கிட்சனில் உள்ள இந்த 5 'வெள்ளை' பொருட்கள் எமனாக மாறலாம்! பிரபல இதய மருத்துவர் தந்த எச்சரிக்கை
சென்னை: நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் சில பொருட்கள், நம் இதயத்திற்கு மெதுவான விஷமாக மாறக்கூடும் என மூத்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். 40 ஆண்டுக்கால மருத்துவ அனுபவம் கொண்ட அவர், சமையலறையில் இருந்து நீக்க வேண்டிய 5 முக்கியமான பொருட்களைப் பட்டியலிட்டுள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்த நவீனக் காலத்தில் நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். காலை எழுந்தது முதலே இரவு வரையிலும் ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. இப்படி ஓடிக் கொண்டே இருப்பதால் உடல் ரீதியாக நமக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அதைச் சரி செய்யவும் நாம் ஏகப்பட்ட விஷயங்களைச் செய்கிறோம். மருந்து, மாத்திரைகளையும் எடுக்க நேரிடுகிறது. இது உடல்நிலை மேலும் மோசமாக்குகிறது..

மருத்துவர்
எனவே, உடலில் பிரச்சினை ஏற்பட்ட பிறகு அதற்கு மருந்துகளை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, உண்ணும் உணவிலேயே மாற்றத்தைச் செய்வதுதான் புத்திசாலித்தனம் என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.. அந்த வகையில், இதய ஆரோக்கியத்தைப் பேண நாம் தவிர்க்க வேண்டிய அந்த 5 பொருட்கள் எவை என்பதை டெல்லியின் ஆஷ்லோக் மருத்துவமனையின் நிறுவன-இயக்குநர் மற்றும் இதயநோய் ஆலோசகரான டாக்டர் அலோக் சோப்ரா பகிர்ந்துள்ளார்.
5 பொருட்கள்
1. உப்பு (White Salt): இது பலருக்கும் அதிர்ச்சியைத் தரலாம்.. ஆனால், அதிகப்படியான உப்பு ரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. இதற்கு மாற்றாக ராக் சால்ட் (Rock Salt), ஹிமாலையன் பிங்க் சால்ட்டை பயன்படுத்தலாம். அதேநேரம் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் உப்பில் இருக்கும் அயோடின் தான் தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு அவசியமானதாக உள்ளது. எனவே, அதைக் குறைத்துக் கொள்ள வேண்டுமே தவிர முற்றிலுமாக நீக்கத் தேவையில்லை.
2. வெள்ளை சர்க்கரை (White Sugar): லிஸ்ட்லேயே இது தான் முக்கியமானது. சர்க்கரை என்பது வெறும் கலோரிகள் மட்டுமே. அதில் வேறு எந்தவொரு சத்துகளும் துளியும் இல்லை. மேலும், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தி, உடல் பருமனுக்குக் காரணமாகிறது. எனவே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் இதைக் குறைக்க வேண்டும். இதற்கு மாற்றாக நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தைப் பயன்படுத்தலாம். அதையும் அளவாகப் பயன்படுத்த வேண்டும். நாட்டுச் சர்க்கரை தானே என அதிகமாகப் பயன்படுத்தினால் அதுவும் ஆபத்து தான்.
3. வெள்ளை மைதா (White Maida): பரோட்டா முதல் பீட்சா வரை இந்த காலத்தில் மைதா பல்வேறு உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அவை நார்ச்சத்து நீக்கப்பட்ட ஒரு பொருளாகும். இது செரிமானத்தை மந்தமாக்கி, உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது. இதற்கு மாற்றாகக் கோதுமை மாவு அல்லது சிறுதானிய மாவைப் பயன்படுத்துவது சரியாக இருக்கும்.
4. வெள்ளை அரிசி (White Rice): அரிசு கூடவா என நீங்கள் யோசிக்கலாம்.. ஆனால், பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் சத்துக்கள் குறைவு. இது நீரிழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்தியாவில் நீரிழிவு நோய்கள் அதிகரிக்க நாம் சிறுதானியங்களை விட்டு விட்டு அரிசியை மட்டும் அதிகம் எடுத்துக் கொள்வதே பிரதான காரணமாகும். இதற்கு மாற்றாகத் தவிடு நீக்கப்படாத கைக்குத்தல் அரிசி அல்லது பழுப்பு அரிசியைப் பயன்படுத்தலாம்.
5. வெள்ளை வனஸ்பதி/டால்டா (White Vanaspati): ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட இந்த எண்ணெய்களில் இதயத் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தக்கூடிய டிரான்ஸ் ஃபேட் அதிகமாக உள்ளது. இதற்கு மாற்றாக நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஆகியவற்றை அளவோடு பயன்படுத்தலாம். அதையும் கூட அளவாகப் பயன்படுத்துவதே நல்லது
கவனம் தேவை
இந்த லிஸ்ட்டை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்த டாக்டர் அலோக் சோப்ரா மேலும், "சமையலில் நாம் செய்யும் இந்தச் சிறிய மாற்றங்கள், பிற்காலத்தில் வரும் பெரிய அறுவை சிகிச்சைகளைத் தவிர்க்க உதவும். இயற்கை நமக்குத் தந்துள்ள பொருட்களைச் சுத்திகரிப்பு என்ற பெயரில் சத்துக்களை நீக்கிவிட்டுப் பயன்படுத்துவது தான் நோய்களுக்குக் காரணமாக அமைகிறது. எனவே, வெள்ளையாக இருக்கும் இந்தப் பொருட்களைக் குறைத்து, இயற்கையான பொருட்களைத் தேர்வு செய்யுங்கள்.. அது உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்" என்றார்.
இது சாதாரண ஒரு செய்தி மட்டுமே.. மருத்துவர் தனது கருத்தை மட்டுமே தெரிவிக்கிறார். மருத்துவ ஆலோசனை என்பது ஒவ்வொரு நபருக்கும் பல்வேறு காரணங்களைப் பொறுத்து மாறுபடும். எனவே, இதை பொதுவான மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.












Click it and Unblock the Notifications