விஜய் காலை சுற்றிய ‘ரீல்ஸ்’ பாம்பு..பனையூருக்கு தலைவலி! அடுத்தடுத்து சிக்கும் அமைச்சர்கள்! வார்னிங்!
சென்னை: அண்ணாவின் அறிவார்ந்த பேச்சு, கலைஞரின் அடுக்கு மொழி, வைகோ உள்ளிட்ட தலைவர்களின் அனல் பறக்கும் பேச்சு தமிழக அரசியலை கட்டிப் போட்டு இருந்த நிலையில் தமிழக வரலாற்றில் சமூக வலைதள அரசியலை உச்சத்திற்கு கொண்டு சென்றது தமிழக வெற்றி கழகம் என்றால் அது மிகையல்ல. 2026 சட்டமன்ற தேர்தலில் ரிலீஸ், ஷார்ட்ஸ், டிஜிட்டல் பிரச்சாரம் மூலம் தவெக ஆட்சியைப் பிடித்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதே ரீல்ஸ் கலாச்சாரம் விஜய் அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பேசிப் பேசியே வளர்ந்தது திராவிட இயக்கம் என்பார்கள். அண்ணா, நாவலர், கலைஞர், வைகோ என தொண்டர்களை தங்களது அடுக்குமொழியில் பேச்சால் கட்டிப்போட்டு அதனை வாக்கு அரசியலாக மாற்றியவர்கள் திராவிட தலைவர்கள்.

வைகோவும் கலைஞரும் பேசினால் ஆறு மணி நேரம் ஆனாலும் கூட மக்கள் கூட்டம் கலையாது என்பார்கள். அத்தகைய பேச்சு நடை இல்லாவிட்டாலும் தனது ஒற்றை முகத்தால் தமிழக அரசியலை புரட்டிப் போட்டவர் எம்ஜிஆர். அவருக்கு பிறகு ஜெயலலிதாவும் அதே பாணியிலான ஆட்சியைத்தான் செய்து வந்தார்.
விஜய்
ஆனால் 60 ஆண்டு கால திராவிட இயக்க அரசியல் பாணியை முற்றிலுமாக மாற்றியது தமிழக வெற்றி கழகம். ரீல்ஸ் போட்டு ஜெயித்து விட்டார்கள் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி உதயநிதி வரை பலரும் அதே குற்றச்சாட்டை தான் முன்வைத்தனர். தேர்தல் நேரத்தில் பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், போஸ்டர்கள், டிவி விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்களை விட மொபைல் போனில் சில வினாடிகளில் மக்களை சென்றடையும் ரீல்ஸ்களை திறம்பட கையாண்டது தவெக.
ரீல்ஸ் கலாச்சாரம்
இளைஞர்கள் மத்தியில் அதற்கு மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது. அந்த டிஜிட்டல் அலை தேர்தலில் வெற்றி அலையாக மாறியது. ஆனால் ஆளும் கட்சியை எதிர்த்து மக்களிடம் செல்ல பயன்படுத்தப்பட்ட ரீல்ஸ் தற்போது ஆட்சியில் அமர்ந்த பிறகு தமிழக வெற்றிக் கழகத்துக்கு தலைவலியாக மாறி வருகிறது. அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் அமைச்சர் கீர்த்தனாவின் அரசு பள்ளி ரீல்ஸ். முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த மாணவியிடம் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறியதோடு கடைசி பெஞ்ச் மாணவிகள் என அவரது பேச்சு அதிகார தொனியோடு இருந்ததாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தது.
அமைச்சர் கீர்த்தனா
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தொடங்கி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரை கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதற்கு முன்பு கோட் சூட்டுடன் அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட தொழில் முதலீட்டு ரீல்ஸ் கடும் விவாதத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஒயிட் பவுடர் விவகாரம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உண்மையிலேயே மிகப்பெரிய தலைவலி தான். அமைச்சர் சரத்குமார் ஐபிஎல் போட்டியை பார்த்தபோது போதை மருந்து பயன்படுத்தியதாக பெரிய குற்றச்சாட்டு எழுந்தது.
அமைச்சர் சரத்குமார்
இது விஜய்க்கும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. தனது குழந்தைக்காக மாத்திரையை உடைத்தேன் என அமைச்சர் விளக்கம் அளித்தாலும் தற்போது வரை அது ஓய்ந்தபாடில்லை. உச்சபட்சமாக திமுக மாணவர் அணி தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்தது. அதுமட்டுமல்லாமல் பீச் ஒன்றில் கையில் டின் பீருடன் சரத்குமார் உலா வருவது போன்ற காட்சிகளும் வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
விஜய் அரசு
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தான் இப்படி என்றால் தவெக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களும் அடிக்கடி விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர் ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், அங்கன்வாடிகள், அரசு அலுவலகங்களில் ஆய்வு என்ற பெயரில் அவர்கள் அத்துமீறி வீடியோ எடுத்து வெளியிட்டது விஜய் அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது. இதை அடுத்து எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் தவிர்த்து யாரும் ஆய்வுகளில் ஈடுபடக்கூடாது என அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம்
ஆனாலும் தற்போது வரை ரீல்ஸ் கலாச்சாரம் ஓயவில்லை. போலியோ சொட்டு மருந்து முகாம்கள், அரசு பள்ளிகள், கோயில்களில் கூட ஆய்வு என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ரீல்ஸ் வெளியிடும் வழக்கம் தொடர்ந்து தான் வருகிறது. உச்சபட்சமாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களும் செவிலியர்களும் ரீலீஸ் கலாச்சாரத்தால் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் குதித்ததையும் கவனிக்க வேண்டும்.
எச்சரிக்கை
தேர்தல் வெற்றிக்கு மிகப்பெரிய ஆயுதமாக இருந்த ரீல்ஸ் கலாச்சாரம் தற்போது ஆட்சியில் அமர்ந்து பிறகும் அதே வடிவத்தில் தொடர்வது அந்த கட்சிக்கு பலன் தராது. மாறாக எதிர்மறை விமர்சனங்களை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதனால் தமிழக வெற்றி கழகம் தனது டிஜிட்டல் அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் எனவும், இல்லையேல் அந்த கட்சிக்கு அதுவே மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications