பஜ்ஜி, போண்டா, பருப்பு வடையை விடுங்க! கருப்புக் கொண்டைக் கடலையில் ஹெல்தியான வடை செய்வது எப்படி?
சென்னை: பஜ்ஜி, போண்டா, வடை, அது இதுனு சாப்பிடணும்னு தோன்றுகிறதா, அதிலும் இனி மழைக்காலம்! மழைக்கு சூடாக எதையாவது நம் வாய் கேட்கும். இதற்காக பஜ்ஜி, போண்டா, வடை உள்ளிட்டவைகளை செய்து சாப்பிடலாம்.
ஆனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் சதா, சர்வகாலமும் இது போல் உணவுகளை சாப்பிட கூடாது, அவர்களும் தயங்குவர். அது போல் குழந்தைகளுக்கும் இது போன்ற எண்ணெய் பதார்த்தங்களை கொடுக்க நம் மனம் ஒவ்வாது.

மேலும் ஒரே மாதிரி செய்தாலும் குழந்தைகளுக்கு பிடிக்காது. எனவே குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி, அதே நேரம் புரதங்கள் கிடைக்கும் வகையில் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். இதற்கு கருப்பு கொண்டைக் கடலை வடையை செய்து கொடுக்கலாம்.
சும்மாவே சுண்டல் செய்து கொடுத்தாலும் ஒரு சில குழந்தைகள் எண்ணெய் பொருளை சாப்பிடுவதில் காட்டும் ஆர்வத்தை சுண்டலில் காட்டமாட்டார்கள். எனவே அவர்களுக்கு இது போன்று செய்து தரலாம். முதலில் தேவையான அளவு கருப்பு கொண்டை கடலையை 8 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
பிறகு இந்த கருப்பு கொண்டை கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறியதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா, சோம்பு, கேரட் துருவல், கோஸ் துருவல், உப்பு, பெருங்காயம் போட்டு நன்கு வடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து வடைகளை கைகளால் தட்டி போட வேண்டும். வடைகள் பொன்னிறமானதும் அவற்றை வடி ஜல்லியில் போட்டு எண்ணெய் வடிந்தவுடன் சாப்பிடலாம். இதன் மூலம் புரத சத்து கிடைக்கும். குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் வித்தியாசமாகவும் இருக்கும்.
இந்த கருப்பு கொண்டைக் கடலையில் அதிக ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. குறைந்த கொழுப்புகள் உள்ளன. 100 கிராம் கொண்டைக் கடலையில் 164 கிராம் கலோரி, 20 கிராம் புரதம், கால்சியம் 5 சதவீதம், இரும்பு 16 சதவீதம், கண்களுக்கு நன்மை செய்யும் விட்டமின் ஏ 1 சதவீதமும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி 2 சதவீதமும் இருக்கிறது.
இதில் உள்ள நார்ச்சத்துக்ள் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும். வயிற்றை ஃபில்லிங்காக வைத்திருக்கும். ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. ரத்தம் உறைவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயத்தை தடுக்கின்றன. சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இரும்பு சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகையை தடுக்கும்.












Click it and Unblock the Notifications