105 ஆண்டுகளில் தங்கம் கடந்து வந்த பாதை! சவரன் ரூ 21-க்கு விற்ற தங்கமா இது! வியக்க வைக்கும் விலை
சென்னை: தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் அது கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம். 1920 ஆம் ஆண்டு முதல் தற்போது 2025 ஆம் ஆண்டு வரை தங்கத்தின் விலை சவரனுக்கு எவ்வளவு விற்பனையானது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
உக்ரைன் மீதான ரஷ்யா போர், டிரம்ப் காட்டும் அதிரடிகள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தங்கத்தின் விலை 1920 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எத்தனை பெரிய மாற்றங்களை சந்தித்துள்ளது என்பதை பார்க்கலாம்.
1920 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.21 ஆக இருந்தது. இதையடுத்து 1935 ஆம் ஆண்டு ரூ 24 ஆக உயர்ந்தது. அது போல் 1940 ஆம் ஆண்டு ரூ 36 ஆக இருந்தது. 1950களில் ரூ 99 ஆக உயர்ந்தது. அந்த 10 ஆண்டுகளில் 2.7 மடங்கு விலை உயர்வாகும்.
அது போல் 1960ஆம் ஆண்டு ரூ 113 ஆகவும் 1970 ஆம் ஆண்டு ரூ 184 ஆகவும் இருந்தது. 1980 ஆம் ஆண்டுதான் தங்கத்தின் விலை பல மடங்கு அதிகரித்து சவரன் ரூ 1330 க்கு விற்பனையானது. 1990- ஆம் ஆண்டு தங்கத்தின் விலை ரூ 3200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
2000 ஆம் ஆண்டு தங்கம் விலை ரூ 4,400க்கு விற்பனை செய்யப்பட்டது. 2010ஆம் ஆண்டு அதிரடியாக சவரன் ரூ 18,500-க்கு விற்பனையானது. 2016ஆம் ஆண்டு தங்கம் விலை ரூ 20 ஆயிரமாகவும், 2020 ஆம் ஆண்டு ரூ 30 ஆயிரமாகவும் தங்கம் விலை இருந்தது.
இதையடுத்து 2022 ஆம் ஆண்டு தங்கம் விலை ரூ 40 ஆயிரமாகவும், 2023 ஆம் ஆண்டு ரூ 45 ஆயிரமாகவும், 2024 ஆம் ஆண்டு ரூ 50 ஆயிரமாகவும் தங்கம் விலை உயர்ந்தது. புத்தாண்டான 2025 ஆம் ஆண்டு முதல் நாளே தங்கம் விலை ரூ 60 ஆயிரத்தை எட்டியது.
இதையடுத்து 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ 65 ஆயிரமும், ஏப்ரல் மாதத்தில் ரூ 70 ஆயிரமும் ஜூலை மாதத்தில் ரூ 75,040 ஆகவும் உயர்ந்து கொண்டே வந்த தங்கம் தற்போது ரூ 77 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஆம் இன்றைய தினம் தங்கத்தின் விலை ரூ 76,960 ஆகும். இவையெல்லாம் 8 பவுன், 22 கேரட் தங்கத்தின் விலையாகும். 12 பவுன் தங்கம் விலை குறைவாக இருக்கும். 24 கேரட் தங்கத்தின் விலை அதிகமாக விற்பனை செய்யப்படும்.
தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் வெள்ளியின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை 77 ஆயிரத்துடன் போக போவதில்லை என்றும் எதிர்காலத்தில் தங்கம், வெள்ளியின் விலை உயர போகிறது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். தங்கத்தின் மீது முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். விலையை பார்க்காமல் முடிந்த வரை வாங்கி போடுங்கள் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications