பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சிக்காக இதுவரை ரூ.830 கோடி செலவிடப்பட்டுள்ளதா? உண்மை என்ன
டெல்லி: பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி இன்று 100-வது அத்தியாத்தை எட்டியது. இதையொட்டி நாடு முழுவதும் இந்த நிகழ்ச்சியை கேட்க பாஜக சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தது. இதனிடையே, மன் கி பாத் நிகழ்ச்சிக்காக இதுவரை ரூ.830 கோடி செலவிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இது குறித்து பிஐபி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 -ஆம் ஆண்டு பிரதமரகாக பதவியேற்றார். அப்போது முதல், மன் கி பாத் (மனதின் குரல்) எனும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது.

இதன் முதல் ஒளிபரப்பு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி விஜயதசமி பண்டிகையின்போது தொடங்கியது. முதல் நிகழ்ச்சியை 66.7 சதவீதம் பேர் கேட்டனர். தனது உரையின்போது ஒவ்வொரு மாதமும் நடைபெறும் முக்கிய நிகழ்வுக்ள், தனி நபரின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாட்டு மக்களிடம் அவர் பகிர்ந்து கொள்வார்.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பிரதமர் மோடி, கொரோனா குறித்த பல்வேறு தகவல்களை தனது உரையில் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் இந்த மன் கி பாத் நிகழ்ச்சி வானொலி மட்டும் இன்றி யூடியூப் சேனலிலும் இந்த ஒலிபரப்பாகும். அதேபோல் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயக்கும் தூர்தர்ஷனின் அனைத்து மொழி சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி இன்று 100-வது அத்தியாத்தை எட்டியது. இதையடுத்து மனதின் குரல் நிகழ்ச்சியை நாடு முழுவதும் மக்கள் கேட்க சிறப்பு ஏற்பாடுகளை பாஜக செய்து இருந்தது. 100-வது அத்தியாயம் என்பதால் இந்த நிகழ்ச்சியை கேட்க தமிழகத்திலும் சிறப்பு ஏற்பாடுகளை பாஜக செய்து இருந்தது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பெரிய திரையில் மன் கி பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிரதமர் மோடியின் மனதின் குரல் உரை 100-வது அத்தியாத்தை எட்டியதால் சிறப்பு கவனம் செலுத்தி இதை மக்கள் மத்தியில் பாஜக கொண்டு சேர்த்த நிலையில், பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி விளம்பரத்திற்காக இதுவரை 830 கோடி செலவு செய்யப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
அதாவது ஒரு நாள் மனதின் குரல் நிகழ்ச்சிக்காக மட்டும் 8.3 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. இந்த நிலையில், மத்திய அரசின் பிஐபி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ரூ.8.3 கோடி என்பது இதுவரை மன் கி பாத் நிகழ்ச்சிக்கான மொத்த செலவு எனவும் ஒவ்வொரு எபிசோட்டிற்குமான விளம்பரம் என கருதி வெளியிடப்பட்டு இருக்கும் அந்த ட்விட் பதிவு பொய்யானது என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

Fact Check
வெளியான செய்தி
பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை விளம்பரபடுத்துவதற்கான செலவு என இதுவரை ரூ.830 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது.
முடிவு
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் இத்தகைய பதிவில் உண்மையில்லை. ரூ. 8.3 கோடி என்பது இன்றைய தேதி வரையிலான மொத்த செலவு ஆகும். ஒரே ஒரு எபிசோட்டிற்கானது அல்ல.












Click it and Unblock the Notifications