7 முறை விபத்துகளை சந்தித்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்.. வெள்ளிக்கிழமைகளிலேயே நடக்கிறதா? உண்மை என்ன?
டெல்லி: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகள் பொதுவாக வெள்ளிக்கிழமைகளில்தான் நிகழ்கிறது என சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரப்பி விடப்படுகிறது. இதன் உண்மை தன்மையை விவரிக்கிறது இந்த செய்தி.
ஒடிஷாவின் பாலசோர் அருகே வெள்ளிக்கிழமை இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் விபத்துக்குள்ளானது. பெங்களூர்- ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்த விபத்தில் சிக்கின. இவ்விபத்தில் 294 பேர் மரணம் அடைந்துள்ளனர்; 900 பேர் காயமடைந்தனர்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதில் ஒன்றுதான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகள் வெள்ளிக்கிழமைகளில் நிகழ்கின்றன என்பதும். இது உண்மைதானா?
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சந்தித்த விபத்துகள்:
2002 மார்ச் 15 (வெள்ளிக்கிழமை): ஹவுரா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. ரயில்வே தண்டவாளம் சரியாக பராமரிக்கப்படாததால் இவ்விபத்து ஏற்பட்டது.
2009 பிப்ரவரி 13 (வெள்ளிக்கிழமை): ஹவுரா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிஷாவின் ஜெய்பூர் கியோஞ்ஹர் ரோடு அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.
2011 டிசம்பர் 6 (செவ்வாய்க்கிழமை): ஆந்திராவின் நெல்லூர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இதில் 32 பலியாகினர்.
2012 ஜனவரி 14 (சனிக்கிழமை): சென்னை- ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் லிங்கராஜ் ரயில்வே நிலையம் அருகே பொதுப்பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
.
2013 நவம்பர் 19 (செவ்வாய்க்கிழமை): ஆந்திராவின் சித்தூர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்- சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பலியாகினர்.
2015 ஏப்ரல் 18 (சனிக்கிழமை): ஆந்திராவின் நிடதவோலு ரயில் நிலையத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் தீ பிடித்தது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
2023 ஜூன் 2 (வெள்ளிக்கிழமை) : ஒடிஷாவின் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின. 294 பேர் பலியாகினர்.

Fact Check
வெளியான செய்தி
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எதிர்கொள்ளும் விபத்துகள் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகின்றன.
முடிவு
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துகள் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நிகழ்கிறது என்பதில் எவ்வித உண்மையும் இல்லை. பல்வேறு காரணங்களால் விபத்துகள் திடீரென ஏற்படுகின்றன என்பதுதான் உண்மை.












Click it and Unblock the Notifications