Fact Check: தமிழ்நாடு அரசின் வருவாயை உயர்த்த கோயில் நகைகள் உருக்கப்படுகிறதா? வேகமாக பரப்பப்படும் வதந்தி
சென்னை: தமிழ்நாட்டின் அரசு வருவாயை அதிகரிக்க, கோயில் நகைகள் பயன்படுத்தப்படுவதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கமளித்திருக்கிறது.
கோயில்களில் காணிக்கை செலுத்துவதை வழிபாட்டின் முக்கிய அம்சமாகவே பக்தர்கள் பார்க்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில், ஸ்ரீரடி சாய்பாபா கோயில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் என பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் விலையுயர்ந்த பொருட்களை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

தலைமுடியாகவும், பணமாகவும், வெள்ளியாகவும், தங்கமாகவும், வைரமாகவும் பக்தர்கள் காணிக்கை அளித்து வருகின்றனர். இதில் பக்தர்கள் வழங்கும் நகைகளை பல வழிகளில் கோயில்கள் சேமிக்கின்றன. அதாவது குறிப்பிட நாட்களுக்கு பிறகு பக்தர் அளித்த நகை காணிக்கைகளை கணக்கிட்டு பார்க்கும்போது அது கிலோ கணக்கில் வந்து விடுகிறது.
சில கோயில்கள் இந்த நகைகளை அப்படியே பாதுகாக்கின்றன. சில கோயில்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக நகைகள் உருக்கப்பட்டு அவை தங்க/வெள்ளி கட்டிகளாக மாற்றப்பட்டு வங்கிகளில் சேமிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டை பொறுத்த அளவில் கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்கள், அர்ச்சகர்கள் போன்றோருக்கு ஊதியம், கோயில் பராமரிப்பு பணிகள் போன்றவற்றையும் இந்து சமய அறநிலையத்துறைதான் செய்து வருகிறது.
இப்படி இருக்கையில், தமிழ்நாடு அரசின் வருவாயை உயர்த்த கோயில் நகைகள் தங்கக் கட்டிகளாக உருக்கப்படுகிறது என்று சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த தகவலை தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு Fact check செய்திருக்கிறது. இதனையடுத்து வெளியிடப்பட்ட விளக்கத்தில், "இது முற்றிலும் பொய்யான தகவல். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் நிர்வகிக்கப்படும் கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்கித் தங்கக்கட்டிகளாக மாற்றி, அவற்றை வங்கிகளில் முதலீடு செய்து வட்டித்தொகை பெறப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் அந்தந்த கோயில்களின் பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். அந்த வருவாயை அரசு பயன்படுத்த முடியாது" என்று தெளிவுப்படுத்தியிருக்கிறது.

Fact Check
வெளியான செய்தி
தமிழ்நாட்டின் அரசு வருவாயை அதிகரிக்க, கோயில் நகைகள் பயன்படுத்தப்படுகிறது
முடிவு
கோயில் நகைகள் உருக்கி தங்க/வெள்ளி கட்டிகளாக மாற்றப்படும். இது மூலம் கிடைக்கும் வருவாய் அந்ததந்த கோயில் பராமரிப்புக்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications