கண்ணிவெடி போல.. நாளை காலை "தங்கம்" விலை வெடிக்க போகுது.. ஈரான் - அமெரிக்கா போரால் வருது ட்விஸ்ட்
சென்னை: அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களால் போர் அச்சம் அதிகரித்து வருகிறது.இதனால் ஏற்படும் பணவீக்கம் காரணமாக S&P 500 மற்றும் நாஸ்டாக் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை அன்று சரிவைச் சந்தித்தன. திங்கள் கிழமை இது மோசமான சரிவை சந்திக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர தொடங்கி உள்ளதால், அமெரிக்க டாலர் மற்றும் தங்கத்தின் விலை கடுமையாக மாற்றம் அடையும் .
இதனால் தங்கத்தின் விலை வேகமாக உயரும் , அமெரிக்க டாலர் மதிப்பு கடுமையாக சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதல்
ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள், போர் மேலும் பரவும் என்ற அச்சத்தை உலக அளவில் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க, இஸ்ரேல் படைகளும், அதன் பிராந்திய நட்பு நாடுகளும் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனால் அங்கே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அதோடு கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் என்றும் கருதப்படுகிறது. இந்த வாரத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 18% வரை உயர்ந்து, ஒரு பீப்பாயின் விலை 79 டாலரை தொட்டது, பின்னர் 77 டாலராக குறைந்தது. மேற்கு டெக்சாஸ் கச்சா எண்ணெய் விலை 75 டாலராக இருந்தது. ஹார்முஸ் ஜலசந்தி அதிக ஆபத்துள்ள மண்டலமாக இருப்பதால், கப்பல் காப்பீட்டு நிறுவனங்கள் டேங்கர் கட்டணத்தை இரட்டிப்பாக்கியுள்ளன, மேலும் சில கப்பல்கள் தங்கள் வழிகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
எண்ணெய் வர்த்தகத்தில் ஆபத்து இப்போது அதிகமாக உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பாதிக்கப்பட்டால், ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 120 டாலரை எட்டுவதில் ஆச்சரியமில்லை. ஹார்முஸ் ஜலசந்தி முழுவதுமாக மூடப்பட்டால் அல்லது நீண்ட நேரம் தடை ஏற்பட்டால், கச்சா எண்ணெய் விலை 120-130 டாலரை எட்டும் என்று JP Morgan, Citi மற்றும் Deutsche Bank உள்ளிட்ட பல பெரிய வங்கிகள் மற்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஒருவேளை இடையூறு நீடித்தால், விலை இன்னும் உயரக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம்
ஈரான் பதிலடி கொடுத்தால் அல்லது புதிய தாக்குதல்கள் நடந்தால், சந்தை மீண்டும் திங்களன்று திறக்கப்படும்போது விலைகளில் கூர்மையான ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர் பங்குச் சந்தைகள் கத்தியின் மேல் நடப்பது போல் மாறும், தங்கம் விலை கண்ணிவெடி போல வெடிக்கும் என்று JP Morgan எச்சரித்துள்ளது.
ஈரான் இஸ்ரேல் போர் காரணமாகவும், ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் உலக நாடுகள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி செல்ல தொடங்கி உள்ளன. இந்த போர்களால் பங்கு சந்தைகள் மூச்சு முட்ட தொடங்கி உள்ளன. இதன் காரணமாக, தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்து, கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்து உள்ளது.
அமெரிக்காவில் இன்றும் ஸ்பாட் தங்கத்தின் விலை, ஒரு அவுன்ஸ் $3,442.09 ஆக 0.3% உயர்ந்தது. இது ஏப்ரல் 22ஆம் தேதிக்குப் பிறகு கண்ட அதிகபட்ச விலையாகும். அமெரிக்க தங்கத்தின் எதிர்கால விலையும் 0.3% உயர்ந்து $3,461.90 ஆக இருந்தது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹10,075 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,235 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,600 ஆகவும் உள்ளது. திங்கள் கிழமை மார்க்கெட்டில் இது கடுமையாக உயரும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications