நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன? அம்மாடி படிக்கவே பயமா இருக்கே
சென்னை: மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாக இப்போது நாம் ஒரே இடத்தில் பல மணி நேரம் வரை உட்கார வேண்டி இருக்கிறது. ஆனால், இதுபோல ஒரே இடத்தில் உட்காரும் போது பல வித பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்! இதை எப்படித் தடுக்கலாம் என்பது குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.
இந்த காலத்தில் வாழ்க்கை முறை மாறி வருகிறது. முன்பெல்லாம் வேலைக்குப் போவோர் நாள் முழுக்க நின்று கொண்டு இருக்க வேண்டும்.. உடல் உழைப்பு தேவைப்படும் வேலையாகவே இருக்கும். இதனால் வேலை முடித்து வந்து எப்போ தான் உட்காருவோம் என்ற மனநிலை இருக்கும். ஆனால், இப்போது வேலைக்குச் சென்றாலே காலை முதல் மாலை வரை உட்கார்ந்து கொண்டே பணியாற்றுகிறோம்.

வாழ்க்கை முறை
அதிலும் இப்போது இருக்கும் ஒர்க் பிரஷுருக்கு இடையில் அங்கும் இங்கும் எழுந்திருக்கக் கூட பலராலும் முடிவதே இல்லை. இதனால் மணிக் கணக்கில் ஒரே இடத்தில் உட்கார வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வீட்டிலும் நாம் பெரும்பாலும் வேலை செய்வதில்லை. இதனால் உடல் உழைப்பே இருப்பதில்லை.. கிட்டதட்ட ஒரு sedentary lifestyleஐ தான் நாம் கொண்டிருக்கிறோம்.
இதுபோன்ற ஒரு வாழ்க்கை முறையை வைத்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. ஆனால், நமது வேலைக்குத் தொடர்ச்சியாக ஆறு மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியிருந்தால் என்ன செய்வது? இதுபோன்ற சூழ்நிலையில், நமது உடலில் என்ன தான் நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
உடல்நிலை பாதிப்புகள்
இது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த பிரபல மருத்துவர் கூறுகையில், "எந்தவொரு பிரேக்கும் எடுக்காமல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உடலுக்கு நல்லது இல்லை. இது உங்கள் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படவும் காரணமாக இருக்கும். மேலும், இதுபோல ஒரே இடத்தில் அமர்ந்து, எந்தவொரு உடல் உழைப்பும் இல்லாமல் இருந்தால் உடல் எடை கூடும்.. உடல் பருமனாக மாறும். ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தைக் கணிசமாகக் குறைக்கும். இதனால் எடை இழப்பதும் கடினமான ஒன்றாக மாறிவிடும்" என்றார்
மேலும், இதுபோல ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் போது நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்தும் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மருத்துவர்கள் மேலும் கூறுகையில், "பெரியளவில் உடல் உழைப்பு இல்லை என்றால் வயிற்றில் இருக்கும் உள்ளுறுப்புகளில், குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர தொடங்குகிறது. இதை visceral fat என்பார்கள். இது இன்சுலின் செயல்பாட்டில் தலையிடுகிறது . உடல் செயல்பாட்டையும் பாதிக்கிறது.
ஏகப்பட்ட சிக்கல்
இது மட்டுமின்றி நீண்ட நேரம் உட்காரும் போது எப்படி உட்கார்கிறோம் என்பதும் முக்கியம். சாய்ந்து அல்லது முதுகு வளையும்படி உட்கார்ந்தால்.. வழக்கத்தை விட முதுகு அல்லது கழுத்து வலி அதிகம் ஏற்படும்.. காலப்போக்கில் இதனால் கொழுப்பின் அளவும் ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். இதனால் இதய நோய் ஏற்படும் ஆபத்தும் கூட அதிகரிக்கிறது. மேலும், இதுபோல நீண்ட நேரம் உட்கார்ந்து இருக்கும் போது மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். இதனால் அதன் பிறகு நடப்பதில் கூட சிரமம் இருக்கும்" என்றார்.
எப்படி சமாளிக்கலாம்?
இதன் காரணமாகவே நீண்ட நேரம் ஒரே இடத்தில் வேலை செய்யக்கூடாது என்கிறார்கள். உங்கள் வேலை அப்படி இருந்தாலும் கூட அவ்வப்போது பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். 5 முதல் 10 நிமிடம் கொஞ்சம் நடக்க வேண்டும். மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதுபோல செய்தால் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.
இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு உடல்நிலை பிரச்சினை ஏற்பட்டால்.. உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுகவும்.












Click it and Unblock the Notifications