Flash Back:'தீண்டத்தகாத'பாஜக தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்து கால்பதித்த "STD" என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடைந்து நொறுங்கி விடும் அளவுக்கு இருதரப்பிலும் சரமாரியான விமர்சனங்கள் விண்ணைப் பிளக்கின்றன. நாடி நரம்புகளை முறுக்கிக் கொண்டு இரு கட்சிகளின் தலைவர்களும் கடுமையான சுடு சொற்களை வீசி வருகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை டெல்லி கட்சி/ தேசிய கட்சி என்றால் காங்கிரஸ்தான் என்பது 1990கள் வரையிலான வரலாறு. 1980களில் இன்றைய பாஜக உதயமானாலும் அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் பேரியக்கம் வீச்சோடு இருந்தது. அதிமுக, திமுக இரு கட்சிகளும் மாறி மாறி காங்கிரஸுடன் கூட்டணி வைத்து கொண்டிருந்தன. ராஜீவ் காந்தி காலத்தில் விபி சிங் கிளர்ச்சியில் இறங்கிய போது தேசிய அளவில் மாநில கட்சிகள்/ குறிப்பாக மாநில உரிமை, இடஒதுக்கீடு, மொழி சார் அரசியல் என பேசுகிற கட்சிகள் விஸ்வரூபம் காட்டின. அந்த காலகட்டத்தில் மாநில கட்சிகள் பிளஸ் ஜனதா காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆகியிருந்தது. 1989-ல் விபி சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசும் இப்படித்தான். அப்போது கூட பாஜக பெரிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக இருந்தது இல்லை. அப்போது பாஜகவின் ஆதரவு ஐமு அரசுக்கும் இருந்தது.

Flash Back: How AIADMK, DMK joined hands with BJP in Tamilnadu

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டு இந்திய சிறுபான்மை சமூகம் பேரதிர்ச்சியில் உறைந்திருந்த காலம். சுதந்திர இந்தியாவில் நிகழ்த்தப்படாத மிக மோசமான வன்முறைய வெறியாட்டமாக பாபர் மசூதி இடிப்பு பார்க்கப்பட்டது. இதன் காரண கர்த்தாவான பாஜகவையும் அதன் அடிபொடி பரிவாரங்களையும் தீண்டத்தகாத ஒன்றாக இந்திய அரசியல் சமூகம் ஒதுக்கி வைத்திருந்தது.

அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 1996-ம் ஆண்டு ஜெயலலிதா எனும் பிராமணர் தலைமையிலான அண்ணா திமுக சட்டசபை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தது. ஜெயலலிதாவுக்கு எதிரான பெரும் ஊழல் எதிர்ப்பலையால் அண்ணா திமுகவை ஆதரிக்க எந்த கட்சியும் இனிமுன்வராது என்கிற களநிலவரம் அப்போது இருந்தது.. அத்தருணத்தில்தான் 1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது.

1998-ல் மாநில கட்சிகள் ப்ளஸ் காங்கிரஸ் இணைந்து ஆட்சி நடத்திக் கொண்டிருந்தது. தேவகவுடாவைத் தொடர்ந்து ஐகே குஜ்ரால் பிரதமராக இருந்தார். அப்போது காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொள்ள தேசம் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. அத்தேர்தலில்தான் முதன் முதலாக பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா. அப்போது இது இயல்பான இரு சக்திகளின் சங்கமமாகவே பார்க்கப்பட்டது.

