காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா? 1920ல 21 ரூபாய்.. 2025ல 1 லட்சம்! தலை சுத்த வைத்த தங்கம்!
சென்னை: கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2025 ஜனவரி மாதத்தில் சவரனுக்கு 57 ஆயிரம் ரூபாயாக இருந்த தங்கத்தின் விலை டிசம்பரில் ஒரு லட்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 40,000 தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க 1920ஆம் ஆண்டு வெறும் 21 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை 2025 இல் 1 லட்சம் ரூபாயாக உயர்ந்து இருக்கிறது. இப்படியாக தங்கத்தின் விலை உயர்வு எப்படி இருந்தது என்பது குறித்து பார்க்கலாம்..
கடந்த சில ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டு தங்க சந்தையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாக மாறியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.57 ஆயிரமாக இருந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் அது முதல்முறையாக ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

தங்கம் விலை
ஒரே ஆண்டில் சுமார் ரூ.40 ஆயிரம் அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது என்பது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக பார்க்கப்படுகிறது. 1920 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கத்தின் விலை வெறும் ரூ.21 மட்டுமே. அப்போது பொதுமக்களின் சேமிப்பாகக் கருதப்பட்ட தங்கம், காலப்போக்கில் பாதுகாப்பான முதலீடாகவும், பொருளாதார மாற்றங்களின் பிரதிபலிப்பாகவும் மாறியுள்ளது. 1955 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை ரூ.64 ஆக உயர்ந்தது.
தங்கம் விலை வரலாறு
அதாவது 35 ஆண்டுகளில் வெறும் மூன்று மடங்கு மட்டுமே உயர்வு ஏற்பட்டிருந்தது. 1970 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் ரூ.144 ஆக விற்பனையானது. 1980 ஆம் ஆண்டுதான் தங்க விலை முதன்முறையாக நான்கு இலக்கத்தைத் தொட்டது. அப்போது ஒரு சவரன் ரூ.1,000 என்ற அளவை எட்டியது. அதன் பின்னர் விலை உயர்வு வேகமெடுத்தது. 2006 ஆம் ஆண்டில் ரூ.6,000 ஆகவும், 2009 ஆம் ஆண்டில் ரூ.10,000 ஆகவும் உயர்ந்தது. 2010 ஆம் ஆண்டில் ரூ.15,000 இருந்த தங்கம், 2020 ஆம் ஆண்டில் ரூ.30,000 ஆக இரட்டிப்பானது.
2025 தங்க விலை சாதனை
அதன் பின்னரும் விலை உயர்வு தொடர்ந்தது. 2022 ஆம் ஆண்டில் ரூ.37,000 ஆக இருந்த தங்கம், 2024 ஆம் ஆண்டில் ரூ.47,000 என்ற அளவை எட்டியது. ஆனால் 2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உயர்வு, முந்தைய அனைத்து ஆண்டுகளையும் மிஞ்சும் வகையில் இருந்தது. ஜனவரி மாதத்தில் ரூ.60,000 என்ற அளவை கடந்த தங்கம், ஏப்ரல் மாதத்தில் ரூ.70,000, செப்டம்பரில் ரூ.80,000, அக்டோபரில் ரூ.90,000 என அடுத்தடுத்து புதிய உச்சங்களை தொட்டது. இறுதியாக டிசம்பர் 15 அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,120 என்ற வரலாற்றுச் சாதனை விலையை எட்டியது.
சவரன் தங்கம் 1 லட்சம்
கடந்த ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்திருப்பது, உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை, போர் பதற்றம், பணவீக்கம் மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு தேடல் ஆகியவற்றின் விளைவாகக் கருதப்படுகிறது. இந்தப் போக்கு தொடர்ந்தால், 2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2 லட்சத்தை நெருங்கும் என்றும் சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.














Click it and Unblock the Notifications