Exclusive:கோடை வந்தாச்சு! தோல் நோய் அபாயம்! எந்த சன்ஸ்கிரீன் லோஷன் பெஸ்ட்? ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் டிப்ஸ்
கோடை காலம் தொடங்கிய நிலையில் தோலை பாதுகாப்பது எப்படி?
சென்னை: கோடை காலத்தில் தோலைப் பராமரிப்பது எப்படி? தோலில் ஏற்படக் கூடிய நோய்கள் யாவை என்பது குறித்து தோல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகுசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகுசுந்தரம் அளித்த கேள்வி பதில் வடிவ பேட்டி.
கேள்வி: கோடைக் காலம் வந்தாலே பெரும்பாலானோருக்கு நமது சருமம் dry skinஆ, இல்லை oily skin ஆ என்பதே சந்தேகமா இருக்கும். அதை கண்டுபிடிப்பது எப்படி?
பதில்: கோடை காலத்தில் தோலில் ஏற்படக் கூடிய பாதிப்பை மூன்று வகைகளாக பிரிக்கலாம். ஒன்று சூரியனில் இருக்கும் புற ஊதா கதிர்களால் ஏற்படக் கூடி பாதிப்புகள், கோடை காலத்தில் அதிகமாக சுரக்கும் வியர்வையால் ஏற்படக் கூடிய பாதிப்புகள், வியர்வை மற்றும் சூரிய ஒளி பாதிப்பினால் ஏற்படக் கூடிய பூஞ்சை காளான் தொற்று உள்ளிட்டவைகளால் பாதிப்புகள் ஏற்படும். மற்றபடி யாருக்கும் ஆயிலி ஸ்கின், டிரை ஸ்கின் என்றெல்லாம் கிடையாது. எல்லாருக்குமே இரண்டும் கலந்த ஸ்கின்தான் இருக்கிறது. சில இடங்களில் ஆயிலாக ஏன் இருக்கிறது என்றால் உடலில் அதிக அளவு எண்ணெய் சுரப்பிகள், வியர்வை சுரப்பிகள் இருப்பதால்! இவையெல்லாம் நாம் வசிக்கும் தட்பவெப்ப நிலையை பொருத்தது. சென்னையில் வசிப்போருக்கு கூடுமானவரை ஆயிலி ஸ்கின்தான் இருக்கும்.

சன் ஸ்கிரீன் லோஷன்
கேள்வி: சன் ஸ்கிரீன் லோஷனை எப்படி தேர்வு செய்வது?
பதில்: சூரிய ஒளியில் நிறைய கதிர்கள் இருக்கின்றன. அதில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை புறஊதா கதிர்கள். இந்த கதிர்கள் நன்மையும் செய்கின்றன. சில நோய்களுக்கு இந்த கதிர்களை சிகிச்சையாகவே கொடுக்கிறோம். குறிப்பாக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஏற்படக் கூடிய புறஊதா கதிர்கள் நம்முடைய தோலுக்கு மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நேரங்களில் வெளியே போவதை தவிர்க்க வேண்டும். அப்படியே அத்தியாவசியமாக போக வேண்டும் என்றால் சன் ஸ்கிரீன் லோஷனை நாம் பயன்படுத்தலாம். சூரிய ஒளி தடுப்பான்கள் (Sun Protecting Factor) எஸ்பிஎஃப் 15 க்கு மேல் இருந்தால் அது நல்லது. இந்த லோஷனை வெயிலில் கிளம்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே அப்ளை செய்துவிட்டு, பிறகு ஒவ்வொரு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை மீண்டும் அப்ளை செய்ய வேண்டும். ஒரு முறை தடவினால் அதன் செயல்பாடு ஒன்றரை மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரைதான் இருக்கும். காற்றில் வெப்பமும் ஈரப்பதம் சென்னையில் அதிகமாக இருப்பதால் வியர்வை அதிகமாக சுரக்கும். இந்த நேரத்தில் சன் ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்தினால் வியர்வை அதிகமாகி ஆயில் நிறைய வழியும் வகையில் இருக்கும். இந்த லோஷன்கள் பொதுவாக கெமிக்கல் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எனவே இதனாலும் அலர்ஜி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே லோஷனை போடுவதை காட்டிலும் வெளியே செல்லும் போது குடை பிடித்துக் கொள்ளுதல், தொப்பி அணிந்து கொள்ளுதல், வெயில் படாதவாறு மெல்லி பருத்தி உடைகளால் உடலை முழுவதுமாக மூடுவது, முகக் கவசமே ஒரு நல்ல சன் ஸ்கிரீன்தான். இது சூரிய ஒளி கதிர்களை தடுப்பதுடன் காற்றில் இருக்கக் கூடிய தூசு உள்ளிட்டவைகளையும் தடுக்கும்.

