து கொண்டுள்ள காங்கிரஸ் மேலிடம் தேர்தல் நேரத்தில் இது தனது கூட்டணிக்கு மேலும் பாதகத்தையே ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து நேற்றிரவு குலாம் நபி ஆசாத் மூலமும் செய்தித் தொடர்பாளர் அஸ்வின் குமார் மூலம் பட்டும்படாமல் ஒரு விளக்கத்தைத் தந்துள்ளது.

டெல்லியில் அஸ்வின் குமார் நிருபர்களிடம் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சியமைக்கும். ஆட்சி அமைப்பதற்காக தேர்தலுக்கு பிறகு புதிய கட்சிகளின் ஆதரவை பெற தற்போதைய கூட்டணிக் கட்சிகளை கண்டிப்பாக இழக்கமாட்டோம் என்றார்.

அதே போல குலாம் நபி ஆசாத் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், தேர்தலுக்கு பிறகு அதிமுகவும் கூட்டணிக்கு கொண்டுவர முயற்சிகள் செய்யப்படும் என ராகுல் காந்தி கூறியதாக அவரது பேட்டி திரித்து கூறப்பட்டுள்ளது. திமுகவுடனான எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில்,

முதல்வர் கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டே சென்னையில் நடக்க இருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இலங்கை பிரச்சினைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திமுக கூட்டணியின் வெற்றியை தடுக்க இது போன்று பொய்யான, மோசமான தகவல்களை பரப்புகிறார் ஜெயலலிதா என்றார்.

ராகுல் காந்தி தனது பேட்டியில் அதிமுக காங்கிரசுடன் கருத்து ஒற்றுமை கொண்ட கட்சி என்று சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, அவர் அப்படிச் சொல்லவில்லை. கருத்து ஒற்றுமையுள்ள கட்சி என்றால் தமிழகத்தில் திமுக மட்டும் தான் என்றார்.

இப்படி ஆளாளுக்கு விளக்கம் தர வேண்டிய நிலைமை ஏன் வந்தது?. ஏதோ புகைவதால் தானே?.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+