Fact check: ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கு? அன்புமணி பொய் பரப்புகிறாரா? - உண்மை என்ன?
சென்னை: ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டிய நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு இது வதந்தி என விளக்கம் அளித்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளதாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தமிழக காவல்துறை 23 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னையில் நேற்று முன்தினம் நடந்த பேரணியில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

அன்புமணி வெளியிட்ட அறிக்கை: இதற்கு கண்டனம் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், ஆனாலும், கொலையின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்யும்படி கூலிப்படைகளை ஏவி விட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும், அதற்காக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்றும் அன்புமணி தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கு பதிவு?: மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சி, நீலம் பண்பாட்டு மையம் சார்பில் எழும்பூர் முதல் வள்ளுவர் கோட்டம் வரை பேரணியும், போராட்டமும் நடத்தப்பட்டன. போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை எனக் கூறி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, அவரது 2 வயது மகள் சாவித்திரி பாய், இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்டோர் மீது நுங்கம்பாக்கம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. போலீசின் இந்த செயல் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அதிகார அத்துமீறல் என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
மேலும், “ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கோரி நடைபெற்ற பேரணி நியாயமானது. அதற்காக ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உள்ளிட்ட அனைவரின் மீதும் வழக்கு தொடர்வது நியாயமற்றது. போலீசின் எந்திரத்தனமான செயல்பாட்டையே இது காட்டுகிறது. அனுமதியின்றி பேரணியும், போராட்டமும் நடத்தியதாக ஆம்ஸ்ட்ராங்க் மனைவி, குழந்தை, இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீதும் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அவர்கள் முன்வைக்கும் கோரிக்கையை நிறைவேற்றவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார் அன்புமணி ராமதாஸ்.
பரவிய தகவல்: ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் சாவித்திரிபாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பலரும், தமிழக காவல்துறையை விமர்சித்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், அப்படி, ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மிது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு விளக்கம் அளித்துள்ளது.
உண்மை என்ன?: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ விசாரணை கோரிய பேரணி நடத்தியதாக ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டு இருக்கிறார், இது முற்றிலும் பொய்யான தகவல். பேரணி தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு விளக்கம் அளித்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
பேரணியில் பங்கேற்றதற்காக ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டார்.
முடிவு
ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications