Fact Check - எதே.. மும்பையில் ரயிலே காணாம போச்சா? அது எப்படிங்க நடக்கும்! மத்திய ரயில்வே பரபர கடிதம்
நாக்பூரில் இருந்து 90 கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு மும்பை சென்ற சரக்கு ரயில் மாயமானதாக பரவிய தகவலின் உண்மை குறித்து மத்திய ரயில்வே விளக்கம் அளித்து உள்ளது.
மும்பை: 90 கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்ற சரக்கு ரயில் மாயமாகி இருப்பதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில், அது தவறான தகவல் என்றும் காணாமல் போனதாக கூறப்பட்ட ரயில், உரிய ரயில்நிலையத்துக்கு சென்று சேர்ந்துவிட்டதாக மத்திய ரயில்வே விளக்கம் அளித்து இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி கடந்த பிப்ரவரி 1 புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று 14 நாட்களாகியும் உரிய ரயில் நிலையத்துக்கு சென்று சேராமல் மாயமாகி இருப்பதாக நேற்று சமூக வலைதளங்கள் மற்றும் முன்னணி ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின.
90 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற அந்த ரயிலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருந்ததாகவும், இதுவரை அந்த ரயிலை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சரக்கு ரயில்
நாக்பூரில் உள்ள இன்லேண்ட் கண்டெய்னர் டிப்போவில் இருந்து கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி PJT1040201 என்ற எண் கொண்ட சரக்கு ரயில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பை நோக்கி புறப்பட்டது. 90 கண்டெய்னர்களுடன் சென்ற இந்த ரயில் 5 நாட்களுக்குள் மும்பைக்கு சென்றடைய பயண திட்டம் வகுக்கப்பட்டது.

14 நாட்களாக மாயம்
ஆனால் 14 நாட்களாகியும் அந்த சரக்கு ரயில் விலை உயர்ந்த பொருட்களை கொண்ட கண்டெய்னர்களுடன் மும்பைக்கு சென்றடையவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஒம்பர்மலி என்ற ரயில் நிலையத்தை அந்த சரக்கு ரயில் கடந்து சென்றதாகவும், ரயில் தற்போது எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பல கோடி மதிப்பு பொருட்கள்
அந்த ரயிலில் இருந்த 90 கன்டெய்னர்களில் ஏற்றுமதி செய்வதற்கான அரிசி மூட்டைகள், ரசாயன பொருட்கள், காகிதங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவை இருந்ததாகவும், இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. சரக்கு ரயில் காணாமல் போனதால் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டது.

கண்டுபிடிக்க முடியவில்லையாம்
ரயில் பெட்டிகள் தற்போது எங்கு உள்ளது என்பதை கண்காணிக்கும் FOIS என்ற தொழில்நுட்பம் மூலமாகவும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்பட்டது. கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் ரயில்வே அதிகாரிகள் காணாமல் போனதாக கூறப்படும் சரக்கு ரயிலைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

உண்மை என்ன?
இந்த நிலையில் இந்த தகவலை மத்திய ரயில்வே அதன் ட்விட்டர் பக்கத்தில் மறுத்து உள்ளது. ஆங்கில இணையதளமான ஹிட்டவாடாவில் வெளியான இந்த செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து மத்திய ரயில்வே அது தவறான தகவல் என்று மறுத்து உள்ளது. அத்துடன் அந்த இணையதள ஆசிரியருக்கு இது தொடர்பாக விளக்கமளித்து கடிதம் எழுதி இருக்கிறது.
|
மத்திய ரயில்வே கடிதம்
அதில், "90 கண்டெய்னர்களுடன் சரக்கு ரயில் காணாமல் போனதாக வெளியான செய்தி தவறானது. நாக்பூரில் இருந்து பிப்ரவரி 1 ஆம் தேதி மும்பைக்கு புறப்பட்ட ரயில் பிப்ரவரி 5 ஆம் தேதி புசாவல் மண்டலத்திற்கு உட்பட்ட ஷேகாவுன் ரயில்நிலையத்தை சென்றடைந்துவிட்டது. ரயில் காணாமல் போகவில்லை. கண்டெயிண்டர்கள் அது போகவேண்டிய இடமான JNPT துறைமுகத்தையும் அடைந்துவிட்டன. இந்த தவறாக தகவல் வெளியானது தொடர்பாக விசாரிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
பிப்ரவரி 1 ஆம் தேதி நாக்பூரில் இருந்து 90 கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு மும்பை நோக்கி சென்ற சரக்கு ரயில் மாயமாகி உள்ளது.
முடிவு
பிப்ரவரி 5 ஆம் தேதி அந்த சரக்கு ரயில் இலக்கை அடைந்துவிட்டதாக மத்திய ரயில்வே விளக்கம்












Click it and Unblock the Notifications