Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெட்ட வார்த்தையாக மாறிய இன்சுலின்.. ஊசி போட்டால் சைடு எஃபெக்ட் ஜாஸ்தியா.. டாக்டர் பரூக் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்சுலின் ஊசி போட்டால் பக்க விளைவுகள் அதிகமாக இருக்குமா என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பெரும்பாலும் ஒரு நீரிழிவு நோயாளியாவது இல்லாத தமிழ் குடும்பம் இல்லை எனலாம் என்கிற அளவுக்கு ஒவ்வொரு 100 பேருக்கும் 10 முதல் 15 நீரிழிவு / சர்க்கரை நோயாளிகள் நம் தமிழகத்தில் இருக்கிறோம். நீரிழிவு நோயாளிகள் இருக்கும் வீடுகளில் "இன்சுலின்" என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாகத்தான் பார்க்கப்பட்டு வருகிறது.

Dr Farook Abdulla says about Insulin

நீரிழிவு பாதித்த ஒருவருக்கு இன்சுலின் ஊசி போட மருத்துவர் பரிந்துரைத்தால் உடனே வரும் கேள்வி.. சார் மாத்திரைலயே பாத்துக்கலாமே.. இப்ப இன்சுலின் வேண்டாமே ப்ளீஸ்.. இன்சுலின் ஊசி போட்டா கடைசி வரைக்கும் போடனுமாமே சார்.. இன்சுலின்க்கு சைடு எஃபெக்ட் அதிகமாமே என்று பல கேள்விகள் வரும்.

இவை யாவும் இன்சுலின் ஊசி வேண்டாம் என்பதை குறிக்கும் மறைமுக கேள்விகளே ஆகும். ஆனால் இந்த இன்சுலினால் பல உயிர்கள் தங்களது ஜீவிதத்தை நடத்திக் கொண்டு வருகின்றன. டைப் ஒன்று எனப்படும் இன்சுலின் சுத்தமாக சுரக்காத நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி - உயிர் காக்கும் தோழன். இன்சுலின் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் இருந்த டைப் ஒன்று டயாபடிஸ் பாதித்த குழந்தைகள் , இளைஞர்கள் , இளைஞிகள் எத்தனை கொடூரமான மரணத்தை சுவைத்திருப்பார்கள் என்று எண்ணிப்பார்க்கும் போது நிச்சயம் இந்த இன்சுலினின் கண்டுபிடிப்பு எப்படி இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பல ராணுவ வீரர்களின் உயிரை காக்க உதவிய பென்சிலின் ஊசியைப் போல அதிமுக்கியத்துவம் பெறுகிறது.

இந்த இன்சுலின் நமது உடலில் செய்யும் வேலைகள் ஒன்றல்ல இரண்டல்ல.. அதனால் தான் அதற்கு சகலகலா வல்லவன் என்று பெயர் வைத்துள்ளேன். கணையத்தின் எடையில் 100 இல் ஒரு பங்கு மட்டுமே எடை கொண்ட இந்த ஜலெட் ஆஃப் லாங்கர்ஹான்ஸ் எனும் பகுதியில் ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, PP என்று பல வகை செல்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஹார்மோனை சுரக்கின்றன.

இங்கு நமது ஹீரோவான இன்சுலினை சுரப்பது பீட்டா செல்களாகும். இன்சுலினின் முக்கிய வேலை நாம் உண்ணும் உணவை க்ளூகோஸ் ( மாவுச்சத்து) உடல் முழுவதும் கொண்டு சேர்ப்பது. முக்கியமாக மூன்று இடங்கள்

1. கல்லீரல்
2. உடல் முழுவதும் பரவி கிடக்கும் கொழுப்பு (adipose tissue)
3. எலும்புடன் கூடிய தசைகள்( skeletal muscles)

இன்சுலின் சுரக்கப்படும் போது நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகள் பின்வருமாறு செரிமானம் ஆகும். நாம் உண்ணும் மாவுச்சத்து க்ளூகோசாக மாற்றப்பட்டு உடலின் பல்வேறு இடங்களுக்கும் செல்லும். கொழுப்பு செல்கள் க்ளூகோசை உபயோகித்து ஜீவிதம் நடத்தும்.
கல்லீரலில் இந்த க்ளூகோஸில் ஒரு பகுதி க்ளைகோஜெனாக மாற்றப்பட்டு சேமிக்கப்படும்.

எலும்புடன் ஒட்டிய தசைகளில் க்ளூகோஸ் அதிகமாக உபயோகிக்கப்படும் நாம் உண்ணும் உணவில் கலந்திருக்கும் கொழுப்பானது இன்சுலின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் நிலையில் நேரே கொழுப்பு செல்களாக (triglycerides) மாறி உடலில் தொடை , பின்புறம், தொப்பை என்று கிடைக்கிற இடத்தில் எல்லாம் சேமிக்கப்படும். கல்லீரலுக்கு செல்லும் கொழுப்பு ( ஃபேட்டி அமிலங்கள்) , கல்லீரலை தூண்டி கொழுப்பு செல்களை உருவாக்குமாறு கட்டளையிடும் ( lipogenesis).ஆகவே இன்சுலின் ரத்தத்தில் அதிகமாக இருந்தால் நமது உடல் கொழுப்பை சேமிக்கும் வேலையை செய்யும்.

