Fact Check: பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் நாராயணசாமி சிலையை அகற்றிவிட்டு கலைஞர் சிலையா? உண்மை என்ன
சென்னை: பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய நுழைவு வாயிலில் உள்ள உழவர் உரிமைப் போராளி நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றிவிட்டு, அங்கு கருணாநிதி சிலையை நிறுவ அரசு முயல்வதாக சீமான் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பொய்யானது என பெரம்பலூர் நகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றிவிட்டு, அங்கு கருணாநிதி சிலையை நிறுவ அரசு முயல்வதாக குற்றம்சாட்டினார். இந்த தகவல் பொய்யானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமான் சொன்ன தகவல்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி பெருமதிப்பிற்குரிய நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவச் சிலையை பொய்க்காரணங்களை கூறி அகற்றிவிட்டு, அதே இடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலையை நிறுவ திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
உழவர்கள் தனித்திருந்தால் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது என்பதை உணர்ந்து, வேளாண் பெருங்குடி மக்களை ஒன்றிணைத்து உழவர் இயக்கங்களை கட்டமைத்த பெருமகன் நாராயணசாமி அவர்கள். அவரது அயராத முயற்சியால் தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகாவில் பேராசிரியர் நஞ்சுண்ட சாமி தலைமையிலும், ஆந்திராவில் சங்கர் ரெட்டி தலைமையிலும், மராட்டியத்தில் சரத் ஜோசி தலைமையிலும், உத்தரப்பிரதேசத்தில் மகேந்திர சிங் திகாயத் தலைமையிலும் மாநில உழவர் இயக்கங்கள் உருவாகின. வேளாண்மைக்கு இலவச மின்சாரம், வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் உரிமைப்போராட்டங்களை முன்னின்று நடத்தி, அதற்காக சிறை தண்டனையும் பெற்ற நாராயணசாமி அவர்கள், உழவினை ஒரு தொழிலாக அரசு அறிவிக்க வேண்டுமென்றும் கனவு கண்டவர்.
அத்தகைய பெருமைக்குரிய ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவச்சிலையை ஆளும் கட்சியின் அழுத்தத்தால் பெரம்பலூர் பேருந்து நிலைய வாயிலிருந்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் திமுகவின் முன்னாள் தலைவர் ஐயா கருணாநிதி அவர்களின் சிலையை அமைத்திட முயல்வது அப்பட்டமான அடையாள அழிப்பாகும்.

திமுக அரசின் இத்தகைய எதேச்சதிகார முடிவிற்கு எதிராக பல்வேறு உழவர் அமைப்புகளும், வேளாண் சங்கங்களும் ஒன்றிணைந்து நீதிமன்றத்தில் தொடுத்துள்ள சட்டப்போராட்டத்திற்கும், முன்னெடுக்கவுள்ள அறப்போராட்டங்களுக்கும் நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவை அளித்து கோரிக்கை வெல்ல துணைநிற்கும் எனத் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு அரசு பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வாயிலில் ஐயா கருணாநிதி அவர்களின் சிலையை நிறுவும் முடிவை கைவிட்டு, உழவர் அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி ஐயா நாராயணசாமி நாயுடுவின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டுமென கூறியிருந்தார் சீமான்.
உண்மை என்ன?
இந்நிலையில், இதுதொடர்பாக, பெரம்பலூர் நகராட்சி ஆணையரிடம் விளக்கம் பெற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம். உண்மை சரிபார்ப்புக்குழு வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு:

விளக்கம்
"பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய நுழைவு வாயிலில் நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவச் சிலையை அகற்றிவிட்டு. முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் சிலையை நிறுவ அரசு முயல்வதாக" நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது முற்றிலும் பொய்யான தகவல். "பெரம்பலுார் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடு திருவுருவச் சிலை முகப்பு வாயிலில் விபத்துகள் நிகழும் வண்ணம் அமைந்துள்ளது. எனவே பாதுகாப்பு கருதி சிலையை அங்கிருந்து கிழக்கு பகுதிக்கு மாற்ற அனுமதி கோரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையத்தில் கலைஞர் அவர்களின் சிலை வைப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது முற்றிலும் பொய்யான தகவல்" என்று பெரம்பலூர் நகராட்சி ஆணையர் விளக்கமளித்துள்ளார்.
தவறான தகவலைப் பரப்பாதீர்!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய நுழைவு வாயிலில் உள்ள உழவர் உரிமைப் போராளி நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றிவிட்டு, கருணாநிதி சிலையை நிறுவ அரசு முயல்வதாக சீமான் தெரிவித்துள்ளார்.
முடிவு
விபத்துகள் அதிகம் நடப்பதால் சிலையை அருகில் வேறு பகுதிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது, கலைஞர் சிலை வைக்க திட்டமில்லை என பெரம்பலூர் நகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications