தங்கம் வாங்குவோருக்கு ஷாக்.. 37% வரை சரியப்போகிறது தங்கம் விலை? உலக தங்க கவுன்சில் கணிப்பு
சென்னை: உலகளவில் மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும், மக்களுக்கு விருப்பமான சொத்தாகவும் விளங்குவது தங்கம். ஆனால், தற்போது சர்வதேச சந்தையில் நிலவி வரும் சில மாற்றங்களால், தங்கத்தின் விலை பெரிய அளவில் சரிவைச் சந்திக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, தற்போதைய சந்தை நிலவரம் இதேநிலையில் தொடர்ந்தால், இந்த ஆண்டின் விலையிலிருந்து தங்கத்தின் விலை சுமார் 37 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை சரிவுக்கான பிரதான காரணங்கள்
தங்கத்தின் விலை திடீரென சரிவை நோக்கிச் செல்வதற்கு சர்வதேச அளவில் பல முக்கிய பொருளாதாரக் காரணிகள் அமைந்துள்ளன.
முதலாவதாக, அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களில் மாற்றம் எதையும் செய்யாமல் அப்படியே தக்கவைத்துள்ளது. வட்டி விகிதங்கள் குறையும்போது தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் அதிகரிக்கும். ஆனால் வட்டி விகிதம் குறையாததால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விட வேறு பாதுகாப்பான அல்லது அதிக வட்டி தரும் திட்டங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். வட்டி விகிதத்தை பெடரல் வங்கி மாற்றாதது முக்கிய காரணம்.
இரண்டாவதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் சர்வதேச அரசியல் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் பணவீக்கம் குறித்த அச்சங்கள் ஆகியவையும் முதலீட்டாளர்களின் மனநிலையைப் பெரிதும் பாதித்துள்ளன.
மூன்றாவதாக, தங்கத்தின் அடிப்படையிலான கோல்ட் இடிஎஃப் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர்கள் புதிதாக பணம் முதலீடு செய்வது கணிசமாகக் குறைந்துள்ளது. இடிஎஃப் முதலீடு இந்தியாவிலும் குறைந்துள்ளது. தற்போதைய சந்தை சூழலை ஆய்வு செய்து வரும் முதலீட்டாளர்கள், தங்கத்தில் பெரியளவில் முதலீடு செய்யத் தயங்குவது இந்த விலைச் சரிவை மேலும் அதிகமாக்கி உள்ளது.
சந்தையில் தற்போதைய தங்கத்தின் நிலை என்ன?
உலக தங்க கவுன்சில் அறிக்கை வெளியிட்ட நேரத்தில், சர்வதேச தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,063.80 அமெரிக்க டாலராக வர்த்தகமானது. அதேபோல, லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 1 சதவீதம் சரிந்து ஒரு அவுன்ஸ் சுமார் 4,027 டாலராக இருந்தது. இது வரும் நாட்களில் வேகமாக சரியும் சூழல் உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து கணக்கிட்டுப் பார்த்தால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்கனவே 7.8 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய ஆதரவு நிலைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வு
பொருளாதார நிபுணர்கள் மற்றும் சந்தை ஆய்வாளர்களின் கணிப்புப்படி, தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 3,943 அமெரிக்க டாலருக்குக் கீழ் குறைந்தால், இந்த விலை வீழ்ச்சி மேலும் வலுவடையும்.
அடுத்தகட்டமாக, தங்கம் விலை அவுன்ஸுக்கு 3,857 டாலர் முதல் 3,887 டாலர் வரை சரியக்கூடும். ஒருவேளை சர்வதேச சந்தையில் தங்கம் விலை 3,857 டாலருக்குக் கீழ் சரிந்தால், அது மிகப்பெரிய வீழ்ச்சியைத் தூண்டி, அடுத்தக்கட்ட முக்கிய சரிவான 3,500 டாலர் வரை கூடக் கீழ இறங்க வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சாதாரண மக்களுக்கு சிக்கல்?
எளிமையாகச் சொன்னால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்திக்கும் பட்சத்தில், அதன் தாக்கம் இந்திய உள்ளூர் சந்தைகளிலும் எதிரொலிக்கும். அதாவது இந்தியாவிலும் 30% வரை சரியக்கூடும்.
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை உச்சத்தை தொட்டு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டிச் சென்றுகொண்டிருந்த நிலையில், இந்த சர்வதேச விலை வீழ்ச்சி தொடர்ந்தால் ஆபரணத் தங்கம் வாங்குவோருக்கு அது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.


Click it and Unblock the Notifications
