வேப்பிலை கலக்குதே.. கல்லீரலை காக்கும்.. உள்ளுறுப்புகளுக்கு நன்மை தரும் சத்து அடங்கிய வேப்பங்கொழுந்து
சென்னை: குளுகுளு இலையான வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா? வேப்பிலையில் ஜூஸ் தயாரித்து குடிப்பதால் குணமடையும் நோய்கள் என்னென்ன? யார் யாரெல்லாம் இந்த வேப்பிலை தவறாமல் சாப்பிட வேண்டும்? சின்ன டிப்ஸ்
முருங்கையிலைகளை போலவே வேப்பிலைகளும் இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதமாகும்.. ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அடங்கியிருப்பதால், வேப்பிலைகள் மிகசிறந்த மருந்தாக நமக்கு திகழ்கிறது.

வேப்பிலையின் இலை, பட்டை, வேர் உட்பட அனைத்துமே மருத்துவ நன்மைகள் கொண்டவை.. உடலிலுள்ள கோழையை அகற்றக்கூடியது வேப்பிலைகள்.. சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளை கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காய்ச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், வயிற்றில் உள்ள பூச்சிகள் போன்ற எந்த பிரச்சனையும் வேப்பிலைகளே தீர்வாகின்றன.
கிருமிநாசினி: வேப்பிலைகள் மிகச்சிறந்த கிருமிநாசினியாகும். எனவே, உடலின் உஷ்ணத்திலிருந்து காப்பதுடன், அம்மை புண்களை விரைவாக குணமாக்குகின்றன.. பாதத்தில் வெடிப்புகள், பாத எரிச்சல், நகசுத்தி இருந்தாலும் நான்கைந்து வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசலாம். சொரி, சிரங்குகள், புண்கள் இருந்தாலும், இந்த இலையை மட்டுமே அரைத்து பூசலாம். தலைக்கு பூசி குளித்தாலும், பொடுகு, புண்கள் நீங்கிவிடும்.
வேப்பிலை அளவுக்கு அதிகமாக கசப்பாக இருக்கும் என்பதால், லேசான தித்திப்பு சுவை நிறைந்த வேப்பங் கொழுந்தினை சாப்பிடலாம்.. இதனால் ஏற்படும் பலன்கள் ஏராளம்.. குறிப்பாக, உள்ளுறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது.. சருமத்தை மினுமினுக்க வைக்கும் தன்மை வேப்பிலைகளுக்கு உள்ளது. சுவாச கோளாறுகளுக்கும், குடல் புழுக்களை வெளியேற்றுவதற்கும் வேப்பங்கொழுந்துகள் அருமருந்தாகும்.
வேப்பங்கொழுந்து: அந்தவகையில், வெறும் வயிற்றில் இந்த வேப்பங்கொழுந்தினை அரைத்து விழுங்கலாம். குழந்தைகளுக்கும் தரலாம்.. இதனால் வயிறு சுத்தமாகும். அல்லது வேப்பங்கொழுந்தினை விழுதாக அரைத்து, சிறிது தேனை தடவியும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் உடலில் தொற்று அண்டாது.. அலர்ஜிகளும் விலகிவிடும்..
நான்கைந்து வேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்கிறார்கள்.. இதற்கு ஒரு லிட்டர் நீரில் 20 வேப்பிலைகளை போட்டு, அது பாதியாக சுண்டும்வரை காய்ச்சி வடிகட்டி, உணவுக்கு முன்பு அரை டம்ளர் குடித்து வரும்போது, நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
அனீமியா: அதேபோல அனீமியா பிரச்சனையும் தீர்ந்து ரத்தம் பெருகும்.. ரத்தத்தை சுத்திகரிக்க செய்து, கெட்ட கொழுப்பையும் குறைப்பதற்கு இந்த வேப்பிலைகள் பயன்படுகின்றன.
ஒருவேளை விழுதாகவோ அல்லது வெறுமனே மென்று சாப்பிட விருப்பமில்லாவிட்டால், வேப்பிலையில் சாறு எடுத்து தேன் கலந்து குடிக்கலாம். கல்லீரலில் எந்த கோளாறு இருந்தாலும், வேப்பிலை ஜூஸ் குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.. கல்லடைப்பு, கல்லீரல் வீக்கம் பாதிப்பு உள்ளவர்கள் வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம். இதிலுள்ள நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்திற்கு உதவுகின்றன.. உணவு குழாய்களில் கிருமிகள் இருந்தாலும் அவை வெளியேறிவிடும்.
புற்றுநோய் வளர்ச்சி: புற்றுநோய் வளர்ச்சியை தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. வைரஸ்கள், தொற்றுக்களிலிருந்து நம்மை காக்கும் சக்தி வேப்பிலைகளுக்கு அபரிமிதமாகவே உள்ளது. இத்தனை நன்மைகள் இருந்தாலும், இதுபோன்ற சக்தி வாய்ந்த மூலிகைகளை சாப்பிடுவதற்கு முன்பு, மருத்துவர்களின் ஆலோசனையை பெறுவது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications