சர்க்கரை நோயாளி இட்லி சாப்பிடலாமா? அடடா இது தெரியாம போச்சே.. புதினா, பருப்பு ரெண்டும் போதுமே.. அருமை
சென்னை: பிறந்த குழந்தை முதல் வயதானவர்களுக்கு வரை, தைரியமாக தரக்கூடிய உணவு இட்லி.. தமிழகத்தின் பிரதான உணவாக விளங்கக்கூடிய இட்லியை , சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் அரிசி சோறை அவ்வளவாக சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள்.. அப்படியான அரிசியிலிருந்து தயாராகும் இட்லியை சாப்பிடலாமா? இதனால் சர்க்கரை அளவு அதிகரித்துவிடுமா? என்ற பயம் பரவலாக உள்ளது.

இட்லி பெஸ்ட்: உண்மையை சொல்லப்போனால், நீரிழிவு நோயாளிகளுக்கு இட்லி மிகவும் நல்லதாம்.. எந்த தொந்தரவும் தராது.. எண்ணெய், கொழுப்பு இல்லாதது.. கார்போஹைட்ரேட் நிறைந்த உணவாக இருந்தாலும், ஆவியில் வேகவைத்து எடுக்கும்போது, ஆரோக்கியம் கூடுகிறது.
எளிதில் செரிமானம் ஆகிறது.. எனினும், கலோரிகள் அதிகம் என்பதாலும், மாவு சத்து அதிகமாக இருப்பதாகவும் அதிக இட்லிகளை சாப்பிட வேண்டாம் என்கிறார்கள். அரிசிக்கு மாற்றாக ரவா இட்லி, கேழ்வரகு இட்லி என சிறுதானியங்களை சேர்த்து இட்லி செய்து சாப்பிட்டால் இன்னும் நல்லது..
இப்படி இட்லி சாப்பிடும்போது, இரும்புச்சத்து நிறைந்த உணவாக மாறிவிடுகிறது. இதனால், ரத்த செல்களுக்கு ஆக்ஸிஜனேற்றம் கிடைக்கிறது.. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மையே அதிகம் உண்டாகிறது.. உடல் எடையும் சீராக இருக்கும்..
என்ன சாப்பிடலாம்: அரிசி இட்லி என்றால் 2, ரவா இட்லி, ராகி இட்லி, ஓட்ஸ் இட்லி என்றால் 3 சாப்பிடலாம். ரவா கலந்து செய்யும் இட்லியில், சிறிது கேரட் சேர்த்து கொள்ளும்போது, கூடுதல் சுவையும், ஆரோக்கியமும் கிடைக்கிறது.
அதேபோல, மொறுமொறுப்பாக இல்லாமல் ஊத்தப்பம் போன்ற, சிறிய அளவிலான 2 தோசை சாப்பிடலாம்.. கோதுமை உப்புமா ஒரு கப், சப்பாத்தியாக இருந்தால் 3, சாப்பிடலாம். ஆனால், தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி இரண்டையும் தவிர்க்க சொல்கிறார்கள். இவைகளுக்கு பதிலாக, புதினா கொத்தமல்லி சட்னி, சாம்பார் போன்றவற்றை வைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.
நேரம் என்ன: அதேபோல, காலை 8 முதல் 9 மணிக்குள் காலை உணவை சாப்பிட்டுவிட வேண்டுமாம்.. இந்த காலை உணவுடன், ஒரு கப் காய்கறி சாலட் அல்லது 2 முட்டைகளின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம். ஆனால், முட்டையை வாரம் 3 முறை எடுத்துக் கொண்டால் போதும் என்கிறார்கள்.
பொதுவாக, நீரிழிவு நோயாளிகள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை குறைத்து கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக, புரோட்டீன், நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளலாம். எனவே, பெரும்பாலும் டிபன்களுக்கு சாம்பார் போன்ற பருப்பு சேர்த்த உணவைகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம். குறிப்பாக, பாசிப்பருப்பு, சோம்பு சேர்த்து சாம்பார் சாப்பிடும்போது, ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்..
பருப்பு வகைகள்: சிலர், பருப்பு மற்றும் பசலைக்கீரை சேர்த்து சமைத்து சாப்பிடுவார்கள்.. இவை இரண்டுமே சர்க்கரை அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதுடன், உடலுக்கும் நன்மை தரக்கூடியது.
அதேபோல, சர்க்கரை நோயாளிகளின் சாப்பிடும் சாப்பாட்டின் அளவும் ஒரே மாதிரியாக தினமும் இருக்க வேண்டுமாம்.. காரணம், உணவின் அளவு ருசியின் காரணமாக அதிகரித்தால், சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடுமாம். எனவே, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவுப்பழக்கத்தை கடைப்பிடிப்பது ஆரோக்கியமானது.












Click it and Unblock the Notifications