Parkinson's disease Day: நடுக்குவாதம் எனும் பார்கின்சன் நோய்..வராமல் தடுக்க என்ன செய்யலாம்
சென்னை: வயதானவர்கள் சிலருக்கு சின்ன பொருளை கூட கைகளால் பிடிக்க முடியாத அளவிற்கு கைகள் நடுங்கும். இதனை பார்கின்சன் நோய் என்று சொல்வார்கள். இந்த நோய் பாதிப்பு ஏற்பட காரணம் என்ன இந்த நோய் வராமல் தவிர்க்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
பார்கின்சன் நோய் எனப்படும் நடுக்குவாத நோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே உலக பார்கின்சன் நோய் தினம் உலகம் முழுவதும் ஏப்ரல் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஜேம்ஸ் பார்கின்சன் என்பவர்தான் இந்த நோயை 1817ஆம் ஆண்டு கண்டறிந்தார் அவரது பெயராலேயே பார்க்கின்ஸன் நோய் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் (Parkinson's disease) அல்லது பீ.டி என்பது மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கின்ற ஒரு நோய். மூளையில் Dopamine என்கிற ரசாயன குறைபாட்டால் இது ஏற்படுகிறது. பொதுவாக 40 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் இந்த நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் செய்யக்கூடிய வேலையிலேயே அதன் அறிகுறிகளை உணர முடியும். எந்த ஒரு பொருளையும் கையால் சரியாக பிடிக்க முடியாமல் போவது, ஒரு கப் தண்ணீரையோ, டீ கப்புகளை கூட கைகளில் பிடிக்க முடியாமல் நடுங்குவது, தங்களுடைய பல்வேறு அத்தியாவசிய வேலைகளைக் கூட செய்ய முடியாமல் தங்கள் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கிற பல முதியவர்களை நாம் பார்த்திருப்போம்.
பர்க்கின்சன் உண்டானவர்களுக்கு அவர்களது இயல்பான வேகத்தில் தொய்வு ஏற்படும். மயக்கம், நடுக்கம் ஏற்படும். நடக்கும்போதும், உட்கார்ந்து எழும் போதும் தள்ளாடுவார்கள். சாதாரணமாக அமர்ந்து இருக்கும்போதேகூட கை, கால்கள், உதடுகள் நடுங்கும்.
நடுக்குவாத நோய் வந்தவர்களுக்கு மூளைதான் அதிகமாக பாதிக்கப்படும். இதன் காரணமாக உட்கார்ந்து எழும்போது முன்புறம் அல்லது பின்பக்கம் விழுவதுபோல் எழுவர். 60 வயதை தாண்டும்போது வழக்கத்திற்கு மாறாக மெதுவாக முதியவர்கள் தங்களுடைய வேலைகளை செய்வார்கள். நடுக்கம், பேச்சில் தடுமாற்றம், உட்கார்ந்து எழும்போது தவறி விழுவது போன்ற மாற்றங்கள் ஏற்படும். பாதிப்படைந்த கையால் வேலை செய்யும்போது நடுக்கம் குறையும். மனச் சோர்வு, கோபம் ஏற்படும்போது நடுக்கம் அதிகரிக்கும். இதெல்லாம் நடுக்குவாத நோயின் அறிகுறிகளாகும்.
தமிழ்நாட்டில் நடுக்குவாத நோயின் தாக்கம் இப்போது அதிகமாக இருக்கிறது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகளோடு 10 நோயாளிகள் ஒரு நாளைக்கு அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களில் 2 பேர் நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். நடுக்குவாதம் பற்றிய விழிப்புணர்வு மேலை நாடுகளில் 18ஆம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டுவிட்டது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் பலருக்கு நடுக்குவாதம் பற்றி தெரியவில்லை.
நடுக்குவாதம் என்பது நீரிழிவு, ரத்த அழுத்தம் போல வாழ்நாள் முழுவதும் சிகிச்சையும், கவனிப்பும் தேவைப்படும் நோயாகும். எனவே, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். மருந்து உட்கொள்வதைத் தவிர்த்தால் நோயின் தீவிரம் அதிகரிக்கும்.

நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பு தான் இந்த பர்கின்சன் நோய். பொதுவாக இந்த நோய் 60 வயதிற்கு மேற்பட்ட மக்களை அதிகளவில் பாதிக்கிறது. பெரியவருக்கு வரும் இந்த நோயின் அறிகுறிகளை நாம் முன்னரே அறிந்தால் இந்த நோயை ஓரளவுக்கு குறைக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்த பர்கின்சன் நோய் டோபமைன் என்ற பொருளை உருவாக்கும் மூளையின் செல்களை பாதிக்கிறது. இந்த நோய் குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களை பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நோயுடன் வாழ்கிறார்கள் என்று பர்கின்சன் அறக்கட்டளை தெரிவித்து உள்ளது. இன்ஸோமினியா, மனச்சோர்வு போன்றவை பர்கின்சன் நோயில் மிக முக்கியமான அறிகுறிகளாக இருக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூங்குவதில் சிக்கல் உண்டாகி நிம்மதியாக உறங்க முடியாமல் தவிப்பார்கள்.
நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை வெளி இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்கள் மேல் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதனால் திருவிழாக்கள், இல்லத்தில் நடைபெறும் விசேஷங்கள் போன்றவற்றில் அவர்களைத் தவிர்க்கக் கூடாது. நடுக்குவாதம் உள்ளவர்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்தால், அவர்களைப் பாதுகாப்பாக கூடுதல் கவனம் எடுத்து அழைத்துச் செல்ல வேண்டும்.
சரியான நேரத்தில் நடைப்பயிற்சி, பிசியோ தெரபி செய்வதன் மூலம் பழைய நிலைக்கு மாற வாய்ப்பிருக்கிறது. பழங்கள், கீரை, வேக வைத்த காய்கறிகளை சாப்பிடலாம். பச்சைப்பயறு தினமும் சிறிதளவு ஊறவைத்து பச்சையாக சாப்பிடுதல், பச்சை வெண்டைக்காய், பச்சையாக முட்டைகோஸ் சிறிதளவு, உப்பு நீரில் ஊறவைத்த முழு நெல்லிக்காய் ஒன்று என தினமும் சாப்பிட்டு வந்தாலே நரம்பு பலகீனமாக இருப்பவர்கள் வலிமை அடைவார்கள். மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று மாத்திரையும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications