Fact Check - ரஜினியிடம் வட்டிக்கு வாங்கினாரா மயில்சாமி? தள்ளுபடி என அறிவித்ததாக பரவும் ஊடக படம்?
நடிகர் மயில்சாமி தனக்கு 12 ஆண்டாக வட்டி செலுத்தி வருவதாக நடிகர் ரஜினிகாந்த் பேசினார் என செய்தி பகிரப்பட்டு வரும் நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து அலசுவோம்
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி அண்மையில் காலமான நிலையில் அவர் தன்னிடம் வாங்கிய கடனுக்காக 12 ஆண்டுகளாக வட்டி செலுத்தி வந்ததாகவும், அதை தள்ளுபடி செய்வதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியானதை போல் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மை தன்மை குறித்து அலசுவோம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சினிமா நகைச்சுவை நடிகராகவும் தமிழ் மக்களின் மனதை கவர்ந்த மயில்சாமி கடந்த 19 ஆம் தேதி சிவராத்திரி நிகழ்ச்சி முடிந்த பிறகு மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவரது மறைவு தமிழ் திரையுலகினர், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏராளமான திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

ரஜினிகாந்த் அஞ்சலி
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அவர், "எம்ஜிஆரின் தீவிர ரசிகர் மயில்சாமி. அவர் சிவனின் அதி தீவிர பக்தர். என்னுடைய நீண்டகால நண்பர். மயில்சாமி என்னை கடந்த முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது என்னால் பேச முடியவில்லை.

மயில்சாமியின் கடைசி ஆசை
திருவண்ணாமலையில் இருந்து ஒவ்வொரு முறை கார்த்திகை தீபத்தின் போதும் மயில்சாமி எனக்கு கால் செய்வார். சிவராத்திரி அன்று மயில்சாமி இறந்தது தற்செயலானது அல்ல. அது சிவன் கணக்கு. சிவபெருமான் தன்னுடைய தீவிர பக்தரை சிவராத்திரி அன்று அழைத்துக்கொண்டார். டிரம்ஸ் மணியிடம் ரஜினி சிவன் கோவிலில் பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன்." என்றார்.

டிரெண்டாகும் செய்தி
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் முன்னணி இழலின் லோகோவுடன் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகும் நியூஸ் கார்டு போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. "மயில்சாமி எனது நீண்ட கால நண்பர்" என்ற தலைப்பில் அந்த செய்தி கார்டு வெளியிடப்பட்டு இருக்கிறது.

ரஜினியிடம் வட்டிக்கு வாங்கினாரா மயில்சாமி
அதில், "கடந்த 12 ஆண்டுகளாக எனக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி வந்தார். இனி அந்த கடனை எப்படி அடைப்போன் என அவரது குடும்பத்தினர் கவலையடைய வேண்டாம். அதை நான் முழுமையாக தள்ளுபடி செய்கிறேன். இது என் கடமை." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பலரும் பகிர்ந்து ரஜினிகாந்தை விமர்சித்து வருகின்றனர்.

உண்மை என்ன?
இதன் உண்மை தன்மை குறித்து ஒன் இந்தியா சார்பில் நான் ஆய்வு செய்தோம். குறிப்பிட்ட அந்த ஊடகத்தின் சமூக வலைதள பக்கத்தில் அதுபோன்ற எந்த செய்தியும் வெளியாகவில்லை. ரஜினிகாந்த் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கொடுத்த முழு பேட்டியையும் நாம் கேட்டோம். அதிலும் அவர் அதுபோல் எதுவும் சொல்லவில்லை.

முடிவு
சம்பந்தப்பட்ட ஊடகத்தின் நியூஸ் கார்டுக்கு பயன்படுத்தப்படும் FONT (எழுத்து வடிவமும்) ரஜினி இவ்வாறு சொன்னதாக பகிரப்பட்டு வரும் படத்தில் இருக்கும் எழுத்து வடிவமும் வேறாக உள்ளன. ரஜினி மயில்சாமி குறித்து பேசிய செய்தியை வெளியிட்ட அந்த ஊடகத்தின் கார்டை எடுத்து அவர் தெரிவித்த உண்மையான கருத்துக்களை நீக்கிவிட்டு எடிட் செய்யப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. எனவே இதை வதந்தி என்ற முடிவுக்கு வருகிறோம்.

Fact Check
வெளியான செய்தி
மறைந்த நடிகர் மயில்சாமி ரஜினியிடம் கடன் வாங்கி 12 ஆண்டுகளாக வட்டி செலுத்தி வந்ததாகவும், அதை ரஜினி தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்ததாக பரவும் செய்தி
முடிவு
ரஜினிகாந்த் அதுபோல் பேசவே இல்லை. தனியார் ஊடகத்தின் நியூஸ் கார்டை எடிட் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications