Fact check: முதலமைச்சர் அலுவலகத்தில் 3 அடிக்கு தண்ணீர் தேங்கியதா? உண்மை நிலவரம் என்ன தெரியுமா?
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 3 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளதாக ஒரு படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
குறிப்பாக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரும், அதிமுக ஐடி விங் நிர்வாகி கோவை சத்யன் ஆகியோரும் அந்தப் படத்தை தங்கள் டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டு விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான உண்மையை ஆராய்ந்ததில் முதல்வர் அலுவலகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதாக வலம் வரும் படம் 7ஆண்டுகள் முந்தையது எனத் தெரியவந்துள்ளது.

தொடர் மழை
சென்னை முழுவதும் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் மழைநீர் தொடர்பான விவாதங்கள் தான் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இடையே நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்தண்டு மழைநீர் பல இடங்களில் வடிந்துவிட்டதாகவும் இதனால் மக்கள் நிம்மதி அடைந்திருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இல்லை இல்லை எப்போதும் போல் தான் மழைநீர் தேங்கி நிற்கிறது, மழைநீர் வடிகால் திட்டப் பணிகளால் எந்த நன்மையும் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

புதுப்படம் -பழையபடம்
இந்நிலையில் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு மழைநீர் தேங்கி நிற்பதாக சமூக வலைதளங்களில் ஒரு படம் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் படம் அண்மையில் எடுத்த படம் இல்லை என்பதும் 7 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம் என்பதும் கள விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் தற்போதைய படமும் சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படமும் உங்கள் பார்வைக்கு இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

வதந்தி பரப்புவதாக புகார்
முதலமைச்சர் அலுவலகம் பற்றி பாஜக, அதிமுக வதந்தி பரப்புவதாக புகார் கூறும் கொளத்தூர் தொகுதி திமுகவினர், அவதூறு பரப்பியதற்காக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தயாராகி வருகின்றனர். அரசின் நற்பெயருக்கும் மாநகராட்சி நிர்வாகத்துக்கும் மக்கள் மத்தியில் கெட்டப் பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இது போன்ற வேலைகளில் அதிமுக, பாஜக ஈடுபடுவதாக திமுகவினர் கொதிக்கின்றனர்.

மக்கள் சொல்வது என்ன?
இதனிடையே கடந்தாண்டுகளை போல் இந்தாண்டு கொளத்தூர் தொகுதியில் குறிப்பாக முதலமைச்சர் அலுவலகம் அமைந்துள்ள ஜவஹர் சாலையில் மழைநீர் தேங்கவில்லை என அப்பகுதி மக்கள் நேரடியாக தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதாக இணையத்தில் படம் உலா வருகிறது.
முடிவு
கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அலுவலகத்தில் துளியளவு கூட தண்ணீர் தேங்கி நிற்கவில்லை. தண்ணீர் தேங்கி நிற்பதாக உலா வரும் படம் தவறானது பழையது.












Click it and Unblock the Notifications