சென்னை: வெற்றிலையுடன், மிளகு + சீரகம் இந்த இரண்டு பொருளையும் சேர்த்து பயன்படுத்தினால், என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் தெரியுமா?
வெற்றிலையில், வைட்டமின் C, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம் போன்ற சத்துக்கள் இருந்தாலும், அதிக அளவு உள்ளது கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்களே ஆகும்.
வெற்றிலை: உடலிலுள்ள வாயுவை வெளியேற்றும் தன்மை இந்த வெற்றிலைக்கு உள்ளது.. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த வெற்றிலை, வயிற்றுப்புண், வாய்ப்புண்களையும் ஆற்றக்கூடியது.
விறைப்பு பிரச்சனை உள்ளவர்கள், வெற்றிலையை இடித்து சாறு எடுத்து, தேனுடன் கலந்து சாப்பிட்டு வரவேண்டுமாம். ஆண்மை குறைபாடுகளையும் போக்க வேண்டுமானால், இந்த வெற்றிலையை அடிக்கடி மென்று சாப்பிட்டு வரவேண்டும்... தாய்ப்பால் சுரப்பியாகவும் இந்த வெற்றிலை பயன்படுகிறது.
மூல நோய்: மூல நோய் உள்ளவர்களுக்கு வெற்றிலையை வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். வெற்றிலையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், மூலம் கட்டுக்குள் வருவதுடன், மலம் கழிப்பதில் வலி, ரத்தப்போக்கு, குடல் சுருக்கம், வயிறு வலி போன்ற அனைத்து உபாதைகளும் தீர்கின்றன..
இந்த வெற்றிலையுடன் மிளகு, சீரகம் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும்போது, நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன தெரியுமா?
கொழுந்து வெற்றிலை: கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகுவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது.
அதேபோல, வெற்றிலையுடன் மிளகு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால், நம்முடைய உடலிலுள்ள கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்கவும் உதவு செய்கிறது.. அதாவது, பச்சை நிறத்திலுள்ள, ஒரு கொழுந்து வெற்றிலையில், 5 மிளகு சேர்த்து அதை உருட்டி, வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்... தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த கொழுந்து வெற்றிலை, மிளகு சேர்த்து 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தாலே உடல் எடையில் மாற்றம் தெரியுமாம்.
வயிறு வலி: வயிற்று வலியால் இருப்பவர்கள், 2 ஸ்பூன் சீரகத்தை, 3 ஸ்பூன் வெண்ணெய் விட்டு நன்றாக விழுதாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.. பிறகு, 5 வெற்றிலைகளை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கிவிட்டு, வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி, சட்டியிலிட்டு வதக்கி, பிறகு, 100 மில்லி லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆற வைக்க வேண்டும். இந்த கஷாயத்தை வடிகட்டி குடித்து வந்தால், வயிற்றுவலி நீங்கிவிடும்.
அதேபோல, 2 வெற்றிலைகளை நன்றாக கழுவி எடுத்து, அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று விழுங்கி வந்தால், அஜீரணக் கோளாறுகள் மொத்தமும் நீங்கிவிடும்.. வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில், மிளகு வைத்து மென்று, சாறு இறக்கினால் விஷம் இறங்கிவிடுமாம்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)