சுகர், எலுமிச்சை, தேங்காய் எண்ணெய்! கேன்சர் கிட்டவே வராது சொல்றாங்க! எந்தளவு பலன் தரும்! உண்மை என்ன
டெல்லி: கேன்சர் பாதிப்பை எப்படி எளிமையாகக் குணப்படுத்த முடியும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்பதைப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் உடல்நிலை குறித்த அனைத்து தகவல்களுமே இணையத்தில் கொட்டி கிடக்கிறது. இது ஒரு வகையில் பார்த்தால் முக்கியமான தகவல்கள் பொதுமக்களிடையே சென்று சேர பெரியளவில் பயன்படுகிறது.

அதேநேரம் இணையத்தில் இப்படிப் பரவும் அனைத்து செய்திகளுமே உண்மையான செய்திகள் என்று நம்மால் சொல்ல முடியாது. அப்படி இப்போது இணையத்தில் கேன்சரை குணப்படுத்துவது குறித்த தகவல் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
கேன்சர்: அதாவது ஒருவர் சர்க்கரை எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டு, வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் மற்றும் ஆர்கானிக் தேங்காய் எண்ணெய்யைக் குடித்தால் கேன்சர் குணமடையும் என்று டாக்டர் குப்தா என்பவர் சொன்னதாகத் தகவல் பரவி வருகிறது. இது உண்மை தானா.. உண்மையாகவே இவை எந்தளவுக்கு கேன்சர் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் என்பதை நாம் பார்க்கலாம்.
மருத்துவர் சொன்னதாக இது குறித்த படங்களும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் மொத்தம் 3 பாயிண்டுகளை சொல்லியுள்ளார். முதலில் சர்க்கரை எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டுமாம். ஏனென்றால். உடலில் சர்க்கரை இல்லாமல் போனால், சர்க்கரை செல்கள் இயற்கையாகவே உயிரிழந்துவிடும்.
சிகிச்சை: அடுத்து ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து 3 மாதங்கள் சாப்பிடுவதற்கு முன் காலையில் குடிக்க வேண்டும். கீமோதெரபியை விட சூடான எலுமிச்சை நீர் 1000 மடங்கு சிறந்தது மற்றும் பாதுகாப்பானது என்று மேரிலாண்ட் மருத்துவ ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இதுவும் கேன்சர் செல்களை ஒழித்துக் கட்ட உதவும்.
அடுத்து மூன்றாவதாகத் தினசரி காலை மற்றும் மாலை 3 டேபிள் ஸ்பூன் ஆர்கானிக் தேங்காய் எண்ணெய்யைக் குடித்தால் கேன்சர் குறையும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாகவே இதைச் செய்தால் கேன்சர் குணமடையும் எனத் தான் சொல்லி வருவதாகவும் இதன் மூலம் பல ஆயிரம் பேர் கேன்சரின் கோரப் பிடியில் இருந்து தப்ப முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படம் கடந்த சில நாட்களாக இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது உண்மை தானா எனப் பார்க்கலாம்.
உண்மை என்ன: இது குறித்து நாம் ஆய்வு செய்ததில் இது கடந்த 2019ஆம் ஆண்டிலேயே இதுபோன்ற தகவல்கள் இணையத்தில் பரவியதை நம்மால் பார்க்க முடிகிறது. சரி தகவல் பழையது ஓகே. அதில் இருப்பவை உண்மையா எனப் பார்க்கலாம்.
முதலில் அவர்கள் சர்க்கரையை எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டால் கேன்சர் செல்கள் உயிரிழந்துவிடும் என்கிறார்கள். இருப்பினும், சர்க்கரை நமக்குக் கெடுதல் தான் என்ற போதிலும் சர்க்கரை இல்லாத உணவுகள் கேன்சர் அபாயத்தைக் குறைக்க அல்லது அது நமது உயிர்வாழும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை...
சொல்லப்போனால் சர்க்கரையை முழுமையாக நிறுத்துவது நமக்கே ஆபத்தாக முடியவே வாய்ப்புகள் அதிகமாம். சர்க்கரையை முழுமையாக நிறுத்துவது என்பது உடலின் ஆரோக்கியமான செல்களுக்கு செல்லும் அத்தியாவசிய சர்க்கரையும் நிறுத்திவிடும். இதனால் உடல் எடை குறையும், அதேபோல நோய் எதிர்ப்புச் சக்தி பலவீனமடையும். இதனால் கேன்சர் வளர வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.
சிகிச்சை: இரண்டாவது கீமோதெரபியை விடச் சூடான எலுமிச்சை நீர் 1000 மடங்கு சிறந்தது என்கிறார்கள். இது குறித்த சுகாதார ஆராய்ச்சிக்கான தேசிய மையம் ஒரு ஆய்வுக் கட்டுரையையே வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் எலுமிச்சை நிச்சயம் அனைத்து வித கேன்சரை தடுக்காது என்றும் அவை கீமோதெரபிக்கு மாற்று எனச் சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
அடுத்து தேங்காய் எண்ணெய் கேன்சரை குணப்படுத்தும் என்கிறார்கள். கல்லீரல் மற்றும் வாய் புற்றுநோய்க்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுவது உண்மை தான். இருப்பினும், அவை நாம் வீடுகளில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் இல்லை. மருத்துவச் சிகிச்சைக்காகத் தனியாக உருவாக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் மட்டுமே சிகிச்சைக்குப் பயன்படும்.
போலி செய்திகள் என்பது இப்போது ஒட்டுமொத்தமாக இணையம் சந்திக்கும் ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. இருப்பினும், உடல்நிலை சார்ந்து போலி செய்திகள் பரவும் போது அவை, மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, இதுபோன்ற தகவல்களை நம்பாமல் மருத்துவமனைக்குச் செல்வதே சரியானதாக இருக்கும்.

Fact Check
வெளியான செய்தி
சுகரை முழுமையாக தவிர்த்து, தேங்காய் எண்ணெய், சூடான எலுமிச்சை சாறு ஆகியவற்றை சாப்பிட்டால் கேன்சர் ஆபத்து நீங்கும்.
முடிவு
இதற்கு மருத்துவ ரீதியாக எந்தவொரு சான்றும் இல்லை.. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல்












Click it and Unblock the Notifications