ஏன் மேடம் இவ்வளவு அவசரம்.. ஆர்டிஓவிடம் நேருக்கு நேர் கேட்ட தென்றல் குமார்! ஸ்ட்ரிக்டாக பேசிய ஆபீசர்!
வேலூர்: வேலூர் அருகே நீதிமன்ற உத்தரவின் படி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டை இடிக்க வந்த வருவாய்த் துறையினரை கண்டித்து பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த உரிமையாளரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாக பேச வந்த தவெக எம்.எல்.ஏ. தென்றல் குமார் அதிகாரிகளிடம் கேள்வி கேட்ட நிலையில், பெண் அதிகாரி உறுதியாக பேசியுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கணவாய்மோட்டூர் பகுதியில் நடராஜ் என்பவர் விவசாயம் செய்து வருகிறார்இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக வீடு கட்டி உள்ளார். புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டின் ஒரு பகுதி வனத்துறைக்கு சொந்தமான இடம் என புகார் வந்தது.
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் அளவீடு செய்து உறுதி செய்யப்பட்ட நிலையில் வீட்டை இடிக்குமாறு வனத்துறையினர் வருவாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். இந்த நிலையில் இது குறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள வீட்டை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இன்று வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டை இடிக்க சென்றனர். அப்பொழுது வீட்டின் உரிமையாளர் நடராஜ் வீட்டின் மொட்டை மாடியில் ஏறி உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அருகில் இருந்த தீயணைப்பு வாகனம் மூலம் அவர் மீது தண்ணீரை அடித்து கீழே அழைத்து வந்தனர்.
மேலும் ஜேசிபி வாகனம் முன்பு பெண்கள் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். மேலும் தற்போது சம்பவ இடத்தில் குடியாத்தம் கோட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டை இடித்தனர்.
அப்போது அங்கு வந்த கே.வி.குப்பம் எம்.எல்.ஏ தென்றல் குமார் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகப் பேசினார். " நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரம் உங்களுக்கு இல்லைனா வேற யார் கிட்ட சொல்லணும்..? இவ்வளவு அவசரத்தை எல்லா நிர்வாகத்துலயும் காட்டுறீங்களா" என கோட்டாட்சியரிடம் பேசினார்.
அப்போது அங்கிருந்த பெண் அதிகாரி," சார் நீங்க எதுவா இருந்தாலும் என்கிட்ட நேரடியா கேளுங்க..? மறைமுகமா கேட்காதீங்க..? நீதிமன்ற உத்தரவை பின்பற்றுகிறோம், வேறு எதுவும் செய்ய முடியாது' என கோட்டாட்சியர் திட்டவட்டமாக பேசினார். இதனால் வேறு வழியின்றி அங்கிருந்து எம்.எல்.ஏ. தென்றல் குமார் புறப்பட்டுச் சென்றார்.














Click it and Unblock the Notifications