நாம் உண்ணும் உணவில் இருக்கும் புரதம் , அமினோ அமிலங்களாக மாற்றம் அடைந்துவிடும். இன்சுலின் ரத்தத்தில் இருந்தால் இந்த அமினோ அமிலங்கள் புதிதாக புரதம் உருவாக உபயோகிக்கப்படும். ஆகவே, இன்சுலின் ரத்தத்தில் இருந்தால் புரதம் உடைவது தடுக்கப்படுகிறது. புதிதாக புரதம் உருவாகுகிறது. ஒவ்வொரு முறை நாம் உணவு உண்டவுடனேயே இன்சுலின் சுரக்கப்படுகிறது. இந்த இன்சுலினின் விளைவால் நமது ரத்தத்தில் க்ளூகோஸ் ஒரு அளவுக்கு மேல் ஏறாமல் இருக்கிறது.

மூளை, சிவப்பு ரத்த அணுக்கள், எலும்பு மஜ்ஜை, கிட்னியின் உள்பகுதி போன்ற க்ளூகோசினால் மட்டுமே இயங்கும் பகுதிகளுக்கு க்ளூகோஸ் கிடைக்கிறது. இது நாம் சாப்பிட்ட இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை நிலைக்கும். அதற்கு பிறகு ரத்த க்ளூகோஸ் அளவுகள் குறையும் அல்லவா? இப்போது தான் ஆல்பா செல்களின் ஆதிக்கம் ஆரம்பமாகும். ஆல்பா செல்கள் - க்ளூகோகான் எனும் ஹார்மோனை ரத்தத்தில் அதிகமாக சுரக்கும். இந்த க்ளூகோகான் கல்லீரல் சேர்த்து வைத்த க்ளைகோஜெனை உடைத்து க்ளூகோசாக மாற்றி ரத்தத்தில் கலந்து கொண்டே இருக்கும். இது மூலம் மூளைக்கு க்ளூகோஸ் வரத்து தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.

சரி க்ளைகோஜெனும் தீர்ந்து விட்டது என்ன செய்வது..? வீட்டில் காலையில் வைத்த இட்லி மீந்து போனால் அம்மா எப்படி இரவு உணவாக இட்லி உப்புமா செய்வாரோ.. அதைப்போல நமது கல்லீரல் நாம் உண்ணும் புரதச்சத்தில் இருந்து க்ளூகோசை உருவாக்கி ரத்தத்தில் கலக்கும். இதை gluconeogenesis என்கிறோம். சரி.. நான் புரதமும் உண்ணவில்லை ... பட்டினி கிடக்கிறேன் என்ன ஆகும்.. நமது உடலில் சேமித்து வைத்த கொழுப்பு கரைந்து ஃபேட்டி அமிலங்களாக உருமாறும்.

இந்த ஃபேட்டி அமிலங்களை கொண்டு நமது கல்லீரல் , கீடோன்களை சமைத்து தரும். அடுத்த உணவு வரும் வரை, கீடோன்கள் மூளைக்கு எரிபொருளாக அமையும். தசைகளில் சேமித்து வைத்து புரதம் எரிக்கப்பட்டு க்ளூகோசாக மாறும். அதை வைத்து கிட்னி, சிவப்பு அணுக்கள் போன்றவை பிழைக்கும். இப்படியே 70 நாட்களுக்கு நீர் மட்டும் அருந்தி உயிர் வாழலாம் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இதற்கு பெயர் starvation ketosis.இதே விசயத்தை உணவின் மூலம் உண்டாக்கினால் அது nutritional ketosis.

இதில் இருந்து தெரிவது என்னவென்றால் நமது உடலின் ஒரு சிறிய உறுப்பான கணையத்தில் 100இல் ஒரு பங்கு எடை கூட இல்லாத தம்மாத்துண்டு இடத்தில் இருந்து சுரக்கும் பலவேறு ஹார்மோன்களில் ஒன்றான "இன்சுலின்" நமது உடலை எப்படி நிர்மாணிக்கிறது பாருங்கள்.. இந்த இன்சுலின் முற்றிலும் சுரக்கவில்லையென்றால் அது டைப் ஒன்று டயாபடிஸ். இதே இன்சுலின் சுரந்தும் வேலை செய்யவில்லையென்றால் அது டைப் டூ டயாபடிஸ். அவ்வளவு தான் விசயம் இந்த இன்சுலினை அடக்கி ஆண்டால் உங்கள் ஆரோக்கியம் உங்கள் கைகளில் என்றும் இருக்கும். இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+