வெளிநாட்டில் வாழும் கணவன்.. உள்நாட்டில் தூக்கம் வராமல் பித்து பிடித்த மனைவி.. ஏன் என்னாச்சு?
சென்னை: வெளிநாட்டில் வாழும் கணவன்மார்கள் மனைவிகளிடம் தினந்தோறும் அன்பாக ஆறுதலாக பேசாமல் இருந்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்ததாவது: சமீபத்தில் கிளினிக்கில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவரை சந்தித்தேன். அவரது பிரச்சனை யாதெனில்
கடந்த சில மாதங்களாக உறக்கத்தை சரிவர கைகொள்ள முடியவில்லை.

எப்போதும் உறக்கத்தில் ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருப்பது போலவும் ஒரு திரைப்படம் போல ஓடிக் கொண்டிருப்பது போலவும் உள்ளது எனவும் கூறவே அவர் பக்க வரலாற்றைக் கேள்விகள் வினவியதன் மூலம் பெற்ற செய்தி கணவர் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். வருடம் ஒருமுறை மட்டுமே சில நாட்கள் சந்திப்பு பின் பிரிவும் பிரிவு நிமித்தமும் - இதுவே கடந்த சில வருடங்களாகக் கொண்டிருக்கும் வாடிக்கை.
அவரது கணவரின் தாய், தந்தை இருவரும் கடந்த ஒரு வருடத்தில் மரணமடைந்து விட அந்த மரணத்தின் தாக்கம் கணவரை மனத்தாழ்வு நிலைக்கு கொண்டு சென்றுவிட அதனால் தனது மனைவியிடம் தினசரி முறையாகப் பேசுவதைக் கூட சரிவர செய்யாமல் இருக்கிறார். இணையைப் பொருத்தவரை அது ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் தினசரி சில ஒட்டுதலான வார்த்தைகள், ஸ்பரிசமான தொடுதல்கள், செல்ல சண்டைகள், ஊடல், பின்பு கூடல் இது போன்று மாறி மாறி இருப்பதே வழக்கமான ஒன்று.
அதில் இருந்து மாற்றம் அடையும் போது அதை மனம் ஏற்பதில்லை. பித்து நிலைக்கு சென்று விடுகிறது. இவ்வளவு நாள் நார்மலா இருந்த மனுசன் இப்போ கண்டுக்கறதே இல்லையே என்பதே மனைவிமார்களுக்குப் பெரிய மன அழுத்தத்தை தருவதைக் கண்டிருக்கிறேன். மனைவியரைப் பொருத்தவரை குறிப்பாக வெளிநாடுகளில் அலுவல் புரியும் கணவர்களின் மனைவிமார்கள் / கணவர்களும் தான் - அவர்களது இந்த ஸ்பரிசம் சார்ந்த தேடலை அலைப்பேசி உரையாடல் வாயிலாகவே பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.
அது நின்று போகும் போது உறவு நாண் நாளுக்கு நாள் இத்துப்போய் ஒரு நாள் அத்துப் போய் விடும் சூழலும் உருவாகிறது. கணவர்கள் வெளிநாட்டில் இருக்கும் சூழலில் - மனைவிகள் தங்களின் பிள்ளைகளுடன் இங்கே வாழும் போது தந்தையின் சுமையையும் சேர்த்தே சுமக்கிறார்கள். இதனால் மனச்சுமை கூடவே உடல் சுமையும் சேருகிறது.
இது தனியான மன அழுத்தத்தை தரவல்லது. மனைவியை கணவன் சரியாகக் கண்டு கொள்ளவில்லை எனில் தொலைவான உறவு சூழலில்
அலைப்பேசி உரையாடல் கூட சரியாக நிகழாத நிலையில் கட்டாயம் உறவில் விரிசல் விழத்தான் செய்யும். நான் சந்தித்த இந்தப் பெண்மணியும் இதே போன்ற ஒரு பித்து நிலையில் இருப்பதை அறிந்து அவருக்குரிய சிகிச்சையை அளித்து மன நல மருத்துவரிடம் பரிந்துரை செய்துள்ளேன்.
அவரது கணவரிடமும் அடுத்த முறை தொலைப்பேசியில் பேசி என்னால் ஆன விசயங்களை அவருக்கு எத்தி வைத்து உறவுச் சிக்கலை தீர்க்க முயற்சி செய்கிறேன் என்று கூறியிருக்கிறேன். தனக்கு உள்ள பிரச்சனை என்னவென்றே அறிய இயலாமல் என்னிடம் வந்த சகோதரிக்கு அவரது பிரச்சனை "உங்கள் கணவர் உங்களை சரிவர கண்டு கொள்வதில்லை. அது தான் பிரச்சனை" என்று கூறியதும் கண்களில் கண்ணீர் வடிந்தோட உண்மை சார் அதான் என் பிரச்சனை என்றார்.
எனக்கு பம்பாய் திரைப்படத்தில் வைரமுத்து அவர்கள் எழுதிய வரிகள் நியாபகம் வந்தது
"பூமி சுற்றுவது நின்றுவிட்டால்
புவியில் என்றுமே மாற்றமில்லை
புருஷன் சுற்றுவது நின்று விட்டால்
எந்நாளும் பெண் வாழ்வில் ஏற்றங்கள் இல்லை"
இது பிற்போக்கான வரிகள் போன்று இருப்பினும் கணவன் மனைவி உறவுமுறையில் பெண்கள் எதிர்பார்ப்பது புருஷன் எப்போதும் தங்களை சுற்ற வேண்டும் என்பதே ஆகும். அதில் தவறே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த எண்ணம் மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு கணவன் செய்யாமல் போனால் பல ஐயங்கள் மனைவிகளின் மனதில் எழுவதும் கண்கூடு.
வெளிநாட்டில் வாழும் கணவன்மார்களுக்கு ஒரு அழகிய வேண்டுகோள் ஏற்கனவே தங்களின் மனைவிமார்கள் பல விதமான மன அழுத்தங்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் தரும் விசயமாக தங்களது உரையாடல்கள் அமைகின்றன. அதை எப்போதும் தொய்வுறாமல் தொடர்ந்து உறவைப் பேணக் கோருகிறேன்.
இங்கு வாழும் மனைவிமார்களுக்கு டென்சன் தலைவலி , மைக்ரேன், தூக்கமின்மை, உடல் பருமன், நீரிழிவு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுவதைக் கண்கூடாகக் காண்பதால் இந்தப் பதிவை எழுதுகிறேன். உடலால் பல ஆயிரம் மைல்கள் பிரிந்திருந்தாலும் உணர்வாலும் மனதாலும் மகன்றில் பறவைகளாக எப்போதும் வாழ்வதே உறவுக்கு வலுசேர்க்கும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications