கட்டுவிரியன் பாம்பை படுக்கையில் விட்டு கணவரை காலி செய்த பெண்! கள்ளக்காதலனுடன் சேர்ந்து படுபாதக செயல்
லக்னோ: ஆண் நண்பருடன் இணைந்து கணவரை கட்டுவிரியன் பாம்பை ஏவிவிட்டு பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர வைத்துள்ளது. ஒரு தனியார் பள்ளியை கணவர் நடத்தி வரும் நிலையில், அப்பள்ளியில் கார் டிரைவராக வேலை பார்க்கும் நபருடன் இந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகிய நிலையில், கணவரை கொல்ல வேண்டும், அதே சமயம் தன் மீது பழி விழ கூடாது என்பதற்காக இப்படியொரு செயலை செய்திருக்கிறார்.
ரூ.15 ஆயிரம் கொடுத்து இரு கட்டுவிரியன் பாம்புகளை வாங்கிய அந்த பெண், மூன்று நாட்களாக பட்டினி போட்டுவிட்டு கணவரின் படுக்கையில் விட்டு இருக்கிறார். இப்படி கூட நடக்குமா? என்று நெஞ்சை பதைபதைக்க வைத்த இந்த கொடூர செயல் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

டிரைவருடன் பழக்கம்
உத்தர பிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் அதுல் குமார் பன்வார். ஹஸ்தினாபூர் என்ற இடத்தில் அதுல் குமார் பன்வார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி தாமினி. இவருக்கும் கணவர் நடத்தி வரும் பள்ளியில் டிரைவராக வேலை செய்யும் துஷார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர்.
தங்கள் பழக்கத்திற்கு கணவர் இடையூறாக இருப்பதால் அவரை போட்டுத்தள்ள மனைவி தாமினி திட்டமிட்டுள்ளார். இதற்காக, தூக்க மாத்திரை வாங்கிய தாமினி கணவருக்கு அதில் பாலில் கலந்து கொடுத்துள்ளார். இது எதுவும் அறியாத கணவர் அதுல் குமார், பாலை குடித்த சிறிது நேரத்தில் மயங்கினார். அப்போது ஏற்கனவே திட்டமிட்டப்படி உள்ளூர் பாம்பாட்டிகளிடம் இருந்து வாங்கிய இரண்டு கட்டுவிரியன் பாம்புகளை கொண்டு வந்து கணவர் தூங்கிய பெட்டில் தாமினி விட்டுள்ளார்.
திடுக்கிடும் தகவல்கள்
இந்த பாம்புகள் அதுல் குமாரை கடித்த நிலையில் விஷம் ஏறி சிறிது நேரத்தில் உயிரிழந்தார். பாம்பு கடித்து கணவர் இறந்துவிட்டார் என்று நாடகமாடிய தாமினியை கண்காணித்த போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். அதன்பிறகே இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாம்பாட்டிகளிடம் இருந்து பாம்பை வாங்குவதற்கு தனது ஆண் நண்பருக்கு தாமினி ரூ.15,000 கொடுத்துள்ளார். அந்த பாம்புகளை மூன்று நாட்களாக பட்டினி போட்டுவிட்டு கணவரின் படுக்கையில் விட்டு இருக்கிறார். பாம்புகளை வழங்கிய சோனு மற்றும் உதய்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கான முழு பின்னணி குறித்து விசாரணை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சிங்கிளாவே இருந்துவிடலாம்
இந்த கொடூர கொலை குறித்து ஆன்லைனின் பலரும் அதிர்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இந்த பெண் தனது கணவரை கொலை செய்ய பயன்படுத்திய இந்த அறிவை வேறு ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றிற்காக பயன்படுத்தியிருந்தால் அவரது பெற்றோர் பெருமைப் பட்டு இருப்பார்கள். இருவருக்கும் வாழ்நாள் முழுக்க சிறை தண்டனை கொடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், 'ஒரு பாம்பு மற்றொரு பாம்பை கடிக்க வைத்துள்ளது. சிங்கிளாகவே இருப்பதை பெருமை பட, இந்த நிகழ்வுகள் வைக்கின்றன என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "அந்த பெண்ணை விட கட்டுவிரியன் பாம்பின் விஷம் குறைந்ததுதான்"என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர் வெளிட்ட பதிவில், இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்க வேண்டும்.அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது' என்று பதிவிட்டுள்ளார்.















Click it and Unblock the Notifications