தொடை பகுதிகளில் அரிப்பு இருக்கிறதா? அது படர்தாமரைதான்! ஸ்டீராய்டு ஆயின்மென்ட் பூசிட போறீங்க!
சென்னை: படர்தாமரையால் அவதிப்படுகிறீர்களா, அந்த பூஞ்சை தொற்று எதனால் வருகிறது, எப்படி வருகிறது என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் கிளினிக்கில் என்னைக் கல்லூரி மாணவர் அவரது தந்தையுடன் சந்தித்தார். கடந்த சில மாதங்களாக புதிதாக கல்லூரி விடுதிக்குச் சென்றிருக்கும் அவருக்கு இடுப்புக்கு கீழே இருபக்க உட்புற தொடைப்பகுதியில் அரிப்பும் சிவப்பு நிறத்தில் வட்ட வடிவில் புள்ளிகள் போல இருப்பதாகக் கூறினார்.

அவரைப் பரிசோதனை செய்து விட்டு அவருக்கு ஏற்பட்டிருப்பது படர் தாமரை என்று அழைக்கப்படும் பூஞ்சைக்காளான் தொற்று என்று கூறி அதற்குரிய சிகிச்சையைப் பரிந்துரைத்தேன். பொதுவாக விடுதி போன்ற பலர் புழங்கும் இடங்களில் இது போன்ற பூஞ்சைக் காளான் தொற்று ஏற்படுகிறது. இந்தப் பூஞ்சைத் தொற்றானது வியர்வையால் வரும் ஈரத்தன்மையும் அதனுடன் கதகதப்பும் இருக்கும் இடங்களில் எளிதாக வளரும் தன்மை கொண்டது.
ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்று கண்டவர் பயன்படுத்திய உடைகள், கைக்குட்டைகள், சீப்பு , கத்திரிக்கோல், சோப்பு போன்றவற்றை பகிர்ந்து கொள்வதால் பரவலாம். தொற்று கண்டவருக்கு உடலின் ஒரு பகுதியில் இருந்து கை மூலம் தொடுவதால் பல இடங்களுக்குப் பரவலாம்.
கால் மற்றும் கை நகங்கள், முகத்தில் உள்ள தாடி மற்றும் மீசை இருக்கும் பகுதிகள், வயிற்றுப் பகுதி, தலைப் பகுதி என்று பல இடங்களிலும் இந்தத் தொற்று வியாபித்திருக்கலாம். இந்தத் தொற்று இருப்பதாக அடையாளம் கண்டால் முறையான மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும். தோல் நோய் சிறப்பு நிபுணரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
அதை விடுத்து, மருந்தகங்களில் சுயமருத்துவம் செய்வது தவறு.
பல நேரங்களில் ஸ்டீராய்டு கலந்த களிம்புகளைத் தடவுவதால் லேசாக இருக்கும் தொற்று பல்கிப் பெருகி வளரும் தன்மையையும் பார்க்க முடிகின்றது. பூஞ்சைக்கு எதிரான மாத்திரைகளை அதற்குரிய சரியான களிம்புகளுடன் குறிப்பிட்ட காலம் பயன்படுத்துவது அவசியமானதாகும். முறையான சிகிச்சை மூலம் பூஞ்சைத் தொற்றில் இருந்து நிவாரணம் பெற முடியும்.
பூஞ்சைத் தொற்று ஏற்படாமல் தடுத்துக் கொள்ள செய்ய வேண்டியவை
1. குளித்து முடித்ததும் நன்றாக உடலை உலர்த்தி விட வேண்டும்.
குறிப்பாக உட்புற தொடைப்பகுதிகளை நன்றாக உலர்த்தி விட வேண்டும்
2. கைக்குட்டை, உடல் உலர்த்தும் துணி, சீப்பு , சோப்பு போன்றவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்த்து விடுவது நல்லது
3. இயன்றவரை இறுக்கமான ஆடைகளை குறிப்பாக காற்றோட்டம் இல்லாத உள்ளாடைகளை அணியாமல் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது
4. விடுதி போன்ற இடங்களில் பொதுக் கழிப்பறைகளை பொது குளியலறைகளை பயன்படுத்தும் போது கட்டாயம் செருப்பு அணிந்திருப்பது அவசியம்.
5. நாய் பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளிடம் இருந்தும் அவற்றுடன் நெருங்கிப் பழகுவதால் இந்தத் தொற்று பரவலாம். எனவே நாய் பூனைக்கு முறையான சிகிச்சை அவசியம். அவற்றுடன் ஆரோக்கியமான தூரத்தை கடைபிடிப்பது நல்லது
6. பூஞ்சைத் தொற்று ஏற்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது எளிதான காரியம். அதை விடுத்து ஸ்டீராய்டு கலந்த களிம்பைப் பூசி நேரத்தை வீணடித்தால் எந்த சிகிச்சைக்கும் அடங்காத பூஞ்சைத் தொற்றாக அது உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
