விஜய் ஆட்சியை கவிழ்க்க சதி.. திருச்சி நரேஷ் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!
சென்னை: விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவரும், திருச்சியை சேர்ந்தவருமான நரேஷ் வீட்டில் இருந்து கத்தை கத்தையாக ரூ.13 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருச்சியில் உள்ள நரேஷ் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின் போது இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஆவணங்கள், சொத்து ஆவணம், என மொத்தம் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உளுந்தூர்பேட்டை தவெக எம்.எல்.ஏ இளையராஜா என்பர், என்னை திருநாவுக்கரசு என்பவர் செல்போனில் தொடர்புகொண்டு பேசியதாகவும், சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும், தவெக ஆட்சியை கவிழ்க்கும் விதமாக ரூ.35 கோடி வரை பேரம் பேசினார் என்றும், அப்படி இல்லையென்றால் குடும்பத்தினரை அச்சுறுத்தும் வகையில் மிரட்டியதாகவும் பரபரப்பு புகார் ஒன்றினை சென்னை போலீஷ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார்.

இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து யூடியூபர் திருநாவுக்கரசு, அவரது கார் டிரைவர், செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நரேஷ் என்பவர் உள்பட மொத்தம் 9 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நரேஷ் தான் இந்த சதி திட்டத்திற்கு இடைத்தரகராக இரு பக்கமும் இருந்திருக்கிறார் என தெரியவந்தது. இதையடுத்து திருச்சியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து கத்தை கத்தையாக கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.13 லட்சம் ரொக்கம் பறிமுதல்
இதே போன்று அவரது வீட்டில் நடத்திய சோதனையில், சொத்து ஆவணங்கள், ஆட்சியை கவிழ்ப்பதற்காக எந்தெந்த எம்.எல்.ஏக்களிடம் பேச வேண்டும் என்பது தொடர்பான ஆவணங்கள், பணம் கொடுக்கல் வாங்கல் ஆவணங்கள் என மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆவணங்களை எல்லாம் போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். நரேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சொல்லி தான் இதனை செய்ததாக வாக்குமூலம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
விஜய் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக முதலில் அசோக் குமார் தான் நரேஷை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். சில எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியே ஆக வேண்டும் என அசோக் குமார் நரேஷிடம் சொல்லியிருக்கிறார். மேலும் இதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கலாம் எனவும் இதற்கான பணத்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தர தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனையடுத்து நரேஷ் திருநாவுக்கரசின் கார் டிரைவர் கிருஷ்ணாவிடம் பேசியிருக்கிறார்.
கிண்டியில் தங்கி இருந்து சதி திட்டம்
இதன் பின்னர் சென்னை கிண்டியில் உள்ள ஒரு விடுதியில் திருநாவுக்கரசுவை நரேஷ் சந்தித்து பேசியுள்ளார். இவர்கள் இருவரும் ஒரு வார காலம் தங்கி இருந்து இந்த சதி திட்டத்தினை தீட்டியுள்ளனர். நரேஷிடம் கரூரை சேர்ந்த கார்த்தி, அதிபன் ஆகியோரை அறிமுகம் செய்த அசோக் குமார் இனி எது வேண்டுமானாலும் இவர்களை தொடர்புகொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதன் பிறகு தான் நரேஷும், திருநாவுக்கரசுவும் சேர்ந்து தவெக எம்.எல்.ஏக்களிடம் பேசியிருக்கிறார்கள்.
அப்போது ஒரு நாள் மது போதையில் இருந்த போது திருநாவுக்கரசு ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேசியிருக்கிறார். அப்போது இளையராஜா இதனை கால் ரெக்கார்டு செய்துகொண்டு போலீசில் புகார் அளித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நரேஷ் வீட்டில் ரூ.13 லட்சம் ரொக்கம், நூற்றுக்கணக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications