Gold Rate Today: தங்கம் விலை ரூ.4,480 சரிவு.. வரலாறு காணாத அளவுக்கு சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி
சென்னை: சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை சரிந்துள்ளது. மத்திய கிழக்கில் போர் பதற்றம் தொடரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கலாம் என்பதால் தங்கம் விலை சரிந்துள்ளது. இந்தியாவிலும் கூட கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4480 சரிந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2.7 சதவீதம் சரிந்து 3,880.93 டாலராக இருந்தது. கடந்த அக்டோபர் 2025க்கு பிறகு தங்கம் விலை இந்தளவுக்கு சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும். அமெரிக்க கோல்ட் ப்யூச்சர்ஸ் வர்த்தகத்திலும் டிசம்பர் மாத டெலிவரிக்கான தங்கத்தின் விலை 2.9 சதவீதம் சரிந்து 3,885.30 டாலராக உள்ளது.

அமெரிக்கா எடுத்த முடிவு
அமெரிக்காவுக்கு ஈரானுடன் இனி எந்த ஒப்பந்தமும் தேவையில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் நிலவும் மோதல் இப்போதைக்கு முடிவுக்கு வராது என முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. எண்ணெய் விலை அதிகரிப்பது பணவீக்கத்தை அதிகரிக்கும். இதனால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை நீண்ட காலத்துக்கு அதிகமாகவே வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக வட்டி வருவாய் அளிக்காத தங்கத்தைவிட, வட்டி வருமானத்தை தரக்கூடிய முதலீடுகள் இதுபோன்ற அதிக வட்டி சூழலில் முதலீட்டாளர்களுக்கு முதல் சாய்ஸாக மாறும். இதுவே தங்கத்தின் விலை சரிய காரணமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது அமெரிக்க பெடரல் வங்கியை வட்டியை குறைக்க அனுமதிக்காது எனவும் இது தங்கம் விலை சரிய காரணமாக இருக்கும் எனவும் ஹை ரிட்ஜ் ஃபியூச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் டேவிட் மெகர் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம்
மேலும், அமெரிக்காவில் பணவீக்கம் குறித்த டேட்டா வந்துள்ளது. அது எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் வட்டி குறைப்பு என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை. வரும் டிசம்பர் மாதத்தில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்றே எதிர்பார்க்கப்படும் நிலையில், தங்கம் விலை வரும் காலங்களில் மேலும் சரியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை சரிவு
சர்வதேச சந்தை சரிவின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.960 குறைந்து ரூ.1,01,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.120 சரிந்து ரூ.12,695 ஆக உள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,480 குறைந்துள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.5 சரிந்து ரூ.195க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் 9ஆம் தேதிக்கு பிறகு, அதாவது கிட்டத்தட்ட 11 மாதங்களுக்கு பிறகு வெள்ளி விலை மீண்டும் ரூ.200க்கு கீழ் இறங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை
12-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,520
11-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,120
10-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,680
9-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,06,040
8-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,288
7-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,288
6-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,120


Click it and Unblock the Notifications