ஏனெனில் பிராமணரான ஜெயலலிதா, என்னதான் திராவிட கட்சியான அண்ணா திமுகவின் தலைமை பொறுப்பில் இருந்தாலும் பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்டவைகளில் பாஜகவுடன் இணைந்த போக்கை கொண்டிருந்தார். அப்போது பாஜகவும் பிராமணர்களுக்கான பிராமணிய சித்தாந்த கட்சியாகத்தான் இந்தியாவில் அடையாளம் பெற்றிருந்தது. அதனாலேயே பாஜக- அதிமுக கூட்டணி இரு இயல்பான நட்பு சக்திகளின் சங்கமமாகவே பார்க்கப்பட்டது. அத்தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் அமோக அறுவடை செய்தது. அதிமுக, பாஜக, மதிமுக, பாமக, ஜனதா கட்சி ஆகியவை கூட்டணி அமைத்திருந்தன. மொத்தம் 30 இடங்களை இந்த கூட்டணி கைப்பற்றியது. பாஜகவுக்கு 3 இடங்கள் போணியாகியது.

என்னதான் சித்தாந்த ரீதியாக அதிமுக-பாஜக இணக்கப் போக்கு இருந்தாலும் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் சுதந்திரமாக கூட்டணி அரசாங்கத்தை நடத்த முடியாமல் இருந்தது. ஏனெனில் மத்திய அரசின் ஒவ்வொரு முடிவுக்கும் சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் கூட்டணி கட்சித் தலைவரான ஜெயலலிதாவின் ஒப்புதல் தேவைப்பட்டது; அத்துடன் ஜெயலலிதா அரசியல் ரீதியாக முன்வைத்த பல கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டிய நிலையிலும் பிரதமர் வாஜ்பாய் இருந்தார். இதனை சோ கால்ட் இரும்பு பெண்மணி ஜெயலலிதாவால் சகிக்க முடியாமல் போனது. இதனால் நல்லதொரு நாளில் வாஜ்பாய் அரசை கவிழ்த்தார் ஜெயலலிதா.

இதனையடுத்து 1999-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக வெளியேறிய அதே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாருமே எதிர்பார்காத வகையில் திமுக இடம்பெற்றது. இது தமிழ்நாட்டில் கடும் விமர்சனங்களை எழுப்பியது. தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏனெனில் மதவாத பாஜகவுடன் திராவிட சித்தாந்தம் பேசும் திமுக அதுவும் நாத்திகரான கருணாநிதி எப்படி கூட்டணி அமைக்க முடிந்தது? என்பதெல்லாம் அப்போதைய கேள்விகள். பிராமணிய சக்திகளுடன் பெரியாரிய சீடர்கள் கை கோர்ப்பதா? என அக்னி பிழம்புகளாக விமர்சனங்கள் வீசி எறியப்பட்டன. இந்த கூட்டணிக்கு காரணகர்த்தாக இருந்தவர்களில் முதன்மையானவர் பிரமோத் மகாஜன். மற்றொருவர் திமுக தரப்பில் டெல்லி முகமாக இருந்த மறைந்த முரசொலி மாறன். காலம் எவ்வளவு விசித்திரமானது என்பதை தேசம் மேலும் அறிந்த தருணம்!

அத்தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 4 இடங்கள் கிடைத்தன. பாஜக தலைமையிலான அரசாங்கத்தில் திராவிடர் இயக்க கொள்கை மறவர்களான முரசொலி மாறன், ஆ.ராசா உள்ளிட்டோரும் பங்கேற்றனர் என்பதெல்லாம் வரலாற்றின் விசித்திரம் அல்லவா! மத்தியில் பாஜகவுடன் இணக்கமாக இருந்த காலத்தில் திமுக எடுத்த ஒவ்வொரு நிலைப்பாடும் குஜராத் வன்முறை தொடங்கி அத்தனை விவகாரங்களிலும் இன்றும் விமர்சனத்துக்குரியதாகத்தான் இருக்கின்றன என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

- இப்படித்தான் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் மண்ணில் அதிமுகவும் அதனைத் தொடர்ந்து திமுகவும் பாஜகவுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றன! இன்று திமுக- பாஜகவின் பரம வைரியாக நிற்கிறது- அதிமுகவோ எப்போது வேண்டுமானாலும் எதுவும் நிகழலாம் மனநிலையுடன் போராடுகிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+