ஜெல் பேஸுடு
கேள்வி: சன்ஸ்கிரீன்களில் gel based, cream based இவற்றில் எதை தேர்வு செய்வது?
பதில்: நம் ஊரின் தட்பவெப்பநிலைக்கு ஆயிலி சன்ஸ்கிரீன் என்றால் அது சரியாக இருக்காது. எனவே gel based சன் ஸ்கிரீன்களை பயன்படுத்தலாம். மேலும் Matte Finish sunscreen ஆல் என்ன நன்மை என்றால் இவை புறஊதா கதிர்களை மட்டும் தடுக்காமல், visible lightஐயும் தடுக்கின்றன. எனவே சன்ஸ்கிரீன் லோஷனை தேர்வு செய்யும் போது எஸ்பிஎஃப் 15 க்கு மேல் இருந்து Matte Finish Sunscreen என்றால் மிகவும் நல்லது.

தோல் பிரச்சினை
கேள்வி: கோடை காலங்களில் 3 விஷயங்களால் தோலில் பாதிப்புகள் ஏற்படும் என சொன்னீர்கள். அது எதனால் ஏற்படுகிறது. அவற்றை தடுப்பது எப்படி?
பதில்: சூரிய ஒளியினால் வரும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க நான் சொன்னது போல் முகக்கவசம், தோலை மறைக்கும் பருத்தி ஆடை, குடை பிடித்தல் இவற்றை பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் சன்ஸ்கிரீன் லோஷனை பயன்படுத்தலாம். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என முன்பே சொல்லியிருக்கிறேன். அடுத்ததாக வியர்வையில் இருந்து வரும் தோல் பாதிப்பை சரி செய்ய வியர்வை சுரந்து சுரந்து வியர்வை நாளங்கள் வெடித்து அது வியர்க்குருவாக வரும். வியர்வை சுரப்பிகள் புத்துயிர் பெற விட்டமின் சி அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். அடுத்ததாக நோய் கிருமி தொற்று ஏற்படுவதை எப்படி தடுப்பது என்றால், நம் சுற்றுச்சூழல் வெப்பம் அதிகமானால் உடலின் வெப்பமும் அதிகமாகும். இதை தணிக்க தோலானது உடல் சூட்டை தணிக்க வியர்வையை சுரக்கும். எங்கெல்லாம் தோல் ஈரமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நோய் கிருமி தொற்று ஏற்படலாம். கோடை காலங்களில் வியர்வை அதிகமாக சுரப்பதால் நோய் எதிர்ப்பு திறனும் குறையும் போது பாக்டீரியா தொற்றும் அதிகரிக்கும். இதனால் சூட்டு கொப்பளங்கள் அதிகம் வரலாம்.

பூஞ்சை காளான்
தோல் ஈரமாக இருக்கும் இடங்களில் பூஞ்சை காளான் தொற்று ஏற்படலாம். அதில் பல வகைகள் உண்டு. கோடை காலங்களில் அக்கி நோய் (அக்னி கரப்பான்) ஏற்படலாம். இது வைரல் தொற்று. அம்மை நோயும் ஏற்படலாம். இந்த நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க வியர்வை தங்காமல் பருத்தியினால் ஆன ஆடைகளை அணியவேண்டும்.இரு வேளைகள் குளிக்க வேண்டும். அதுவும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரை பயன்படுத்தினால் சளி பிடிக்கும், முடி கொட்டும் என்பதெல்லாம் மூடநம்பிக்கை. இதனால் நோய் கிருமிகள் நமக்கு பாதிப்பை ஏற்படாது. இவ்வாறு டாக்டர் முருகுசுந்தரம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications