மேகதாதுவில் அணை கூடாது! காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசிமணலில் கட்டலாம்! தமிமுன் அன்சாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட ராசிமணல் பகுதியில் கர்நாடகா அரசு அணை கட்டிக் கொள்ளலாம். மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடக மாநில விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டு தீர்மானத்தின் மீது அவர் பேசுகையில் கூறியிருப்பதாவது: காவிரி நதிநீர் உரிமையை பாதுகாக்கும் வகையில் நமது சட்டசபையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்திருக்கும் முதல்வர் விஜய்க்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

mekedatu dam tamil nadu

அரசியல் அணுகுமுறைகள், கருத்து வேறுபாடுகளை கடந்து காவிரி உரிமைக்காக இந்த அவையில் இருக்கக் கூடிய நாம் எல்லோரும் ஒரே அணையில் இருக்கிறோம் என்ற உணர்வை வெளிப்படுத்த வேண்டிய கடமை இப்போது இருக்கிறது.

இந்த உலகம் 71 சதவீதம் நீராலும், 29 சதவீதம் நிலத்தாலும் சூழப்பட்டிருக்கிறது. ஆனால் உலகமெங்கும் தண்ணீருக்கான போராட்டங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வலுப்பெற்று வருவதை நாம் பார்க்கிறோம்.

நம் இந்தியா பல்வேறு மொழிகள், இனங்கள் கொண்ட துணை கண்டமாகும். இந்த நாட்டில் நதிநீர் பிரச்சனை எழும் போதெல்லாம் மத்திய அரசு தலையிட்டு தீர்க்கமான தீர்ப்பை வழங்க வேண்டும் என நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஒரே நாட்டில் வாழும், ஒரே நாடாளுமன்ற தத்துவத்தை ஏற்றுக் கொண்ட நமக்கு மத்தியில் நதிநீர் பிரச்சனை காரணமாக பிளவு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளை கடந்து ஒரே நதி பயணிப்பதை பார்க்கிறோம்.

உதாரணமாக வட ஆப்பிரிக்காவில் நைல் நதியானது, 11 நாடுகளை கடந்து செல்கிறது. எகிப்து, சூடான், உகாந்தா, எதியோபியா உள்ளிட்ட நாடுகள் பயன்பெறுகின்றன. இந்த 11 நாடுகளை கடந்து செல்லும் நைல் நதி குறித்து ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் ஒரு நிர்வாக அமைப்பு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளுக்கு மத்தியில் பாயும் ஒரு நதி குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு ஒருமைப்பாடு நிலைநிறுத்தப்படுகிறது என சொன்னால் ஒரே நாட்டிலே பாயக் கூடிய நதிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டால் மத்திய அரசு ஒரு தீர்க்கமான தீர்ப்பை வழங்க வேண்டும்.

இதே சட்டசபையில் 6.12.2025 ஆம் ஆண்டு அப்போதைய திமுக அரசு மேகதாதுக்கான தீர்மானத்தை கொண்டு வந்த போது நானும் ஆதரித்து பேசினேன். இப்போது அதே பிரச்சனை எழுந்துள்ளது. இந்த பிரச்சனை தமிழ்நாடு, கேரளா, புதுவை, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களுக்கானது என்பதை மறந்துவிடக் கூடாது.

இப்படிப்பட்ட நிலையில் கர்நாடகாவின் முதல்வராக இருக்கும் டி.கே.சிவக்குமார், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பாட்டிலை சந்தித்து காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என கோரியிருக்கிறார். இது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது. காவிரி மேலாண்மை ஆணையம் அணை கட்டும் திட்டத்தை நிராகரித்திருக்கிறது என்ற உண்மையை நாம் உணர வேண்டும். அவர்களுக்கும் நாம் உணர்த்த கடமைப்பட்டிருக்கிறோம்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலின்றி காவிரியின் குறுக்கே எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் அமைக்கப்பட்டதுதான் காவிரி மேலாண்மை ஆணையம்.

உச்சநீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். காவிரி உரிமையை நாம் முன் வைக்கும் போது ஒரு மாற்று திட்டத்தையும் நாம் முன் வைத்திருக்கிறோம்.

மேகதாது என்பது கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 1000 அடி பள்ளத்தில் இருக்கிறது. அங்கு அணை கட்டினால் கர்நாடக விவசாயிகளும் பாதிக்கப்படுவர் என்று அந்த விவசாயிகளே கூறியிருக்கிறார்கள். அது அடர்ந்த வனப்பகுதி என்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எதிர்த்திருக்கிறார்கள்.

காமராஜர் முதல்வராக இருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கக் கூடிய ராசி மணல் அருகே அணையை கட்டலாம் என அடிக்கல் நாட்டினார். அதற்கான ஆதாரம் ஓகேனக்கல்லில் இருக்கக் கூடிய தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலக கட்டடத்தில் இருக்கிறது.

அந்த இடத்தில் அணை கட்டினால் இரு மாநில மக்களும் சர்ச்சை இன்றி நீரை பகிர்ந்து கொள்ளலாம். அந்த அணையின் இடது புறம் தமிழகத்திலும் வலது புறம் கர்நாடகாவிலும் இருக்கிறது. இரு மாநில விவசாயிகளும் அவரவர் விருப்பத்திற்கேற்ப நீரை பகிர்ந்து கொள்ளலாம் என்பதை உணர்ந்ததால்தான் காமராஜர் அடிக்கல் நாட்டினார்.

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் கர்நாடக விவசாயிகளும் தமிழக விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். ராசிமணலில் இரு மாநில அரசுகளின் அனுமதியுடன் கர்நாடகா அணை கட்டினால் கர்நாடக விவசாயிகள் மட்டும் அல்ல பெங்களூரில் குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். ராமநாதபுரம் முதல் சென்னை வீராணம் வரை எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே ராசிமணலில் அணை கட்ட பரிசீலிக்கலாமே தவிர மேகதாதுவில் அணை கட்டுவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+