ரூ.1000 இல்லை.. ரூ.3000! அனைத்து பெண்களுக்கும் அள்ளி தரும் மோடி அரசு! தீயாக பரவும் தகவல்! உண்மை என்ன
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசு, நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.3,000 வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக இணையத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது. அது உண்மை தானா.. மத்திய அரசிடம் அப்படியொரு திட்டம் நிஜமாகவே இருக்கிறதா என்பது குறித்துப் பார்க்கலாம்,
கடந்த 2021இல் நடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்தது. இதில் முக்கியமானது தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற திட்டமும் ஒன்று.

இதற்கு அப்போதே பொதுமக்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. திமுக ஆட்சி அமைந்தது முதலே பலரும் இந்த உரிமை தொகை திட்டம் குறித்து எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்தச் சூழலில் தான் இந்தாண்டு பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியானது.
மத்திய அரசு: இது குறித்த விரிவான அறிவிப்புகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதற்குக் கலைஞர் மகளிர் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.. இதற்கு பல்வேறு விதமான விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் யார் பயன் பெறுவார்கள்.. யார் பயன் பெற மாட்டார்கள் என்பது குறித்த விரிவான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டிருந்தது.
இதில் நிலம் வைத்திருப்போர். சொந்தமாக கார் வைத்திருப்போர், 3600 யூனிட் மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது. அதாவது இரண்டு மாதத்திற்கு 600 யூனிட் மின்சார பயன்பாடு மட்டுமே இருக்க வேண்டும். இப்படி மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே சற்று அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
உரிமை தொகை: தமிழ்நாட்டைப் போலவே மேலும் சில மாநிலங்களிலும் இதுபோல மகளிர் உதவித் தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்புகள் இருக்கிறது.. இதற்கிடையே இணையத்தில் இது தொடர்பாகத் தகவல் ஒன்று டிரெண்டாகி வருகிறது. 'Tnf Today' என்ற பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
மத்திய அரசு 'லாட்லி பெஹ்னா யோஜனா' 'Laadli Behna Yojana' என்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் இத்திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ₹ 3,000 வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. இதனைப் பலரும் உண்மை என நினைத்து தங்கள் சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்து வந்தனர். இதற்கிடையே இது தொடர்பாக மத்திய அரசின் PIB பேக்ட்செக் அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
உண்மை என்ன: இது தொடர்பாக வீடியோவை பகிர்ந்த பிஐபி இது முற்றிலும் போலியான தகவல் என்று விளக்கம் கொடுத்துள்ளது. மேலும், மத்திய அரசு இதுபோல எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்றும் அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
அதேநேரம் இதுபோன்ற பொய்யான செய்திகள் இணையத்தில் பரவுவது இது முதல் முறை இல்லை.. இதற்கு முன்பும் இணையத்தில் மற்றொரு போலி செய்தி பரவியது. அதாவது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில், செல்போன் டவர் வைக்க அனுமதி அளிப்போருக்கு 30 லட்சம் ரூபாய் பணமும் வேலையும் அளிக்கப்படும் என்ற பொய்யான தகவல் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை இந்தியாவில் தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இதுபோல குடும்பத் தலைவிகளுக்கு உதவும் வகையில் திட்டம் அமலில் இருக்கிறது. இருப்பினும், நாடு முழுக்க 3000 வழங்கும் திட்டம் எதுவும் அமலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
இந்தியாவில் அனைத்து பெண்களுக்கும் மத்திய அரசு மாதம் ரூ.3000 வழங்கவுள்ளது.
முடிவு
இது முற்றிலும் பொய்யான தகவல் என மத்திய அரசின் பிஐபி விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications