புற்றுநோய்.. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்.. பெண் குழந்தைக்கு இலவச தடுப்பூசி தேவை.. டாக்டர்கள் கோரிக்கை
சென்னை: அனைத்து குழந்தைகளுக்கும், இலவசமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பெண்களை அதிகம் பாதிக்கக்கூடிய பயங்கர நோயாக மாறி கொண்டிருக்கிறது கர்ப்பப்பை வாய் புற்றுநோய்.. இது கர்ப்பபையின் வாயில், அதாவது கர்ப்பபையின் கீழ் பகுதியில் தொடங்கும் கேன்சர் உயிரணுக்களின் வளர்ச்சியாகும்.

புற்றுநோய்: ஒவ்வொரு வருடமும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக உலகம் முழுவதும் 3 லட்சத்திக்கும் அதிகமானோர் உயிரிழக்க நேரிடுகிறது. இதில் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று தான் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.. பிற புற்றுநோய்களை போல, இவையும் ஆரம்ப காலத்தில் கண்டறியலாம், குணப்படுத்தலாம்..
இந்த புற்றுநோய்க்கு சிகிச்சை என்பது, நோயின் தீவிரத்தன்மையை பொறுத்து மாறுபடும். ரேடிகல் ஹிஸ்டெரெக்டோமி அல்லது கீமோ ரேடியேஷன் அல்லது இரண்டும் சேர்த்து கூட சிகிச்சை தரப்படும். என்றாலும், கருப்பை வாய் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், ஆபரேஷன் மூலம் குணப்படுத்திவிடலாம்.
தடுப்பூசிகள்: கருப்பை வாய் புற்றுநோய் ஒருவரை தாக்குவதற்கு ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) மூலம் ஏற்படும் தொற்றே முக்கிய காரணமாக இருக்கிறது. எனினும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் பழக்க வழக்கத்தை கடைப்பிடித்தால் கருப்பை வாய் புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்க முடியும்.
பெண்கள் 21 முதல் 29 வயது வரை இருந்தால் 3 வருடங்களுக்கு ஒரு முறை இந்த பரிசோதனை செய்யலாம். 30 முதல் 64 வயது வரை உள்ள பெண்கள் பேப்ஸ்மியர் மற்றும் HPV பரிசோதனையை 5 வருடங்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும். 65 வயதுக்கு மேலான பெண்கள் இந்த பரிசோதனை தேவையா என்பதை டாக்டரிடம் ஆலோசனை பெறலாம்.
பாதிப்பு: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எந்த வயதினரையும் பாதிக்கலாம்.. 11-12 வயதுக்கு முந்தைய குழந்தைகளுக்கு மருத்துவர்கள் HPV தடுப்பூசியை பரிந்துரைக்கிறார்கள். பெண்கள் 9 வயதிலிருந்து 26 வயது வரை இந்த தடுப்பூசியை பெற தொடங்கலாம். அதே போன்று அதுவரை தடுப்பூசி பெறாத பெண்கள் 27 முதல் 45 வயது வரையுள்ளவர்கள் இந்த தடுப்பூசியை, மருத்துவர்களின் ஆலோசனை கேட்டு போட்டுகொள்ளலாம்.
இப்படிப்பட்ட சூழலில்தான், நாடு முழுதும் கருப்பை வாய் புற்று நோய் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக போட வேண்டும் என்று டாக்டர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
பரிசோதனை: இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க செயலர் ரவீந்திரநாத் சொன்னதாவது: "தமிழகத்தில் சிறு குறு அளவிலான ரத்தப் பரிசோதனை மையங்கள் உள்ளன. இவை முறைப்படி பதிவு செய்து மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ் பெற்றுள்ளன. இந்த ஆய்வகங்களில் தரமற்ற முறையில் ரத்தப் பரிசோதனை செய்யப்படுவதாக தகவல் பகிரப்படுகிறது. இவற்றை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்தியாவில் 8 நிமிடத்திற்கு ஒரு பெண் கருப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்து வருகிறார். இந்த புற்றுநோய் ஏற்பட "ஹூயூமன் பேப்பிலோமா" வைரஸ்களே 75 சதவீதத்திற்கு மேல் காரணமாக உள்ளன. இந்த வைரஸ்களுக்கு எதிராக HPV தடுப்பூசியை வழங்குவதன் வாயிலாக வைரஸ்களால் ஏற்படும் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
மத்திய அரசு: உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் தடுப்பூசி போட்டு அப்புற்றுநோயை கட்டுப்படுத்தி வருகின்றன. இந்தியாவில் 9 வயது முதல் 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவது ஊக்கப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், ஊக்கப்படுத்துதல் மட்டும் போதாது.. அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக தடுப்பூசியை போட மத்திய அரசு முன்வரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications