ஜி20 மாநாடு.. காருக்கு மட்டும் 400 கோடி செலவு செய்யும் மோடி அரசு! தீயாக பரவும் தகவல்! உண்மை என்ன
டெல்லி: ஜி20 உச்சி மாநாடு விரைவில் நடக்கவுள்ள நிலையில், இதற்காக மத்திய அரசு 400 கோடி ரூபாய் செலவில் 50 புல்லட் ப்ரூஃப் கார்களை வாங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
உலகின் மிகவும் பவர்ஃபுல்லான அமைப்புகளில் ஒன்றாக ஜி20 அமைப்பு இருக்கிறது. ஜி20 அமைப்பு தலைமை பொறுப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டுக்கும் வழங்கப்படும்.

அதன்படி கடந்தாண்டு இந்தோனிஷியா தலைமை பொறுப்பில் இருந்த நிலையில், இந்தாண்டு தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இன்னும் சில மாதங்களில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது.
கார்கள்: இதற்கிடையே ஜி20 மாநாட்டிற்காக இந்தியா 50 புல்லட் ப்ரூப் ஆடி கார்களை வாங்க உள்ளதாக இணையத்தில் தகவல் பரவியது. இதனை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகாய் என்பவரும் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். முக்கிய அரசியல் தலைவரே பகிர்ந்த நிலையில், நாட்டில் இப்போது இருக்கும் பிரச்சினைக்கு இதுபோல 400 கோடிக்கு கார்களை வாங்குவது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
அதாவது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகேத் கோகாய் தனது ட்விட்டரில், "இது ஒரு அதிர்ச்சிகரமான செய்தி.. 2024 தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் இந்த 2 நாள் விளம்பர நிகழ்வுக்காக மோடி அரசு 400 கோடி ரூபாய் செலவில் 50 புல்லட் ப்ரூஃப் கார்களை வாங்குகிறது. இதில் விஷயம் என்னவென்றால் இந்த 50 கோடி கார்களை வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே அவர்கள் பயன்படுத்தப் போகிறார்கள்.

திரிணாமுல் தலைவர்: அதற்குப் பதிலாக ஏற்கனவே இருக்கும் புல்லட் ப்ரூப் கார்களை பயன்படுத்தலாம். இல்லையென்றால் புல்லட் ப்ரூப் கார்களை வாடகைக்கு எடுத்திருக்கலாம். இருப்பினும், மோடி தனது தற்பெருமைக்காக உலக தலைவர்களை மகிழ்விக்க இரண்டு நாள் பயணத்திற்கு இந்த கார்களை வாங்குகிறார். அதை 2024 தேர்தலுக்கான ஒரு பிஆர் வேலையாகவும் அவர் நிச்சயம் பயன்படுத்திக் கொள்வார்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.
எம்பி ஒருவரே இந்த செய்தி பகிர்ந்த நிலையில், பலரும் இதை உண்மை என நம்பினர். மேலும், இரண்டு நாள் நிகழ்வுக்கு இத்தனை கோடி செலவில் கார்களை வாங்கியிருக்கத் தேவையில்லை என்றும் எம்பி கூறியதை போலவே வாடகைக்கு எடுத்திருக்கலாம் என்றும் பலரும் கருத்துகளைத் தெரிவித்தனர். இதனால் இந்த போஸ்ட் உடனடியாக டிரெண்டிங் ஆனது.
விளக்கம்: இதற்கிடையே பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் பேக்ட் செக் பிரிவான பிஐபி இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளது. 50 புல்லட் ப்ரூப் கார்களை வாங்க அரசு ₹400 கோடி செலவிடுகிறது என்று இணையத்தில் பரவும் தகவல் போலியானது என்று அவர்கள் தங்கள் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளனர். மேலும், நிகழ்ச்சிக்கு என்ன ஏற்பாடு செய்துள்ளனர் என்பதையும் விளக்கமளித்துள்ளனர்.
அதாவது ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு 20 ஆடி புல்லட் ப்ரூப் கார்களை 18 கோடிக்கு வாடகைக்கு எடுத்துள்ளது. மேலும், இந்த நிகழ்வுக்காக எந்தவொரு புதிய கார்களையும் வாங்கவில்லை என்றும் அதேநேரம் உலக தலைவர்கள் வருகைக்கு இதுபோல புல்லட் ப்ரூப் கார்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதாவது விவிஐபிகளின் வருகைக்காக புல்லட் ப்ரூப் கார்கள் பயன்படுத்தப்படுவது உண்மை தான் என்ற போதிலும் மத்திய அரசு புதிதாக எந்தவொரு காரையும் வாங்கவில்லை. அவர்கள் கார்களை லீசுக்கு மட்டுமே எடுத்துள்ளனர். பிஐபி விளக்கமளித்த நிலையில், சம்மந்தப்பட்ட செய்தி நிறுவனங்களும் அந்த குறிப்பிட்ட செய்தியை மாற்றிவிட்டனர்.

Fact Check
வெளியான செய்தி
ஜி20 மாநாட்டிற்காக மத்திய அரசு ரூ.400 கோடி செலவில் 50 கார்களை வாங்குகிறது.
முடிவு
ஜி20 மாநாட்டிற்கு புதிய கார்கள் எதுவும் வாங்கப்படவில்லை. வாடகைக்கு மட்டுமே எடுக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications