மாட்டிக்கினாரு ஒருத்தரு.. தவெக எம்எல்ஏவிடம் டீலிங்! தலைமறைவான செந்தில் பாலாஜி? முன்ஜாமீன் கோரி மனு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர ஆதரவு அளிக்க ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமாருக்கு தொடர்பிருப்பதாக சொல்லப்படும் நிலையில், செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக அரசியல் சூழல் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக இருந்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா, இடைத்தேர்தல் , கட்சி தாவல் என பரபரப்பாகவே நடைபெற்று வரும் நிலையில், தற்போது எம்.எல்.ஏ ஒருவரிடம் நேரடியாக பேரம் பேசியதாகக் கூறப்படும் புகார் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Senthil Balaji

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ இளையராஜா, கடந்த ஜூன் 29-ஆம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், சில நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசு என்பவர் தன்னை தொடர்புகொண்டதாக கூறியுள்ளார்.

ஊத்தங்கரை இளையராஜா

அதில், இந்தியன் பொலிடிகல் டெமாக்ரடிக் ஸ்ட்ராடஜீஸ் (IPDS)" என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், முக்கிய அரசியல் கட்சியின் சார்பில் சந்திக்க வேண்டும் என்றும் கூறியதாக புகாரில் தெரிவித்துள்ளார். முதலில் அதை நிராகரித்ததாக கூறிய இளையராஜா, பின்னர் மீண்டும் தொடர்புகொண்ட அந்த நபர்கள், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு ஒத்துழைத்தால் ரூ.35 கோடி வரை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

குதிரை பேரம்

மேலும், "இந்த விவகாரத்தில் எனக்கு விருப்பமில்லை. இனிமேல் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம்" என்று கூறியபோது, இதை வெளியே சொன்னால் தனக்கும் குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று மிரட்டியதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

செந்தில் பாலாஜி

அதன் தொடர்ச்சியாக, சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்களை ஜூலை 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து மேலும் 6 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட நரேஷ், திமுக முன்னாள் அமைச்சரும் தற்போது கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை சென்னையில் சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது.

அசோக்குமார்

அதேபோல், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தியே திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ இளையராஜாவை தொடர்புகொண்டு பேசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் தலைமறைவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

முன் ஜாமீன்

அதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களாக முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி பொது நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னை போலீசார் தேடி வருவதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என அசோக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில் அவகாசம் கோரியதால் வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி மனுதாக்கல்

இந்த நிலையில் ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக பதிவான வழக்கில் போலீசார் தன்னை தேடி வருவதாக அறிந்ததாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பாக தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், விரைவில் இந்த மனு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+