பஹ்ரைன், குவைத்தில் அலறிய சைரன்கள்! அமெரிக்க தாக்குதலுக்கு.. ஈரான் காட்டமான பதிலடி!
தெஹ்ரான்: ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பலை அட்டாக் செய்தாக ஈரான் மீது பழி சொல்லி, அந்நாட்டின் மீது சரமாரியான தாக்குதலை அமெரிக்கா நடத்தியிருந்தது. ஆனால், நாங்கள் அப்படி எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என்று கூறி.. அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் பதில் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
இந்த தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. அமெரிக்காவின் தேவையில்லாத தாக்குதலை பார்க்கும்போது.. வேலியில் போகிற ஓணானை வேட்டியில் விட்ட கதையாக இருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மத்திய கிழக்கில் குவைத், பஹ்ரைனில் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் இருக்கின்றன. இந்த நிலைகளை குறி வைத்துதான் தற்போது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இதனால் இந்த பகுதிகளில் எமெர்ஜென்சி சைரன்கள் ஒலிக்க தொடங்கியிருக்கின்றன.
தெற்கு ஈரானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள 85 அமெரிக்க ராணுவ நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் 5-வது கடற்படை தளம் அமைந்துள்ள பஹ்ரைனில் இன்று காலை இரண்டு முறை சைரன்கள் ஒலித்தது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதேபோல குவைத்தில் உள்ள அலி அல்-சலேம் விமான தளம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் ஏவுகணைகளைத் தங்கள் நாட்டு ராணுவம் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக குவைத் தெரிவித்துள்ளது.
ஈரானின் புஷெர் மாகாண வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் MQ-9 ரக ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு அந்நாட்டு அரசியல் பிரமுகர்களே கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் அதிபர் டிரம்பின் ஆதரவாளரான மார்ஜோரி டெய்லர் கிரீன், "முடிவில்லாத வெளிநாட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதாகக் கூறிவிட்டு, மீண்டும் மத்திய கிழக்கில் ஒரு போரைத் தொடங்குவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் முன்னாள் இயக்குனர் ஜோ கென்ட் கூறுகையில், "ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) தற்போது செயலிழந்துவிட்டது. ராணுவ ரீதியாக இதற்குத் தீர்வு காண்பதை விடுத்து, அமெரிக்கா அங்கிருந்து வெளியேறுவதே சிறந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications