திருமணமாகாத பெண்கள் கழுத்தில் திருநீறை பூசினால் என்ன நடக்கும்? விபூதியை நெற்றியில் பூசுவது ஏன்?
சென்னை: விபூதி, திருநீறு, புனித சாம்பல் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் வெள்ளை நிற பொடியை நெற்றியில் பூசிக் கொள்ளும் போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
சைவத்தை சேர்ந்தவர்கள் நெற்றியில் பூசிக் கொள்வதுதான் விபூதி. யார் எந்த உயரத்தில் இருந்தாலும் கடைசியில் சாம்பலாவதுதான் முடிவு என்ற மகத்தான தத்துவத்தை நமக்கு உணர்த்துவதுதான் விபூதி. இதை எண்ணி வாழ்க்கையில் அகங்காரம், ஆணவம், போட்டி, பொய், பொறாமை உள்ளிட்ட தீய குணங்களை விட்டொழித்தல் வேண்டும்.

பொதுவாக இந்த விபூதியை காய்ச்சல் ஏற்பட்டாலோ உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ மனதில் இறைவனை வேண்டிக் கொண்டு வைக்கப்படுவதாகும். அது போல் நடுராத்திரியில் அரண்டு போனாலோ குழந்தைகள் தூங்காமல் பயந்து பயந்து அழுதாலோ இந்த விபூதியை பூசலாம்.
இறைபக்தியுடன் தொடர்புடைய இந்த விபூதியை பூசுவதால் தீய சக்திகள் விலகும் என்பது ஐதீகம். மந்திரமாவது திருநீறு என திருஞானசம்பந்தர் பாடி கூன் பாண்டியனின் வெப்ப நோயை இந்த விபூதியை தடவியே குணப்படுத்தியுள்ளார் என்பது வரலாறு. இந்த விபூதியை இரட்சை என்றும் அழைக்கலாம். பிறந்த குழந்தைகளை தலைக்கு குளிக்க வைத்தவுடன் தலையை துவட்டிவிட்டு உச்சந்தலையில் விபூதி வைப்பார்கள்.
இப்படி வைக்கும் போது அந்த விபூதி தலையில் இருக்கும் ஈரத்தை உறிஞ்சி எடுக்கும். அது போல் திருமணமாகாத பெண்கள் விபூதியை கழுத்தில் பூசி வந்தால் விரைவில் கழுத்தில் திருமாங்கல்யம் ஏறும் பாக்கியம் கிட்டும் என்பதும் ஐதீகமாகும். திருநாவுக்கரசருக்கு வயிற்றுவலி ஏற்பட்ட போது அவருடைய சகோதரி அவருடைய வயிற்றில் விபூதியை பூசி குணமடையச் செய்த வரலாறு இருக்கிறது.
விபூதியை உச்சியில் பூசுவதன் மூலம் பாவம் நீங்கும். விபூதியை மார்பில் பூசினால் மனதார செய்த பாவங்கள் விலகும். நாபியில் பூசுவதால் தோஷம் நீங்கும் என்கிறார்கள். விபூதியை முழங்தாள்களில் பூசினால் கால்களால் செய்த பாவம் நீங்கும். விபூதியை புயங்களில் பூசினால் அன்னிய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட பாவம் நீங்கும் என்கிறார்கள். அது போல் விபூதியை முழங்கால், முட்டி, கை, கால்களில் பூசினால் ஆங்காங்கே நீர் கோற்று ஏற்படும் தலைவலி நீங்கும். தலை வலி ஏற்பட்டால் விபூதி நெற்றியின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திறகு கோடு போல் பூசினால் தலையில் கோர்த்துள்ள நீர் விலகும் என்கிறார்கள்.
இந்த விபூதி மாட்டு சாணத்தை கொண்டு தயாரிக்கப்படுகிறது. பசு மாட்டில் என்னென்ன தெய்வங்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. அது போல் பசுமாட்டின் கோமியத்திலும் சாணத்திலும் லட்சுமி கடாட்சம் இருக்கிறது. விபூதியை இரு புருவங்களுக்கு மத்தியில் வைக்கும் போது மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கிறது. அதிர்வுகளை உள்வாங்கும் சக்தி உள்ளது. கிருமிநாசினி, நெற்றியில் வடியும் வியர்வையை உறிஞ்சி தலை வலி உள்ளிட்ட நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.












Click it and Unblock the Notifications